Latest News

May 14, 2016

முள்ளிவாய்க்காலில் வரலாற்று திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில், தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்! – வவுனியா பிரஜைகள் குழு
by admin - 0


இறுதி யுத்த கொலைக்களத்திலிருந்து வெளியேறிய படைத்துறை செயலகப்போராளிகள், மருத்துவர்கள் - மருத்துவத்துறை போராளிகள், தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தொண்டர்கள், ஊடகத்துறை போராளிகள் - பணியாளர்கள் தமக்கு அடையாளப்படுத்தியுள்ள முள்ளிவாய்க்காலில் வரலாற்றுத்திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில், 

வீழ்ந்த இடத்தில் வீரத்தின் துவக்கமாக எழுச்சி கொள்ளும் தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலாக, ‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல்’ நிகழ்ச்சியை மே 18 அன்று, உணர்வுபூர்வமாக ஒன்றுகூடி அனுஸ்டிக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிரமும் வருமாறு:


ஊடக அறிக்கை:
12.05.2016

முள்ளிவாய்க்காலில் வரலாற்று திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில், தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்!

சிறீலங்கா அரசின் மாபெரும் தமிழினப்படுகொலையை – மானுடப்பேரவலத்தை – மனித உரிமை மீறல்களைக்கண்டித்து, பெரும் மக்கள் கூட்டமாக ஒன்றுகூடி ‘நீதி கேட்கும் பொறிமுறை நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சி’க்கு மே 18 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் ஏற்பாடுகள் செய்துள்ளோம். 

வீழ்ந்த இடத்தில் வீரத்தின் துவக்கமாக எழுச்சி கொள்ளும் தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலாக, ‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல்’ நிகழ்ச்சியை இம்முறை மே 18 அன்று, 

இறுதி யுத்த கொலைக்களத்திலிருந்து வெளியேறிய படைத்துறை செயலகப்போராளிகள், மருத்துவர்கள் - மருத்துவத்துறை போராளிகள், தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தொண்டர்கள், ஊடகத்துறை போராளிகள் - பணியாளர்கள் எமக்கு அடையாளப்படுத்தியுள்ள முள்ளிவாய்க்காலில் வரலாற்றுத்திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில் உணர்வுபூர்வமாக ஒன்றுகூடி அனுஸ்டிப்பதாகவும் தீர்மானித்துள்ளோம். 

இன்றைக்கு காலச்சுழியில் அகப்பட்டு அவ்விடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினராகிய நாங்கள் உலகறிய கூறமுடியாது போகலாம். ஆயினும் அதைக்கூறக்கூடிய காலப்பெருஞ்சிறையை தமிழர் தேசம் நிச்சயம் உடைத்துப்பயணிக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எமக்கு மீதமாய் - மிச்சமாய் உள்ளது.

மண்ணுறங்கும் மாவீரம்

தமிழ் மக்களின் பாதுகாவலர்களும் - மீட்பர்களுமாகிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ‘ஈழத்தமிழர்களின் இருப்புக்கான போராட்டம், ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம், ஈழத்தமிழர்களின் இனவிடுதலைக்கான போராட்டம்’, மலைபோன்ற மக்கள் சக்தியால் மானசீகமாக பொத்திப்பொத்தி பெருநெருப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அதன் பல்வேறுபட்ட காலகட்டங்களிலும் வரலாற்றின் அத்தியாயங்களை அசைத்துப்பார்த்தே கடந்து வந்திருக்கிறது. 

இத்தகைய சர்வவல்லமை பொருந்திய மக்கள் போராட்டம், கூட்டுச்சதியாலும் - கூட்டுப்படைபல பிரயோகத்தாலும் முற்றுகை வலயத்துக்குள் முடக்கப்பட்டபோது, மயிர்க்கூச்செறியும் வீரம் செறிந்த பல கிளைக்கதைகளையும், உயிர் உருக்கும் பல சோகக்கதைகளையும் குறித்த இடம் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. கூடவே இங்கு ஒரு அசாத்திய மாவீரம் மண் உறங்கி கிடக்கின்றது. அதை நாங்கள் தட்டி எழுப்பி பெருமைப்படுத்த வேண்டும்.

நினைவுத்தூபி

வரலாற்று பெருமைமிக்க இவ்விடத்தில் தமிழ்த்தேசிய இனத்தின் கூட்டுக்காயங்களை - கூட்டு மனவலிகளை  ஒப்புவிப்பதோடு, கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து தமிழர் தேசம் மீண்டும் எழுச்சிகொள்ளும் நம்பிக்கை தரும் வகையிலான நினைவுத்தூபியை அமைக்க வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினராகிய நாங்கள் முன்னாயத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். 

வன்முறைகள் - படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை தமிழ் இனத்தின் (ஒவ்வொரு பிரஜையினதும்) தேசியக்கடமையாகக்கொண்டு, மே 18 புதன்கிழமை அன்று உணர்வுபூர்வமாக இந்த இடத்தில் ஒன்று கூடுங்கள். நிச்சயம் உங்கள் கால்களுக்கு கீழ் பூமி நழுவிச்செல்லும் உணர்வை நீங்கள் ஆத்மார்ந்தமாக பெறுவீர்கள். 

உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்,



« PREV
NEXT »

No comments