முயற்சி இருந்தால் இந்த உலகத்தைக்கூட வெற்றிகொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாணவர்கள் மத்தியில் தெரிவிப்பு.
வயாவிளான் மத்திய கல்லூரியின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் கல்லூரி அதிபர் வீ.ரி.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் தனது பிரதம விருந்தினர் உரையின்போதே மாணவர்கள் மத்தியில் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அவர் அங்கு மேலும் தனது உரையில், வயாவிளான் மத்திய கல்லூரியினுடைய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். மாணவர்களால் சாதிக்கமுடியாதது என்று எதுவுமில்லை. முயற்சியிருந்தால் இந்த உலகத்தையே வெற்றிகொள்ளலாம். சாதிக்கத்துணிந்த ஒவ்வொரு மனிதனும் அந்தச் சாதனையின் பின்னே உள்ள சவால்களையும் ஆபத்துக்களையும் அறிவுபூர்வமாக வெற்றிகொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
இன்றைய நவீன உலகில் பல கண்டுபிடிப்புக்கள் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றினைக் கண்டுபிடித்தவர்களிடத்திலே விடாமுயற்சியும் உழைப்பும் நிறைந்துள்ளது. எதிர்காலத்தில் நீங்களும் நீங்கள் விரும்பிய துறைகளில் சாதனையாளர்களாக மாறி வெற்றி பெறுவீர்கள். வயாவிளான் மத்திய கல்லூரியின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வானது கல்லூரி வரலாற்றிலே மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாகும். இக்கல்லூரியினுடைய ஒவ்வொரு விடயங்களும் இக்கல்லூரியின் www..Vayavilancc.org இணையத்தளத்தில் வெளிவரவுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா மற்றும் விசேட விருந்தினராக ம.ஜெயநாதன் உட்பட்டவர்களும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment