Latest News

April 28, 2016

காணிகளை அபகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுபப்பினர் சி.சிறீதரன் கடிதம்
by admin - 0

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதை கண்டித்தும் காணிகளை அபகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுபப்பினர் சி.சிறீதரன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தினால் பலர் தங்கள் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து ஏதிலிகளாய் இன்றும் முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கான மீள்குடியேற்றம் என்பது தங்களின் நல்லாட்சி அரசிலும் கூட நத்தை வேகத்தையும் விட குறைவான வேகத்திலேயே நடைபெறுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு தீவகத்தின் சில கிராமங்கள், வடமராட்சி கிழக்கு, கிளிநொச்சி மாவட்டத்தின்  பரவிப்பாஞ்சான், மருதநகர், இரணைதீவுக் கிராமங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராமம் இவ்வாறு வடக்கு கிழக்கு மக்களை வலுக்கட்டாயமாக இடம் பெயரச்செய்து விட்டு இன்று இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் இவ்விடங்களை வலுக்கட்டயமாகப் பிடித்து  வைத்துள்ளது. இதுவரை இக்காணிகளை காணிச் சொந்தக்காரர்களான தமிழ் மக்களிடம் ஒப்படைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையிலும் கூட தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு சென்று வாழ முடியாது அகதிகளாக இருக்கும் போதே அவர்களுக்குத் தெரியாமல் காணிகளை அளந்து இராணுவத்திற்கும், கடற்படைக்கும் வழங்கும் கைங்கரியங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

கடந்த அராஜக ஆட்சிக் காலத்தில்தான் காணி சுவீகரிப்புக்கென மாவட்ட ரீதியாக ஒவ்வொரு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு காணிச்சொந்தக்காரர்களான தமிழ் மக்களுக்கு தெரியாமல் அவர்களின் காணிகளை அளந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கும் காரியம் தொடர்கிறது. நான் இக்கடிதம் இன்று உங்களுக்கு எழுதும் இந்த  நேரம் கூட முல்லைத்தீவில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலத்தைப் பார்த்து கதறி அழ அழ இராணுவ, பொலிஸ் துணையோடு அளக்கப்படுகிறது. 

ஒரு ஜனாதிபதியால் கொண்டு வரப்பட்ட இச்சுவீகரிப்பு விடயத்தை இன்றைய ஜனாதிபதியாகிய தங்களால் தான் தடுக்கக்கூடிய அதிகாரம் உண்டு. 2016ம் ஆண்டு யூன் மாதம் முடிவதற்குள்  அனைத்துத் தமிழ்  மக்களையும் சொந்த இடங்களில் குடியமர்த்துவேன் என்று இவ்வருடத் தொடக்கத்தில் சபாதிப்பிள்ளை ஏதிலிகள் முகாமில் ஏழையின் குடிசையைப் பார்த்து கூறிய வார்த்தைகளை நடைமுறைக்குச் சாத்தியமானதாக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் காத்திருக்கும் போது இந்தக்காணி அளக்கும் நடவடிக்கைத் தங்களின் கூற்றின் மீது சந்தேகத்தை உருவாக்குவதாக தமிழ் மக்கள் கருதுகிறார்கள்.

இந்நாட்டில் நல்லாட்சி நிலவுவதாகவும் தமிழர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதாகவும் காட்டப்படுகிறதே தவிர இன்றும் தமிழர்;கள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் இன்னும் ஒரு தீவில் வாழும் உணர்வோடுதான் உள்ளனர்.
எனவே தயவுசெய்து இலங்கையில் கடவுளுக்கு அடுத்ததாக சர்வ வல்லமைகளைக் கொண்டிருக்கும் தாங்கள் இவ்வலுக்கட்டாய அளப்புக்களை நிறுத்தி எம்மக்கள் சொந்த இடங்களுக்குச் செல்லுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இhணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்றுள்ளது.
« PREV
NEXT »

No comments