Latest News

April 28, 2016

கைது செய்யப்பட்ட சிவகரன் விடுவிக்கப்பட்டார்
by admin - 0

பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்ட மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான எஸ்.சிவகரனிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார்.

விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் வௌிநாட்டு அமைப்புக்களின் உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், கடந்த சில தினங்களாக வடக்கு பிரதேசத்தில் சிலர் கைது செய்யப்பட்டதன் பிரதான காரணம், வௌிநாட்டு அமைப்பு உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருந்தமைகாகவே என பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

சிவகரன் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவார்! பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதியளிப்பு

தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

சிவகரனை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட வவுனியா சென்ற போதே இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மன்னாரில் அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு விசாரணைக்கென அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிவகரனின் தாய் சிவகரனை நேரில் சென்று பார்வையிட வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு நேரில் சென்றிருந்தனர்.

சிவகரனை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் சிவகரனின் தாய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை ,சிவகரனின் கைதுக்கான காரணம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரியிடம் கேட்டபோது அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், சிவகரனின் விடுதலை தொடர்பாக மேலும் கேட்டபோது இன்று சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி உறுதியளித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments