Latest News

April 29, 2016

ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் இத்தனை அரசியலா? அலங்காநல்லூரை அதிர வைத்த சீமான்
by admin - 0

மதுரை: ஜல்லிக்கட்டை நடத்த அக்கறை இல்லாத திமுகவும், அதிமுகவும், தேர்தல் வந்ததும் ஜல்லிக்கட்டு நடத்துவதாக வேஷம் போடுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். மேலும், ஜல்லிக்கட்டு தடை பின்னணியிலுள்ள அரசியலையும் அவர் முழுமையாக விளக்கினார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நாம் தமிழர் வேட்பாளர் சக்தியை ஆதரித்து, சீமான் இன்று மதியம், பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: காளைகளை வதைக்கிறோம் என்று ஜல்லிக்கட்டை மட்டும் ஏன் தடை விதிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில்தான் அரசியல் உள்ளது.

நாட்டு மாடுகள் 

1970களில் நம்மிடம் 7 கோடி நாட்டு மாடு இருந்தது. ஒரு வீட்டில் பால் மாடும், முருங்கை மரமும் இருந்தால் அந்த வீடு வறுமையை சந்திக்காது என்கிறார்கள். இந்த நாட்டு மாடு என்பது, காங்கேயம், கார்பர்க்கர், சாக்கிவால், சிவபசக்கி, உப்பளஞ்சேரி, பர்கூர் மலைமாடு, சிந்தி, ஓங்கோல், புளியங்குளம் பட்டி, தேனி மலை மாடு என பல வகை மாடுகள் நம்மிடம் இருந்தது.

ஜெர்சி மாடு 

இப்போது நம்மிடம் இருப்பது ஜெர்சி மட்டும்தான். வெண்மை புரட்சி என்று கூறி ஜெர்சியை நம்மிடம் கட்டிவிட்டார்கள். நமது நாட்டு மாடு அதிகம் தீனி வைத்தால் 3 லிட்டர் பால் கறக்கும். நம் தாய் பால் போல தூய்மையானது இது. ஆனால் ஜெர்சி 8 லிட்டர் கறக்கும் என ஆசை காட்டி நமது தலையில் அதை கட்டினர்.

நாட்டு மாடு 

வெண்மை புரட்சி என்ற பெயரில் நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை அழிக்க முடிவு செய்தனர். நாட்டு மாட்டில் ஆன்டிபயாட்டிக் என்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்த மாடு போடும் சாணம்தான் உரமாகிறது. இந்த நாட்டு மாடு இருக்கும்வரை இயற்கை வேளாண்மையை விட்டு விவசாயி வெளியேற மாட்டான்.

அணுகுண்டு போட்டனர் 

ஜப்பானில் போடப்பட்டதற்கு இணையான, அணுகுண்டு மூலப்பொருளில் இருந்துதான், பொட்டாசியம், சல்பேட் போன்ற உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்பட்டன. அதை விற்பனை செய்யும் சந்தை எது என பார்க்கிறார்கள்., உலகின் 2வது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா என்பதால், அதை நம் மக்கள் தலையில் கட்ட அனுப்பி வைத்தனர்.

நெல் வகை 

நம்மிடம் பாரம்பரிய பயிர்வகை இருந்தது. கருடஞ்சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட 136 வகை பயிர்கள் இருந்தன. இந்த நெல் மிக உயரமாக வளரும். 90 நாட்களுக்கு பிறகுதான் பலன் கொடுக்கும். எனவே அமெரிக்காவிலுள்ள ராக்பெல்லர் பவுண்டேசன் குள்ளமாக வளரும் பயிர்களை கண்டுபிடித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

குள்ள நெல்

 குள்ளமான நெல் 60 நாளில் விளைந்துவிடும், நிறைய மகசூல் தரும் என்றும் கூறினார்கள். வேளாண் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து விவசாயிகளிடம் இதுதான் நல்ல பயிர் என சொல்ல வைத்தனர்.

சாணம் போடுமா 

டிராக்டர்களை விற்பனை செய்ய வசதியாக பல்லாயிரக்கணக்கான காளை மாடுகளை வெட்டி கொன்றனர். டிராக்டர் கொண்டுவரப்பட்டது. தஞ்சையை சேர்ந்தவரான, மகாத்மா காந்தியின் உதவியாளர் குமாரப்பா "டிராக்டர் சாணி போடுமா" என்று அப்போதே ஒரு கேள்வியை கேட்டார். நம்மில் யாரும் கேட்கவில்லை. ஏனெனில், நாட்டு மாடு சாணத்தால்தான் பயிர்கள் வளரும். இப்போதுள்ள ஜெர்சி சாணத்தில் சத்து கிடையாது. அந்த சாணத்தை அடுத்த நாள் எடுத்து பார்த்தால் வண்டு, பூச்சி கூட உள்ளே இருக்காது. அத்தனையும் விஷம்.

இலவச அரசியல் 

மக்களிடம் பிரபலப்படுத்த வெளிநாட்டு நெல் விதையை முதலில் இலவசமாக கொடுத்தனர். எனவே, நாம் பாரம்பரிய நெல்லை சேமிக்காமல் விட்டுவிட்டோம். யூரியா உரத்தையும் இலவசமாக கொடுத்தனர். இதனால் மாட்டு சாணம், ஆட்டு புழுக்கையை உரமாக போடுவதை விட்டு, ரசாயன உரத்தை போட்டு, நிலத்தை பாழ் செய்துவிட்டோம். விவசாயியின் நண்பனான மண்புழுவும் இந்த ரசாயனத்தால்தான் செத்தது.

பூச்சி கொல்லி ஏன்? 

பூச்சி கொல்லி என்ற ஒன்று தேவையே இல்லை என்கிறார் நம்மாழ்வார். காடுகளில் உள்ள பனை மரங்களில் உள்ள வவ்வால்களே பூச்சிகளை கொன்று சாப்பிட்டுவிடும். எனவே பூச்சிக்கொல்லியே தேவையில்லை. டிராக்டர் வந்த பிறகுதான் அடிமாடாக காளை மாடு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜெர்சி மாட்டு பால்

 ஜெர்சி பாலால், செரிமான கோளாறு, சிறு வயதில் பெண்கள் பூப்படைதல், மார்பக புற்றுநோய், சர்க்கரை நோய் உருவாகுகிறது. சர்க்கரை நோயாளிகளால் நமது நாடு நிரம்பிவிட்டது. இதற்கான, இன்சுலின் ஊசியாலும் பல கோடியை அமெரிக்கா சம்பாதித்துவிட்டது.

காய்கறி வாங்குவதில்லை 

நமக்கு யார் பூச்சி மருந்தை சப்ளை செய்தார்களோ அதே வெள்ளையர்கள் இப்போது நமது காய்கறியில் விஷம் இருப்பதாக கூறி கொள்முதல் செய்வதில்லை. அவர்கள் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைதான் சாப்பிடுகிறார்கள். கேரளாகூட தமிழக காய்கறிகளை வாங்க மறுத்தது. இதுதான் அரசியல். இதை நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டும். இரட்டை இலையும், உதயசூரியனும்தான் அரசியல் என நாம் தப்பாக புரிந்து வைத்துள்ளோம்

யானை, குதிரை விலங்கில்லையா 

காளை வதை என்று கூறும் என்.ஜி.ஓக்கள், கேரளாவில் யானை அணி வகுப்புக்கும், ஹைதராபாத்தில் குதிரை பந்தையத்திற்கும், ராணுவத்தில் குதிரை, ஒட்டகம் பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில், காளை மாட்டை போல அவை விவசாயிகளுக்கு உதவுவதில்லை. எனவே அதை வதை என்று கூறி, தடை செய்ய என்.ஜி.ஓக்கள் முயலுவதில்லை. இதுதான் அரசியல்.

காங்கிரஸ்-திமுக 

மத்தியில் காங்கிரஸ்-திமுக ஆட்சி இருந்தபோது, மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் காளையை காட்சிபடுத்தும் விலங்கு பட்டியலில் கொண்டுவந்தார். யானை, சிங்கம், புலியைதான் சர்கசில் காட்சி படுத்துவார்கள். உலகில் எங்குமே காளைகளை சர்கசில் காட்சிபடுத்தியதில்லை. ஆனால், வம்படியாக காளையை காட்சிபடுத்துதல் பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது

கேள்வியே கேட்காத திமுக

 காளையை சர்கசில் பயன்படுத்த மாட்டார்களே, ஏன் காட்சிபடுத்துதல் பட்டியலில் சேர்க்கிறீர்கள், ஏன் அதை வன விலங்கு என பட்டியலில் சேர்க்கிறீர்கள் என்று கூட்டணியில் இருந்த திமுக கேட்கவேயில்லை. இதனால்தான் ஜல்லிக்கட்டு நடைபெற முடியாமல் போனது.

ஜெயலலிதாவின் கடிதம் 

அதிமுக பொறுத்தளவிலும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடாளுமன்றம் நடைபெறும்போது ஜல்லிக்கட்டு விவகாரத்தை பேசாமல், கூட்டம் முடியும் அன்றைய தினம் மதியத்திற்கு மேல் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

நாடகங்கள் 

இப்படி, இரு கட்சிகளுமே பெரும் நாடகத்தை நடத்திவிட்டு, ஓட்டு வேண்டும் என்பதற்காக, இப்போது ஜல்லிக்கட்டு விஷயத்தை பேசிக்கொண்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட முட்டாள் தனத்தில் இருந்து தமிழன் விடுதலை பெற வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.


« PREV
NEXT »

No comments