முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் அவலத்தை ஏற்படுத்த முயலும் சில ஊடகங்கள்- இராமநாதபுரம் அமைப்பாளர் கேதீஸ்வரன்.
இராமநாதபுரம் மாவடியம்மன் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் நேற்று முன்தினம் இராமநாதபுரம் சின்னச் சந்தையடி பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராமநாதபுரம் வலய அமைப்பாளர் கேதீஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தப் பிரதேசத்தினது அபிவிருத்தித் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடமும் மாகாணசபை உறுப்பினர்களிடமும் நாம் பலதடவைகள் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றோம். இப்பொழுது அத்தகைய தேவைகளின் வேலைகள் மெல்ல மெல்ல ஆரம்பித்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். எல்லாத் தேவைகளையும் ஓர் இரவில் நிறைவேற்றிவிட முடியாது என்பது எமக்குத் தெரியும்.
நல்லாட்சி குழப்பமடைந்திருப்பதாக சில ஊடகங்களினூடக அறிய முடிகின்றது. உண்மையில் நிலையான அபிவிருத்தி நடைபெற வேண்டுமானால் அரசியல் உறுதிப்பாடும் சமூக அமைதியும் அவசியமானது. அதனைக் குழப்புவதற்கு இனவாத சக்திகளும் ஒரு சில ஊடகங்களும் முனைவதாகத் தெரிகின்றது. எம்மைப் போன்ற போராளிகள் பலர் புனர்வாழ்வு பெற்று வந்து அமைதியாகத் தமது குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் வேலை வாய்ப்புக்களற்று வறுமையோடு சீவியத்தை நடத்துகின்றார்கள். போரிட்ட இராணுவத் தரப்புக்கு அள்ளிக் கொடுத்த அரசாங்கம் எங்களுடைய சகோதரர்களுக்குக் கிள்ளியும் கொடுக்கவில்லை என்பதே அவர்களின் வறுமைக்குக் காரணம். உலகெங்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வியல் மேம்பாட்டிற்கென வாங்கிய பணத்தைத் திருடர் கூட்டம் திண்டுவிட்டது. முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள்கூட வழங்கப்படுவதில்லை. வீட்டுத்திட்டம், சமுர்த்தி நிவாரணங்கள்கூட பலருக்கு வழங்கப்படுவதில்லை. அத்தகைய போராளிகளை சில ஊடகங்கள் அழைத்து நீங்கள் எத்தனை பேரைச் சுட்டீர்கள்? என்ன ஆயுதம் வைத்துச் சண்டைபிடித்தீர்கள்? விமானத்தை வீழ்த்தினீர்களா? தலைவரைப் பார்த்தீர்களா? எங்கே பார்த்தீர்கள், எத்தனை தரம் பார்த்தீர்கள்? எத்தனை சண்டை பிடித்துள்ளீர்கள்? அதில் எத்தனை இராணுவம் கொல்லப்பட்டது? என்னும் புலனாய்வு நோக்குடனான கேள்விகளைக் கேட்டு போராளிகளை மீண்டும் அவலத்தில் தள்ள முயற்சிக்கின்றார்கள்.
சிறைகளில் வாடி விடுதலையாகி தமது குடும்பங்களோடு இயல்பு வாழ்க்கைக்கு மெல்லத் திரும்ப முயற்சிப்பவர்களை ஆசைகாட்டி மோசம் செய்கின்ற செயல்களில் சில ஊடகங்கள் ஈடுபட்டுவருவது வேதனையளிக்கின்றது. என்றார்.
இக்கலந்துரையாடலில் போக்கு வரத்து, வீதி புனரமைப்ப, வடிகாலமைப்பு, பாடசாலைத் தேவைகள், மின்சார விநியோகம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment