Latest News

April 29, 2016

தற்கொலை அங்கி விவகாரத்திலேயே ராம், நகுலன் உள்ளிட்ட தளபதிகள் கைது
by admin - 0

சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவகாரம் குறித்த விசாரணைகளுக்காகவே ராம் உள்ளிட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராச்சி தெரிவித்தார்.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் திடீரென தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதற்கான காரணம் தெளிவற்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில் தேசிய பாதுகாப்பு விவகாரத்துடன் தொடர்புடைய காரணங்களுக்காகவா முன்னாள் புலித் தலைமைகள் மீளவும் கைது செய்யப்படுகிறார்கள் என பாதுகாப்பு செயலாளர்கருணாசேன ஹெட்டி ஆராச்சியை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உண்மையில் அவர்களின் கைது எனது விடயப் பரப்புக்கு அப்பாற்பட்டது. அவர்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரே கைது செய்துள்ளனர். எனக்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமையமுன்னாள் புலித் தலைவர்களின் கைது சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவானதாகும்.

அது குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடமே மேலதிக தகவல்களைக் கேட்க வேண்டும். என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராச்சி குறிப்பிட்டார்.

அப்படியாயின், கைது செய்யப்பட்டுள்ள புலித் தலைவர்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதற்கு அதுவும் காரணமா? என பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெட்டி ஆராச்சியை வினவியபோது .இதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலர் கருணாசேனஹெட்டி ஆராச்சி, ' அது குறித்து இப்போதைக்கு என்னால் கருத்துக் கூற முடியாது என்று குறிப்பிட்டார்.

பயங்கரவாத புலனயவுப் பிரிவு அது குறித்து விசாரணை செய்கிறது. அவர்களின் விசாரணையின் பின்னர் எமக்கு அளிக்கப்படும் அறிக்கையின் பிரகாரமே அது குறித்த முடிவுக்கு எம்மால் வர முடியும். அப்போதே புலிகள் மீள தலை தூக்க முயற்சிக்கின்றனரா என்பதை சரியாக கூற முடியும். அதனால் இப்போதைக்கு அந்த கேள்விக்கு விடையளிப்பது கடினம்' என்றும் பாதுகாப்பு செயலர் கூறினார்.

சாவகச்சேரி மறவன்புலோ பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கடந்த மார்ச் மாதம் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி உட்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் பிரதான சந்தேக நபரான எட்வர்ட் ஜூலியஸ் எனப்படும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்ப்ட்டார்.

இதனைத் தொடர்ந்து அது குறித்து முன்னெடுக்கப்பட்டுள்ள ஆழமான விசாரணைகளில் இது வரை மொத்தமாக 12 பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் தொலைபேசி வலையமைப்பை வைத்து நடத்திய விசாரணைகளில் அவர்கள் ஒரு வலையமைப்பாக செயற்பட்டார்களா என்ற சந்தெகம் எழுந்துள்ள நிலையிலேயே ஆழமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அதன்படியே விடுதலைப் புலிகள் அமைப்பில், முன்னர் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக இருந்த ராம் எனப்படும் எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன், சார்ள்ஸ் அன்டனி படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கணபதிபிள்ளை சிவமூர்த்தி எனப்படும் நகுலன் மற்றும் திருமலைக்கு பொறுப்பாக இருந்த புலனாய்வுத் தளபதியான கலையரசன் எனப்படும் அறிவழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
« PREV
NEXT »

No comments