யுத்தகாலப்பகுதியில் காணி உட்பட அசையாத சொத்துக்களை இழந்தவர்கள், அவற்றுக்கான உரிமைகளை மீளப்பெற முடியாமல்போனவர்கள் அச்சொத்துக்களின் உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான வழக்கைத் தாக்கல் செய்வதற்கான அனுமதியை ஏற்படுத்தி விசேட ஏற்பாடுகளடங்கிய ஆட்சியுரிமை சட்டமூலம் நேற்றுப் புதன்கிழமை சபையில் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின் பிரகாரம், 1983 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் யுத்தம் நிறைவடைந்த தினமான 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் தமது காணிகளின் உரிமையை அனுபவிக்க முடியாது அவற்றின் உரிமத்தை இழந்தவர்கள் தங்களுக்குரிய உரிமத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாட முடியும்.
அத்துடன் இச்சட்டத்தின் ஏற்பாடுகளினால் வழங்கப்பட்டுள்ள நன்மைகளை இரு வருட காலப்பகுதிக்குள் பயன்படுத்தும் வகையில் அந்த வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அச் சட்டமூலத்தில் விதந்துரைக்கப்பட்டும் உள்ளது.
இலங்கை நாட்டினுள் ஆயுதந்தாங்கிய பயங்கரவாத குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் தமது உரிமைகளை நிலை நாட்டுவதற்கு அல்லது தம்மைப் பாதுகாத்து கொள்வதற்கு இயலாதிருக்கின்ற ஆட்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசேடசட்ட ஏற்பாடுகள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதற்கு இடைநேர்விளைவான கருமங்கள் ஆகியவற்றை இயலச் செய்வதற்குமானதொரு சட்டமே இதுவென இந்த சட்டமூலத்திற்கான முகப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட ஏற்பாடுகள் அடங்கிய ஆட்சியுரிமை சட்டமூலத்தை நேற்று புதன் கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உரையாற்றுகையில்,
ரோமன்-டச்சு சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே இவ்வளவு காலமும் ஆட்சியுரிமை சட்டம் இருந்தது. அதன் ஏற்பாடுகளின் பிரகாரம், யாதேனும் ஒருவருக்கு உரித்தான அசையும் அல்லது அசையா சொத்துக்கள் பத்து வருடங்களுக்கு மேலாக வேறொருவரினால் அனுபவிக்கப்பட்டிருப்பின், அந்த அனுபவிப்பின் பேரில் சம்பந்தப்பட்ட சொத்தின் உரிமம் பத்து வருடங்களுக்கு மேலாக அதை அனுபவித்தவருக்கே உரியதாகிவிடுகின்றது.
இந்த சட்டத்தில் பாரிய குறைபாடுகள் இல்லாவிட்டாலும் கூட நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய மோதல் நிலைமைகள் காரணமாக ஒரு பகுதி மக்களுக்கு இந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது.
நாட்டில் நிலவிய மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தின் காரணமாக நபர் ஒருவர் தமது சொத்தின் உரிமத்தை மீட்டுக் கொள்வதற்கான கால அவகாசம் பத்து வருடங்கள் என்பது குறுகிய காலப்பகுதியாகவே அமைந்திருக்கின்றது.
அந்த வகையில், 1983ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் யாதேனும் நபரொருவரினால் தமது சொத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவோ அல்லது அனுபவிக்க முடியாமல் போயிருந்தாலோ அல்லது நீதிமன்றத்தை நாடி தமது காணி உரிமத்தை மீள பெற முடியாமல் போயிருந்தாலோ அது இந்த நாட்டில் நிலவிய மோதல்களினால் அந்நபருக்கு இழைப்பட்ட அநீதியாகவே அமைந்திருக்கும்.
இவ்வாறான நிலைமைகளினால் வடக்கு, கிழக்கு மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதில் நடைமுறைச்சிக்கல் நிலவுவதால் அவ்வாறான காணிகளின் உரிமத்தை அவற்றின் உரிமையாளர்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கு இச்சட்டமூலத்தின் ஊடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன எனச் சுட்டிக்காட்டினார்.
விதைந்துரைப்புக்கள்
இச்சட்ட மூலத்தில், இலங்கையில் ஆயுதந்தாங்கிய பயங்கரவாத குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அல்லது தம்மைப் பாதுகாத்து கொள்வதற்கு இயலாதிருக்கின்ற ஆட்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசேட சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதற்கு இடைநேர்விளைவான கருமங்கள் ஆகியவற்றை இயலச் செய்வதற்குமாதொரு சட்டமே இதுவாகும்.
ஏதேனும் ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுவொன்றின் செயற்பாடுகள் என்பது, 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டத்தில், பயங்கரவாதச் செயல் ஒன்றாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள ஏதேனும் செயல் எனப் பொருளாகும் என்றும் சட்டமூலத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணி உட்பட ஏதேனும் அசைவற்ற சொத்தை மீளப் பெறுவதற்காக தம்முடைய உரிமைகளைத் தொடர்வதற்கு இயலாதவராக இருந்தவரான அனுகூலம் குறைந்த நபரொருவர் இச் சட்டம் நடைமுறைக்கு வந்ததற்குப் பின்னர் ஒரு வருடத்திற்குள் இச் சட்டத்தினால் அளிக்கப்பட்ட நன்மைகளைப் பயன்படுத்துவதற்கு அவர் வழக்கொன்றை தொடுப்பதற்கு உரித்துடையராதல் வேண்டும்.
அனுகூலம் குறைந்த நபர் என்பது 1983ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியன்று தொடங்கி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியில் முடிவடைந்த காலப்பகுதியின் போது ஏதேனும் ஆயுதந்தாங்கிய பயங்கரவாத குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக நிலவிய சூழ்நிலைகளின் விளைவாக எந்த நபர், அவருடைய உரிமைகளை எந்த நீதிமன்றத்தில் தொடர்வதற்கு அவர் சட்டத்தினால் தேவைப்படுத்தப் பட்டிருந்தாரோ அந்த நீதிமன்றம் ஒன்றில் தமது உரிமைகளைத் தொடருவதற்கு இயலாதவராக இருந்தவரான நபர் ஒருவாராவார் என்று பொருள்படுமென விதைந்துரைக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment