வடக்கில் திட்டமிட்ட வகையில் புலிகளின் ஆதிக் கம் தலைதூக்கி வருகின்றது. அவ்வாறான நிலையில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் மிகவும் மோசமாக செயற்படுவதாக பொது எதிரணி குற்றம் சாட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட இராணுவத்தினரை நீக்கிவிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் திட்டமிட்டு விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் மூலமாக மஹிந்த ராஜபக் ஷவை கொலைசெய்ய திட்டம் தீட்டியுள்ளனர் எனவும் பொது எதிரணியினர் குற்றம்சுமத்தினர்.
பொது எதிரணியினரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவ்வணியினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவிக்கையில்,
மீண்டும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூகியுள்ளதாக புலனாய்வு பிரிவு மூலம் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. வடக்கில் நடைபெற்றுவரும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான செயற்பாடுகள் அரசாங்கதிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஆனால் அரசாங்கம் இந்த சம்பவங்கள் தொடர்பில் சிறிதளவேனும் கவனம் செலுத்தாது தேசிய பாதுகாப்பு விடயத்தில் அக்கறையின்றிய வகையில் தான் செயற்படுகின்றது. வடக்கில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. புலிகளின் முக்கிய நபர்களின் செயற்பாடுகள் மீண்டும் வடக்கில் இடம்பெற்றுவதாக கூறப்படுகின்றது.
அவ்வாறு இருக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்ட இராணுவத்தினரை மே மாதத்தில் இருந்து முழுமையாக நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் ஜனாதிபதியும், பிரதமரும் தான் நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் தீர்மானம் எடுக்கின்றனர். ஆகவே ஜனாதிபதியும் பிரதமரும் திட்டமிட்டு விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் மூலமாக மஹிந்த ராஜபக் ஷவை கொலைசெய்ய திட்டம் தீட்டியுள்ளனர் என்பது தெளிவாக எமக்கு தெரிகின்றது.
அதனால்தான் அவருக்கான இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்கப்பார்க்கின்றனர். இராணுவத்தால் மட்டுமே சரியான பாதுகாப்பை அவருக்கு வழங்க முடியும். அவ்வாறு இருக்கையில் அவர்களை நீக்கிவிட்டு சாதாராண பாதுகாப்பை மாத்திரம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆகவே இவர்கள் மஹிந்த ராஜபக் ஷவை பாதுகாப்பதற்கு பதிலாக அவரை புலிகளின் மூலமாக கொலைசெய்து புலிகளின் பழிதீர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவே முயற்சிக்கின்றனர். நாம் யாரும் எந்த கட்சியாக இருந்தாலும், எவ்வாறான கொள்கையில் இருந்தாலும் நாட்டில் நிலவிய கொடூரமான யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த தலைவரான மஹிந்த ராஜபக் ஷவை காப்பாற்ற வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.
அவ்வாறு இருக்கையில் அவரை கொன்று பழிதீர்க்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றால் அதை எவ்வாறு நாம் வேடிக்கை பார்துகொண்டிருப்பது. ஆகவே மக்கள் இந்த செயற்பாடுகளை கண்டித்து எம்முடன் கைகோர்த்து போராட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் எப்போதும் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும். அண்மையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் பெல்ஜியம் பிறேசில்ஸ் நகரில் நடந்த குண்டுத்தாக்குதலில் பின்னணி சாதாரண ஒன்றல்ல. இந்த தாக்குதலின் பின்னர் அந்த நாட்டின் பாதுகாப்பு மிகவும் பலமானதாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் அவ்வாறு அல்ல. இலங்கையில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அனைத்துமே தலைகீழாக மாறியுள்ளது.
சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டு அங்கி கண்டெடுக்கப்பட்டது. இந்த விடயம் சாதாராண ஒன்றாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் வடமாகாண ஆளுநர் வேறு விதமாக கருத்துகளை முன்வைத்துள்ளார். இன்று தேசிய பாதுகாப்பில் அரசாங்கத்தில் மாற்றுக் கருத்துகள் பல உள்ளன. அதேபோல் இந்த விடயம் தொடர்பில் எனக்கு கிடைத்த தகவல்களை நான் வெளிப்படுத்தினேன். அப்போது என்னை குற்றப் புலனாய்வு பிரிவில் வைத்து விசாரணை செய்தனர். மறுபுறம் இந்த சம்பவம் புலிகளுடன் தொடர்புபட்ட ஒன்றல்ல என சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஆனால் அவர் மீது எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இன்று தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் மிகவும் மோசமான வகையில் செயற்பட்டு வருகின்றது. பாதுகாப்பு செயலாளர் ஒரு நிலைபாட்டிலும், அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டிலும், வடமாகாண ஆளுநர் வேறு ஒரு நிலைபாட்டிலும் உள்ளனர். அவ்வாறு இருக்கையில் இந்த சம்பவத்தின் பின்னணியை எவ்வாறு கண்டறிய முடியும். இந்த சம்பவத்தின் பின்னணியை அரசாங்கம் ஒருபோதும் கண்டறியாது என எமக்கு நன்றாகவே விளங்குகின்றது.
இவ்வாறு நாட்டில் மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பை குறைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு மோசமான சம்பவங்கள் நடைபெறும் நிலையில் எமது தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
No comments
Post a Comment