வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வடக்கில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளை ஆக்கிரமிக்கும் ஆதிக்கத்தை ஆட்சியுரிமைச் சட்டமூலம் ஏற்படுத்தும் என நேற்று சபையில் எச்சரிக்கை விடுத்த ஐ.ம.சு. ம.வின் எம்.பி. நாமல் ராஜபக்ஷ, வடக்கில் 65,000 வீடுகளை அமைத்துக் கொடுப்பதாக எப்போதோ இந்தியா உறுதியளித்தது. அதனை இன்றாவது நிறைவேற்ற முயற்சிப்பதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகளை) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக் ஷ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
முப்பது வருட பயங்கரவாத யுத்தத்தால் இடம்பெயர்ந்து நெருக்கடிகளை சந்தித்த தமிழ் மக்கள் இன்று வடக்கில் கைவிடப்பட்ட வீடுகள் காணிகளில் குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நீதியமைச்சர் கொண்டுவந்துள்ள ஆட்சியுரிமை சட்ட மூலத்தினால் யுத்தத்திற்கு அஞ்சி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் செல்வந்தர்களான தமிழர்கள் மீண்டும் இங்கு வந்து இம் மக்கள் வாழும் வீடுகளின் ஆரம்பகால உரிமையாளர்கள் தாம் என்பதை வெளிப்படுத்தி நீதிமன்றம் சென்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பல வருட காலம் வாழும் குடும்பங்களை வெளியேற்றும் நிலை உருவாகும்.
அம் மக்கள் மீண்டும் நடுவீதிக்கு தள்ளப்படுவார்கள் இடம்பெயர்ந்தவர்களாவார்கள் இது அநீதியாகும். அதேபோன்று இங்கிலாந்தில் 3 இலட்சத்திற்கும் மேல் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள், செல்வந்தர்கள் வாழ்கின்றனர்.
இதேபோன்று கனடா உட்பட பல நாடுகளில் மில்லியன் கணக்கில் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
எனவே இவர்கள் இங்கு வந்து வடக்கில் ஏக்கர் கணக்கில் காணிகளை பணம் கொடுத்து கொள்வனவு செய்யும் ஆக்கிரமிக்கும் நிலை உருவாகும்.
அத்தோடு வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் சிங்களவர்களின் காணி களையும் மீளக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக் ஷ. எம்.பி. தெரிவித்தார்.
No comments
Post a Comment