வரிச்சலுகை மூலம் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசு இன்று ஊடகவியலாளர்களை கடனாளியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் சிவலிங்கம் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெலிமடை ஹப்புத்தளை வீதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்,
கடந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் மற்றும் கணினி உள்ளிட்ட ஊடக கருவிகளை கொள்வனவு செய்யவென ஒரு இலட்சம் ரூபாவினை இலகு கடனாகவும் அதன் வட்டியினை வங்கிக்கும் செலுத்தி தவிரவும் இருபது வருடங்களுக்கு ் ஊடகப் பணியாற்றுபவர்களுக்கு மோட்டார் கார் கொள்வனவுக்கு இலகு கடனுதவி திட்டத்தையும் அறிமுகம் செய்தது. இதனை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. கடந்த பொதுத் தேர்தலின் போது மஹிந்த ராஜபக் ஷவினது ஐ.ம.சு.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஊடகவியலாளர்களின் போக்குவரத்தை இலகுபடுத்தவும் அவர்களின் வாழ்வாதாரத்தினை உயரத்தவுமென ரூபா பதினைந்து இலட்சம் வரையிலான வரிசலுகை வழங்க முன்வந்தமை ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நடவடிக்கையாகும்.
எனவே, ஐக்கிய தேசிய முன்னணி அரசு தேர்தல் காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு வரிச்சலுகை மூலம் மோட்டார் சைக்கிள் வழங்குவதாக வாக்குறுதியளித்துவிட்டு இன்று அவர்களை வங்கிக் கடனாளியாக்கும் வகையில் செயற்பட்டு வருவது மனவேதனையளிக்கிறது. எனவே ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் முக்கிய தேவையாகும் என்றார்.
No comments
Post a Comment