Latest News

April 24, 2016

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மின்சாரம் வழங்குமாறு சிறீதரன் எம்.பி மின்சக்தி அமைச்சரிடம் கோரிக்கை.
by admin - 0

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலத்தில் வடக்கின் வசந்தம் இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தின் மூலம்  பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படதமையால் தற்போதும் மின் இனைப்பைப் பெற முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இருண்ட வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி இக்குடும்பங்களுக்கும் இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் மன்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபப்பிட்டியாவுக்கு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் இலவச மின்சார இணைப்பானது அரசியல் தலையீடுகள் அதிகாரத்துஸ்பிரயோகங்களால் பல்வேறுபட்ட முறைகேடுகள் இடம்பெற்றதனை பாதிக்கப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியவர்களில் 21,165 குடும்பங்களுக்கு இன்னமும் மின்னிணைப்பு வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
இவற்றைச் சுட்டிக்காட்டி மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களும் மின்னிபை;பைப்பெற மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மின்வலுத்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில், 

'கிளிநொச்சி மாவட்டத்தின் மக்களிடையே பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறி இருக்கின்ற இலவச மின்விநியோகம்  தொடர்பாகத் தங்களின் உயர்வான, மனிதாபிமான, ரீதியான நடவடிக்கையை  எதிர்பார்த்து இக்கடிதத்தை எழுதுகிறேன். 

யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற காலப்பகுதியில் அழிவுக்குள்ளான வாழ்வியலை மீளக்கட்டி எழுப்புகின்ற பணியாக சர்வதேச உதவியோடு வடக்கின் வசந்தம் திட்டம் நடைமுறை செய்யப்பட்டிருந்தது.  இத்திட்டத்தின் ஊடான இலவச இணைப்பு என்பது சலுகை என்பதற்கு அப்பால் யுத்தத்தால் அழிவுக்குள்ளான மக்களின் மீள்குடியேற்ற உரிமையாவே கருத வேண்டும். ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் வடக்கின் வசந்தத்தை நடை முறைப்படுத்துவதில் அதிகளவு அரசியல் தலையீடு, அதிகாரச் செல்வாக்கு  ஆகியன பிரயோகப்படுத்தப்பட்டதால் மிக வறிய குடும்பங்களையும் தொலைதூரக் கிராமங்களையும் புறக்கணிக்கும் நிலை காணப்பட்டது என்பதைத் தங்களின் விசேட கவனத்திற்கு தருகிறேன்.

கிளிநொச்சி மாவட்டத்தின் 42,872 குடும்பங்கள் மீள்குடியேறியிருக்கின்றனர்.  இவர்களில் 21,707 பேருக்கு மாத்திரமே வடக்கின் வசந்தத்தின் மூலம் இலசவஇணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏனையோருக்கு வடக்கின் வசந்தம் திட்டம் செயல் இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 21,165 குடும்பங்கள் இலவச மின் இணைப்புப்பெறும்  மீள்குடியேற்ற உரிமையை இழந்துள்ளதுள்ளனர். இலவச மின்னிணைப்பைப் பெற்ற பலர் பொருளாதார ரீதியில் சற்று முன்னேற்றம் அடைந்தவர்களும், சமூக மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுமாக உள்ளனர். ஆனால் மிக வறிய குடும்பங்கள் மாவட்டத்தின் தொலை தூரத்தில் உள்ள குக்கிராமங்களில் வாழுகின்ற வறிய மக்கள் அரசியல் ரீதியான பாகுபாட்டுக்கு உட்பட்டோர் இவ்விணைப்பைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மின்சார இணைப்பைப் பெறுவதற்கு கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் பயனாளிகள் மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக  இருப்பதனால் எதிர்காலத்த்ல் மின்சாரக் கட்டணத்தையும், கடன் பணத்தையும் இணைத்துச் செலுத்த முடியாதவர்களாகவும் அவ்வாறு செலுத்த முடியாத நெருக்கடி ஏற்படும் போது மின்னிணைப்பு துண்டிக்கப்படக்கூடிய அவல நிலையும் ஏற்படும் சூழ்நிலையுள்ளது. மேலதிகமாக மக்களிடையே ஏற்படுத்தப்படுகின்ற இவ்வேறுபாடான நிலைமைகள் முரண்பாடுகளையும்  சமனற்ற  வாய்ப்பையும்  நீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே இது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து எமது மக்களின் வறியநிலை, யுத்தத்தால் ஏற்பட்ட  அழிவுகள் அரச மானியத்திட்டத்தில்  ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை  என்பவற்றைக் கருத்தில் கொண்டு மீள்குடியேறிய அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவச மின்னிணைப்பு பெறுவதற்கான வாய்ப்பினை உருவாக்க வேண்டுமென  பணிவுடன்  கேட்டுக்கொள்கிறேன்.' என்றுள்ளது.

அக்கடிதத்தின் பிரதிகள், மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர்  அஜித் பி.பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா,   கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண D.G.M.. பிரியந்த குணதிலக மற்றும் கிளிநொச்சி மாவட்ட மின்சார எந்திரவியலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments