Latest News

April 24, 2016

மலையக மக்களை அவமானப்படுத்திய யாழ்ப்பாணப் பல்கலைக்களகத்தின் ஏகாதிபத்தியம்
by admin - 0

மலையகத்தின் மூத்த இடதுசாரி எழுத்தாளர் மு.சி.கந்தையா எழுதிய 'சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்' எனும் நூலின் அறிமுகத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகமண்டபத்தில் கடந்த சித்திரை 18ம் திகதி மாலை 3மணிக்கு நடைபெற ஏற்படாகியிருந்தது.

மலையக சமூக ஆய்வு மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அரசறிவியல்த்துறை தலைவர் கே.ரி.கணேசலிங்கத்தினூடாகவே இவை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மலையக சமூக ஆய்வுமையத்திற்கும் ரூபவ் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்திற்குமிடையே இணைப்பாளராக அரசியல் ஆய்வாளரும் யாழ்ப்பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் பழைய மாணவருமான சி.அ.யோதிலிங்கம் தொழிற்பட்டிருந்தார்.

துண்டுப்பிரசுரங்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன. யாழ்பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள் உட்பட பல விரிவுரையாளர்கள் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு சம்மதித்திருந்தனர்.

பேராசிரியர் வி.சிவநாதன் பிரதம அதிதியாகவும் அரசியல்துறைத் தலைவர் கே.ரி. கணேசலிங்கம் நூல் ஆய்வுரை நிகழ்த்துபவராகவும் பங்கேற்கவிருந்தனர்.

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் அறிமுகவுரையையும் மலையக சமூக ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆசிரியர் இந்திரச்செல்வன், ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரை நிகழ்த்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தலைமையுரை வரவேற்புரை, நன்றியுரை என்பன அரசறிவியல் ஒன்றிய மாணவர்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தன.

யாழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை இணைப்பாளர் ப.புஸ்பரத்தினம் முதற்பிரதியை பெற்றுக் கொள்ளவிருந்தார்.

அரசறிவியல் துறையூடாக நூலக மண்டபத்தின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது.

அறிமுக நிகழ்வு நடைபெறவிருந்த 18ம் திகதி காலை திடீரென நூலக மண்டபம் மறுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நிகழும் அரசியல் போட்டியே இதற்கு காரணம். ஆனால் முறையான அனுமதி பெறப்படவில்லை எனக் காரணம் கூறப்பட்டது.

ஏற்பாட்டாளர்கள் அரசறிவியல்துறை விரிவுரை மண்டபத்தில் நிகழ்வை நடாத்த முடிவு செய்தனர். திடீரென 11 மணியளவில் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழத்தில் நிகழ்வை நடாத்த முடியாது என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்தார்.

அரசியல்வாதிகள் கலந்து கொள்கின்றனர் என்றும் முறையான அனுமதி பெறப்படவில்லை என்றும் காரணம் கூறப்பட்டது.

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கத்தலைவர் இன்பநாயகம், அருட்தந்தை ரவிச்சந்திரன் ஆகியோரின் பெயர்களையும் துணைவேந்தர் துண்டுப்பிரசுரத்தில் அரசியல்வாதிகளாக வட்டமிட்டிருந்தார்.

உண்மையில் அனந்தி எழிலன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் ஆகியோரின் பெயர்கள் சிறப்புப் பிரதிகள் பெறுபவர் பட்டியலிலேயே சேர்க்கப்பட்டிருந்தன.

உரையாற்றுவதற்கு அவர்கள் எவருக்கும் இடம் வழங்கப்படவில்லை.

அரசியல்வாதிகள் நிகழ்வுக்கு வருவதை நிறுத்தி விடுகின்றோம் தயவு செய்து நிகழ்வு நடாத்த இடம் தாருங்கள் என அரசறிவியல் தலைவர் ஊடாக கேட்ட போதும் சம்மதிக்கவில்லை.

இது மலையக மக்கள் பற்றிய விவகாரம் நிகழ்வு நடாத்தப்படாவிட்டால் மலையக மக்கள், பல்கலைக்கழக சமூகம் பற்றியும் யாழ்ப்பாணமக்கள் பற்றியும் தப்பபிப்பிராயம் கொள்ள முற்படுவர் எனக் கூறப்பட்டபோதும் துணைவேந்தர் அதனைக் கணக்கெடுக்கவில்லை.

பல்கலைக்கழகம் என்பது ஒரு சமூகத்தின் அறிவுச் சொத்து. பல்வேறு ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் சமூக இணைப்புகளுக்கும் இடம் தர வேண்டிய பொறுப்பு அதற்கு உள்ளது. துணைவேந்தர் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தை ஒரு சாதாரண பாடசாலையாக தரமிறக்கியிருந்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் பலரும் அதற்கு துணைபோனமை மிகவும் கவலைக்குரிய விடயம். நூலாசிரியர் மு.கந்தையா இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்தார். உரையாற்ற விசா அனுமதி இல்லாததினால் ஒரு பார்வையாளராகவே கலந்து கொள்ளவிருந்தார்.

இவர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு மூத்த போராளி. தொடர்ந்து மலையக தேசியத்தை முதன்முதலில் வலியுறுத்திய மலையக மக்கள் இயக்கத்திலும் ஒரு செயற்பாட்டாளராக பணியாற்றியவர். சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்திருந்தார்.

பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நூலாக மண்டபம் கிடைக்காது என்பதை உறுதிப்படுத்தியதுடன் ஏற்பாட்டாளர்கள் வேறு மண்டபங்களை தேடினார்கள். உடனடியானவே அருட்தந்தை ரவிச்சந்திரன் யாழ்மறைக்கல்வி நிலையத்தில் நிகழ்வை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

தொலைபேசி மூலமாக விழாவிற்கு வருகை தர இருந்தவர்கள் மறைக்கல்வி நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஒரு மணி நேரத் தாமதத்துடன் அறிமுகநிகழ்வு மாலை 4 மணிக்கு அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தலைமையில் ஆரம்பமாகியது.

பல்கலைக்கழத்திலிருந்து பேராசிரியர் சிவநாதன், பேராசிரியர் கிருஸ்ணராஜா, பேராசிரியர் புஷ்பரட்ணம், கலாநிதி சிதம்பரநாதன், கலாநிதி கே.ரி.கணேசலிங்கம், விரிவுரையாளர் சிவகரன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரதிகள் வாங்குதவற்கு சம்மதமளித்த ஏனைய விரிவுரையாளர்கள் நிகழ்விற்கு வருகை தரவில்லை. பேராசிரியர் புஷ்பரட்ணம் 'நீங்கள் எங்கே நிகழ்வை நடாத்தினாலும் அங்கே வருவேன்' என நேர்மையாக கூறினார்.

நிகழ்வு சிறப்பாக யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் மண்டபத்திற்கான அனுமதி முறையான ஒழுங்கில் பெற்றிருக்கவில்லை எனக் கருதியிருந்தால் ஏற்பாட்டாளர்களை அதற்கெனக் கண்டித்து விட்டு நிகழ்வை நடாத்த அனுமதித்திருக்கலாம். அது அவரது பெருந்தன்மையாக இருந்திருக்கும். மலையக மக்களும் மகிழ்ந்திருப்பர். ஏனோ அவர் அதற்கு இணங்கவில்லை.

யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் தானாகவே ஒரு பெரும் கரும்புள்ளியை அவர் குத்தியிருக்கிறார். யாழ்பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த மிலேச்சத்தனமான போக்கினை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் கண்டிக்க முன்வர வேண்டும்.

நாங்களும் தமிழர்கள்தான்.
« PREV
NEXT »

No comments