Latest News

April 04, 2016

பொருத்து வீடுகள் வடபகுதி மக்களுக்குப் பொருத்தமற்றது. வீட்டில் வாழ்பவர்கள் மக்களா அரசியல்வாதிகளா??? வீடு கட்டி வாழ்வதிலும் மக்களுக்குச் சுதந்திரமில்லையோ???
by admin - 0

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் ஆட்சியாளர்கள், அவர்களது பங்காளிகளது புறக்கணிப்புக்கள், பாகுபாடுகள், சுயநல நோக்கங்கள், செயல் திறன் இன்மைகள், மக்களை ஏமற்றிப் பிழைத்தல் போன்றவற்றால் தற்போதும் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காகவென வெளிநாட்டு அரசாங்கங்கள் வழங்கிய வீட்டுத்திட்டங்களைக்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் குழப்பங்களை ஏற்படுத்தி காலந்தாழ்த்தி வருவதன் நோக்கம்தான் என்ன??? பாதிக்கப்பட்ட மக்களுக்காகவென வெளிநாட்டு அரசுகள் வழங்கிய வீட்டுத் திட்ட நிதியிலிருந்து எவளவு இலாபம் அடையலாம், எவளவைச் சுருட்டிக்கொள்ளலாம் என்ற நோக்கத்திலா??? கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்களுக்காக அதற்குப் பொறுப்பாக நின்று வீட்டுத் திட்டங்களை வழங்கியவர்கள் பலர் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவங்களும் வீட்டுத் திட்டப் பயனாளிகளை மனிதர்களாக நோக்காது நடத்தியதுடன் அவர்களது வீட்டுத் திட்டப் பணத்தைக்கூட வழங்காமல் ஏமாற்றி அந்த வீட்டுத் திட்ட வேலைகளைத் தாமே பொறுப்பேற்று ஆள் வைத்துச் வேலைசெய்வித்து இலாபமடைந்த சம்பவங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்களிலிருந்து முறைகேடாக பல வீடுகளைக் கொள்ளையடித்துக் கட்டி வாடகைக்கு விட்ட சம்பவங்கள் பல ஊடகங்களில் வெளிவந்த உணமைதானே.

இந்த நிலையில் 
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக அரசினது மீள்குடியேற்ற அமைச்சர் அறிவித்தார். அதாவது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களது நலன் கருதி 21 இலட்சம் ரூபா செலவில் பொருத்து வீடுகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறினார். இது மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் பல குழப்பங்களை ஏற்படுத்தியது. இதனால் குழப்பங்கள் நீண்டுகொண்டு செல்கின்ற அதேவேளை மக்களது அவல வாழ்க்கையும் நீண்டுகொண்டே செல்கின்றது. 

உண்மையில் வடபகுதி மக்களுக்குப் பொருத்து வீடுகள் என்பது பொருத்தமற்றதாகவே மக்கள் கருதுகின்றார்கள். மக்கள் கல்வீடுகளை அமைப்பதற்கே விரும்புகின்றார்கள். இதில் வீடுகளில் நீண்ட காலமாக வாழப்போபவர்கள் மக்களேதான் மக்கள் விரும்புவதையேதான் செய்யவேண்டும். சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களுக்கு வீட்டுத்திட்டம் அமைப்பதற்காக வழங்கப்படும் நிதி அதிகம் எனவும் அதனைக் குறைக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார்கள் இது அந்த அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களை எப்படி நோக்குகின்றார்கள் என்பதையும் அவர்களின் மனநிலையையும் எடுத்துக்காட்டுகின்றது. 
மக்களுக்குப் பொருத்து வீடுகளை வழங்காமல் விடமாட்டோம் என்று ஒரு பகுதியினர் சொல்ல இன்னொரு பகுதியினர் பொருத்து வீடுகளை வழங்கவிடமாட்டோம் என்று கூற இப்படியாகவே அரசியல்வாதிகள் சில காலம் வரையும் குழப்பங்களை ஏற்படுத்திக் கூறி காலத்தைக் கடத்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைக்கவென வெளிநாட்டு அரசுகள் இரங்கி வழங்கிய பெருமளவான பணத்திற்கு வட்டி வளரும்தானே. இதன் பின்னர் வழங்கவிடமாட்டோம் என்று எதிர்த்தவர்கள் கூறுவார்கள் எங்களின் இலக்கை விட்டு இதில் முரண்டு பிடிக்காமல் ஒரு முடிவுக்கு வருவம் என்று கூறி விட்டுவிடுவார்கள். இப்படித்தான் அரசியல் போகின்றது. 
இப்படியே சில காலத்தின் பின்னர் மக்கள் விரும்பாத பொருத்து வீடுகளை மக்கள் விருப்பமின்றி வழங்குவதை முன்னர் எதிர்த்தவர்கள் ஒத்துக்கொண்டாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்ட நிதி 21 இலட்சத்திலிருந்து குறைக்கப்படுமாகவோ இருந்தால் மக்களுக்கான பணத்தைக் கொள்ளையடித்த பங்காளிகளாகப் பலர் மக்கள் முன் இனங்காட்டப்படுவார்கள். எத்தனை காலந்தான் மக்களை ஏமாற்ற முடியும்??? பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு அரசுகள் இரங்கி வழங்கும் உதவித்திட்டங்களையே உரிய காலத்தில் வழங்காமல் இழுத்தடிக்கின்றார்கள் என்றால் இவர்களை எப்படிச் சொல்வது. குளிரூட்டப்பட்ட வாகனங்களிலும் குளிரூட்டப்பட்ட அறைகளிலும் வசிப்பவர்களுக்கு தறப்பாள், தகரக்கொட்டகைகளில் அவலப்படுபவர்களின் துன்ப துயரங்கள் எங்கே தெரியப்போகின்றது.

இன்னும் எத்தனை காலந்தான் தொடரும் இந்த நிலை 
இந்த நிலை தொடரும் அத்தனை காலமும்
மக்களுக்கான வீட்டுத்திட்ட நிதி வட்டி வளர்ந்து குட்டி போடும்
மக்கள் நலன் என்று கூறி அதை 
அனுபவித்து மகிழ்வர் அரசியல்வாதிகள்
அத்தனையும் மக்கள் துன்பத்தில்.....
-சிவேந்தன்-
« PREV
NEXT »

No comments