தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல
வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த
வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத்
தாக்குதலில் இழந்து 6 வருடங்கள் ஆகின்றன.
ஆர்ப்பாட்டமில்லாத
ஆளுமையின் வடிவமாக விளங்கிய அவரின் பன்முகப்பட்ட தலைமைத்துவம் விடுதலைப்
போராட்டத்தில் காத்திரமான வகிபாகத்தைக் கொண்டிருந்தது. முக்கியமானதும், கடுமையானதுமான சமர்க்களங்களில் தனது ஆளுமையையும்
சிறந்த திட்டமிடலையும் வெளிப்படுத்தி, சவாலான களமுனைகளில் தனிமுத்திரை பதித்து, அதனூடாக தன்னை வெளிப்படுத்தி சிறந்த நம்பிக்கையான
தளபதியாக பரிணமித்தவர்
தளபதி
தீபன் அவர்களின் தாக்குதல்களையும் அவரின் செயற்பாடுகளையும் சொல்ல விளையும்போது, தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களையும் சேர்த்தே
சொல்லிக் கொண்டு போகமுடியும். ஏனெனில், சமர்க்களச் செயற்பாடுகளினூடாக தனக்கென ஒரு
தனித்துவத்தை நிலைநிறுத்திய தளபதியாக மிளிர்ந்த தீபன், தளபதி பால்ராஜ் அவர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவரது பாசறையில் இருந்து வெளிவந்தவர். தளபதி தீபன்
அவர்களின் ஆளுமை என்பது தளபதி பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கிலிருந்தும்
திட்டமிடும் தன்மையிலிருந்தும் சிறிது மாறுபட்டிருக்கும். ஆனால் இந்த தன்மைகளே
இவர்களிருவரும் இணைந்து பல வெற்றிகளை பதிவு செய்வதற்கான தளத்தைக் கொடுத்திருந்தது.
அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தனித்துவமாக பல போரியல் வெற்றிகளைப் பெற்றதனூடாக
தனது தனித்துவத்தை பல இடங்களில் பதிவுசெய்துள்ளார்
கிளிநொச்சி
மாவட்டம் கண்டாவளையைப் பிறப்பிடமாக கொண்ட தீபன் அவர்களின் பூர்வீகம் யாழ்மாவட்டம், தென்மராட்சியின் வரணியாகும். சாவகச்சேரி இந்துக்
கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், விடுதலைக்காக கல்வியை இடைநிறுத்திவிட்டு, 1985 வருடம் மேஜர் கேடில்ஸ் அவர்களிடத்தில்
விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தனது விடுதலைக்கான பயணத்தை ஆரம்பித்தார்
கிளிநொச்சியில்
தனது ஆரம்பகாலப் பணிகளை தொடங்கினார். இலங்கை இராணுவத்திற்கெதிராக கிளிநொச்சியில்
நடைபெற்ற தாக்குதல்களில் பங்குகொண்டதுடன் இந்திய இராணுவத்தினருக்கு எதிராக
கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் தளபதி தீபன் அவர்கள் காட்டிய
தீவிரத்தன்மையும் செயற்பாடும் அவரை வன்னி மாவட்ட துணைத் தளபதியாக்கியது
1990 ம் ஆண்டு, தீவிரமடைந்த ஈழப்போர் இரண்டு காலப்பகுதியில், மிகவும் காத்திரமான போரியல் பங்கை வகித்து, முன்னுதாரணமாக விளங்கிய வன்னிக் களமுனையில், மைல் கற்களாக விளங்கிய பல சண்டைகளில் தளபதி
பால்ராஜ் அவர்களிற்கு உறுதுணையாக தலைமைதாங்கிய பெருமை தளபதி தீபன் அவர்களையே
சாரும். குறிப்பாக, தாக்குதல்கள் நடைபெறும் சமயங்களில் சில
முனைகளில் சண்டை நிலைமை இறுக்கமடையும். அப்போது, தளபதி
பால்ராஜ் களமுனைக்கு சென்று நிலைமையை சீர்செய்வார். அச்சமயங்களில், தலைமைக் கட்டளைப் பொறுப்பை தளபதி தீபன்
அவர்களிடமே கொடுத்துவிட்டு செல்வார். அந்தளவிற்கு தளபதி தீபன் அவர்களின்
தலைமைத்துவத்தில், ஒழுங்குபடுத்தலில்
நம்பிக்கையுடையவராகவும், பால்ராஜ் அவர்கள் வழிநடாத்திய
தாக்குதல்களில் பலவற்றில் முதுகெலும்பாகவும் செயற்பட்டவர்.
1990ம்
ஆண்டு, வெற்றிபெற்றே
ஆகவேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலை
களத்தில் நேரடியாக நின்று வழிநடாத்தினார். இந்த தாக்குதலில், பெரல்களில் மண்ணை நிரப்பி அதனை உருட்டிக்கொண்டு
காப்பாகப் பயன்படுத்தி முன்நகர்ந்தே சண்டைசெய்யப்பட்டது. இதன்போது தீபன் அவர்கள்
களத்திற்கான தலைமைக்கட்டளையை வழங்கியது மட்டுமல்லாமல், தானும் ஒரு பெரலை உருட்டிக் கொண்டு முன்னேறி
சண்டையிட்டார். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதே கையில் காயமடைந்தார்.
உடனேயே களத்திற்கு விரைந்த தளபதி பால்ராஜ் அவர்கள் சண்டையை தொடர்ந்து நடாத்தி
கொக்காவில் முகாமை வெற்றி கொண்டார். பின்னர் மாங்குளம் முகாம் தாக்குதல், வன்னிவிக்கிரம தடுப்புச்சமர் போன்றவற்றிலும் தனது
தலைமைத்துவத்தை சிறப்பாக வழங்கியவர் தளபதி தீபன் அவர்கள். 1991 ம் ஆண்டு சாள்ஸ்
அன்ரனி படைப்பிரிவின் சிறப்புத்தளபதியாக பால்ராஜ் அவர்கள் பொறுப்பை எடுக்கும் போது, வன்னி மாவட்டத் தளபதியாக தீபன் அவர்கள்
நியமிக்கப்பட்டார்
வன்னி
பெருநிலப்பரப்பின் சிறப்புத் தளபதியாக செயற்பாடுகளைத் தொடங்கிய தீபன் அவர்கள், வண்ணாக்குளம், கெப்பிட்டிக்கொல்லாவையில் எல்.3 எடுத்த சமர், முல்லைத்தீவு முகாமின் காவலரண்களைத் தகர்த்து 50
கலிபர் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைக் கைப்பற்றியது போன்ற பல தாக்குதல்களை
தனித்துச் செய்தார். மேலும் மின்னல், ஆ.க.வே தாக்குதல், இதயபூமி ஒன்று, தவளைப்பாய்ச்சல், யாழ்தேவி என பல பாரிய சமர்களில் வன்னி மாவட்ட
படையணிகளுக்குத் தலைமை தாங்கினார்
இவற்றில், நான்குமணி நேரத்தில் நடத்தி முடித்த மாபெரும் சமரான
யாழ்தேவிச் சமரானது எமது போராட்ட வரலாற்றில், மரபுவழிச் சண்டை முறையில் முக்கியத்துவமானதாக அமைந்த
தாக்குதல். இதில் தளபதி தீபன் அவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ்
குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்திய இந்த
வரலாற்றுச் சமரில் தளபதி பால்ராஜ் அவர்கள் காயப்பட்ட வேளையிலும், அவரது களமுனையை வழிநடாத்தி வெற்றியை எமதாக்கிய
பெருமையில் தீபன் அவர்களிற்கு பெரும் பங்குண்டு
இத்தாக்குதல் பற்றி தீபன் அவர்கள்
தெரிவிக்கையில் ‘ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து
எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய
முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு
பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர
துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய
பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்து கொண்டிருந்தது. எனவே, வரப்போரங்களிலும் பற்றைக் கரைகளிலும்
கைகளாலும் தடிகளாலும் உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி, எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும்
நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம்.
விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்து
சண்டையிட்டோம்’ என்றார். பாரிய இழப்புகளுடன்
சிங்களப்படைகள் பின்வாங்கிய இச்சமரில் ராங்கிகள், கவசவாகனங்கள்
அழிக்கப்பட்டதுடன் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பூநகரி தவளை
நடவடிக்கையில் பிரதான கட்டளை முகாம் தாக்குதலுக்கான தலைமையைப் பொறுப்பெடுத்து
தாக்குதலை வழிநடாத்தினார். பல அடுக்குப் பாதுகாப்பு வியூகத்தைக் கொண்டமைந்த பிரதான
முகாமைக் கைப்பற்றும் தாக்குதல் மிகவும் சவாலாக இருந்தது. எதிரி கட்டளை மையத்தை
தக்கவைக்க கடுமையாகப் போராடினான். முகாமின் பலபகுதி கைப்பற்றப்பட்டபோதும், இறுதியாக ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக
தொடர்ந்த கடும் சண்டை மறுநாள் விடியும் வரை தொடர்ந்தது. பகல்வேளையில் அங்கு
சிதறியிருந்த இராணுவத்தினரும் ஒன்றுசேர, முகாமின்
எதிர்ப்பும் மிகவும் வலுப்பெற்றது. என்றாலும் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி தாக்குதலை
தீவிரப்படுத்தினார். இறுதியில் முகாமிலிருந்து மோட்டார்களை கைப்பற்றவேண்டும் என்ற
நிலைப்பாட்டில் நவநீதன் தலைமையில் அணிகளை ஒழுங்கமைத்து மோட்டார்களை கைப்பற்றினார்.
இச்சம்பவத்தில் லெப் கேணல் நவநீதன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். 1993 ம் ஆண்டு
தவளைப்பாய்ச்சல் நடவடிக்கை முடிந்த பின்னர், சிறப்பு
வேவுப்பிரிவு தளபதியாக பொறுப்பேற்று யாழ் தீவுப்பகுதித் தாக்குதலுக்கான முழு
வேவுப்பணியையும் நிறைவு செய்தார். ஆயினும் அத்தாக்குதல் செயற்பாடு தற்காலிகமாக
நிறுத்தப்பட்டதால் கொக்குத்தொடுவாய்ப் பகுதி முகாம் வேவு நடவடிக்கைகளில்
ஈடுபட்டார்.
தொடர்ந்து, 1995 ம் ஆண்டு சூரியகதிர் பாதுகாப்புச்
சமரில் பல களமுனைகளைத் தலைமை தாங்கினார். இதன்போது தனது கையில் காயமடைந்த
நிலையிலும் தொடர்ந்து களமுனைத் தளபதியாக தனது பங்கை வழங்கினார்.
வலிகாமத்திலிருந்து பின்நகர்ந்ததைத்
தொடர்ந்து தளபதி தீபன் அவர்கள் முல்லைத்தீவு முகாம் தாக்குதலுக்கான வேவுப்பணியை
செய்வதற்காக தலைவரால் பணிக்கப்பட்டார்;. முல்லைத்தீவு
முகாம் வேவு சவாலான விடயமாகவே இருந்தது.
இங்கு சிங்களப்படையினர் முகாமின்
காவல்நிலைகளை மிகவும் நெருக்கமாக அமைத்து உச்ச அவதானிப்பில் வைத்திருந்தனர்.
தாக்குதலுக்கான வெளிப்பகுதி வேவுகள் முடிந்திருந்தாலும், சண்டையைத் தீர்மானிக்க முகாமிற்குள் நுழைந்து
வேவு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேவுப்பிரிவினர் கடுமையாக முயற்சி
செய்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இதற்கு மாற்றுவழி ஒன்றைச் சொன்னார்
தளபதி தீபன் அவர்கள். எதிரியின் ‘டம்மிக்
காவலரணை’ இனம் கண்டு, எதிரியின் ரோந்து செல்லும் நேரத்தைக்
கணிப்பிட்டு, அந்த நேர இடைவெளிக்குள் காவரணின்
சுடும் ஓட்டைக்குள்ளால் காவலரணுக்குள் உட்புகுந்து, இராணுவத்தின்
ரோந்தை அவதானித்துவிட்டு முகாமிற்குள் செல்லுமாறு திட்டம் வகுத்தார். அவ்வாறே
உள்முகாம் வேவுகளை துல்லியமாகச் செய்து முடித்தனர்.
முல்லைத்தீவுத்
தாக்குதல் நடவடிக்கையின் போது, முகாமின்
மேற்குப்பகுதியைக் கைப்பற்றி, முகாமின்
மையப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொறுப்பு தளபதி தீபன் அவர்களுக்கு
வழங்கப்பட்டது. லெப் கேணல் தனம், லெப்
கேணல் பாக்கியராஜ், லெப்கேணல்
ராகவன் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி படையணியுடன் களமிறங்கினார் தீபன். தாக்குதல்
ஆரம்பித்து முன்னணிக் காவலரண் கைப்பற்றப்பட்டவுடன், உட்தாக்குதல் அணியுடன் சென்று மிகவேகமாக முகாமின்
மையப்பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தார். ஏனெனில் எதிரியின் இரண்டாவது காவலரண்
தொகுதியானது நீரேரியின் கரையில் அமைந்திருந்தது. கடற்கரைப்பக்கத்தால் உள்ள சிறிய
தரைப்பாதையாலேயே படையணிகள் உள்நுழைய வேண்டும். அதில் பலமான காவலரண்களை எதிரி
அமைந்திருந்தான்
அந்தப்பகுதியில்
வெடிமருந்து நிரப்பப்பட்ட கரும்புலிப்படகால் வேகமாக வந்து பாய்ந்து
வெடிக்கவைப்பதனூடாக எதிரியை அழித்து படையணியை நகர்த்துவதாக திட்டமிருந்தாலும், அந்த நடவடிக்கை சாத்தியமில்லாமல் போகும்
நிலையேற்பட்டால் மாற்று வழி படையணிகளிடமே கொடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவின்
வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான களத்தில் தான் நிற்கவேண்டும் என்பதை கருத்தில்
வைத்து, முன்னணிக்
காவலரண்கள் சரியாக பிடிபடாத நிலையிலும், 2 கிலோ மீற்றர் பின்னால் உள்ள தாக்குதல் முனைக்கு
படையணிகளுடன் வேகமாக நகர்ந்து தாக்குதலில ஈடுபட்டார். மையப்பகுதி தாக்கப்பட்டதால்
நிலைகுலைந்த சிங்களப்படை, ஆட்லறிகளையும்
மையப்பகுதியையும் பாதுகாக்க முடியாமல் விட்டுவிட்டுப் பின்நகர்ந்தது.
இராணுத்தினரின் மையக் கட்டளைப்பகுதி ஆட்டங்காணத் தொடங்கியதுடன் இராணுவத்தின்
ஒழுங்கமைப்புத்திறன் பாதிக்கப்பட்டது. இதுவே முல்லைத்தீவு முகாமின் தாக்குதல்
வெற்றியில் பிரதான பங்கை வகித்தது
சத்ஜெய – 03
நடவடிக்கையில் பாதுகாப்புச் சண்டையை வழிநடாத்திய போது, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான
சண்டையாக உருத்திரபுரம் 8ம் வாய்க்கால் எள்ளுக்காட்டுப் பகுதியைக் கைப்பற்றி
நிலைகொண்ட சிறப்புப் படையணி மீது நடாத்தப்பட்ட உடனடி ஊடறுப்புத் தாக்குதல்
அமைந்தது. உருத்திரபுரம் பகுதியை சிறிலங்கா சிறப்புப்படைகள் கைப்பற்றியபோது அதனால்
ஏற்படக்கூடிய பாதக நிலையை உணர்ந்து, உடனடி
ஊடறுப்புத்தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டார்.
சிறிலங்காவின் சிறப்புப்படைகள்
வாய்க்கால் வரம்பை தமக்கு சாதமாக்கி நிலையெடுத்திருந்தது. எதிரியின் முன்பகுதி
வயல் வெட்டை என்பதுடன் அக்காலப்பகுதி நிலவுகாலம். நிலவு கிட்டத்தட்ட அதிகாலை 4.30
மணிக்கு மறையும். 6 மணிக்கு விடிந்துவிடும். அந்த இடையில் கிடைக்கும் 1.30 மணிநேர
இடைவெளிக்குள் நகர்ந்து தாக்குதலை நடாத்த வேண்டிய நிலைமை. என்றாலும் தளபதி லெப்
கேணல் தனம் தலைமையில் அணிகளை ஒழுங்குபடுத்தி, நிலவிற்குள்
நகரக்கூடியளவிற்கு படையணிகளை நகர்த்தி, காப்புச்
சூடுகளை ஒழுங்குபடுத்தி, நிலவு மறையும் அத்தருணத்திற்குள்
திடீர் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை நடாத்தினார். வேகமான இத்தாக்குதலில் 150
இராணுவத்திற்கு மேல் கொல்லப்பட்டதுடன் இராணுவத்தின் நகர்வு சில காலம்
முடக்கப்பட்டது.
தளபதி தீபன் அவர்களின் தொடர்ச்சியான
தாக்குதல் பங்கேற்புகளும் அவருடைய தலைமைத்துவமும், ஒருங்கிணைக்கும்
தன்மையும், தாக்குதல்களை திட்டமிடும் இலாவகமும்
இன்னுமொரு பரிணாமத்தையடைந்தது. களமுனைகளில் நிலைமைக்கேற்றவாறு தாக்குதல்
வியூகங்களை வகுப்பது, களங்களில் நேரடியாகச் சென்று
வழிநடாத்தும் தன்மை, தனது பொறுப்பை நிறைவேற்றும் பாங்கு, ஒருங்கிணைத்து வழிநடாத்தும் பாங்கு என
தளபதியின் ஆளுமை போராளிகளிடத்தில் நல்ல அபிப்பிராயத்தைக் கொடுத்ததுடன் அவருடைய
தலைமைத்துவத்தையும் வலுப்படுத்தியது.
1997 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி
படையணியின் சிறப்புத் தளபதியாக தீபன் அவர்கள் பொறுப்பேற்றார். சாள்ஸ் அன்ரனி
படையணியுடன் தீபன் அவர்களின் போர் நடவடிக்கைகள் இன்னுமொரு கட்டத்திற்குள்
நகர்ந்தது. இந்தநேரத்தில்தான் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது. இந்த
இராணுவ நடவடிக்கையைத் தடுக்கும், வவுனியா
களமுனையை வழிநடாத்தும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையின் பிரதான போர்முனையான ஏ-09 பாதையால் முன்னேறும்
எதிரியைத் தடுக்கும் சண்டையென்பது அந்த எதிர்ச்சமரின் பிரதான பகுதியாக இருந்தது.
ஓமந்தையில் தொடங்கிய மறிப்புத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்ட பெருமை நிச்சயமாக
தீபன் அவர்களையே சாரும். இப்பாரிய படைநகர்வை எதிர்கொண்டபோது ஓமந்தை, இரம்பைக்குளம், பன்றிக்கெய்தகுளம், பனிக்கநீராவி போன்ற இடங்களில் பல ராங்கிகளை
அழித்து சிங்களப்படைக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார். இதில் புளியங்குளம்
சண்டை என்பது ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு பலத்த இழப்பைக் கொடுத்த சண்டையாகும்.
புளியங்குளம் சந்தியை மையப்படுத்தி முகாம் ஒன்றை அமைத்து எல்லாத் திசைகளிலும்
இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடியவாறு படையணிகள் தயார்படுத்தப்பட்டன.
இராணுவம் பல திசைகளிலும் மாறிமாறி
புளியங்குளத்தில் விடுதலைப்புலிகளின் படையணியைப் பின் நகர்த்த
கடும்பிரயத்தனப்பட்டது. இலகுவில் வன்னியை ஊடறுக்கலாம் என கங்கணம் கட்டிய
சிங்களப்படைக்கு புளியங்குளத்தில் தளபதி தீபன் தலைமையில் வீழ்ந்த அடியானது, ஒட்டுமொத்த ஜெயசிக்குறு இராணுவத்
தலைமையினதும் சிங்களச் சிப்பாய்களினதும் மனோதிடத்தை பலவீனமாக்கியது. மிகவும்
கடுமையான சண்டையாக வர்ணிக்கப்பட்ட இச்சண்டை ஜெயசிக்குறுவின் தலைவிதியை
மாற்றியமைத்தது. இந்த கடுமையான போர்க்களத்தை கடும் உறுதியுடன் புலிகள்
எதிர்கொண்டனர்.
தளபதி தீபன் அவர்கள் புளியங்குளம் ‘பொக்ஸ்’ பகுதிக்குள்
தனது கட்டளை மையத்தை நிறுவி அங்கிருந்தே தடுப்புத்தாக்குதலை ஒழுங்கமைத்து தெளிவான, நிதானமான, உறுதியான
கட்டளையை வழங்கினார். ஒரு பாரிய படைவலுவைக் கொண்ட சிங்களப்படையை
நிர்மூலமாக்கியதுடன் மூன்று மாதங்களிற்கு மேல் எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி
பாரிய பின்னடைவுக்குள்ளாக்கினார். ஒருதடவை விடுதலைப்புலிகளின் நிலையை ஊடறுத்துவந்த
துருப்புக்காவியையும் கைப்பற்றினர். இது சராசரி 60 பேருக்கு மேல் தினசரி
காயமடையும் களமுனையாக இருந்தது. அங்கு 3 அல்லது 4 தடவைகளிற்கு மேல் மாறிமாறி
காயப்பட்டாலும் தொடர்ந்து ‘புளியங்குளத்திற்கு தீபண்ணையிட்ட போகப்
போறம், எங்களுக்கு மருத்துவ ஓய்வு தேவையில்லை’ என தீவிரமாக போராளிகள் செயற்பட்டு
புளியங்குளத்தை புலிகளின் குளமாக மாற்றினர். இதன் நாயகனாக விளங்கியவர் தளபதி தீபன்
அவர்களே! ஒரு வருடங்களுக்கு மேல் நடந்த ஜெயசிக்குறுச் சமரில் புளியங்குள மறிப்பு
என்பது விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதலாவது வெற்றிகரமான தடுப்புச்
சமர் என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் மனோதிடத்தை பாரியளவில்
பலவீனப்படுத்திய, எதிரிகளாலும் வியந்து பார்க்கப்பட்ட
சமராகும்.
பின்னர், கிளிநொச்சியை
மீளக்கைப்பற்ற நடாந்த சமரில் டிப்போச் சந்திவரை கைப்பற்றிய தாக்குதலை தலைமை
தாங்கியதுடன், அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-02 எனப்
பெயரிடப்பட்ட தாக்குதலில் எதிரியை ஓடவிடாமல் தடுத்து, வரவிடாமலும் மறிக்கும் பொறுப்பை தளபதி
பால்ராஜ் அவர்கள் வழிநடாத்த, முற்றுகைக்குள் வைக்கப்பட்ட கிளிநொச்சி
முகாம்களைத் தகர்த்தழிக்கும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் வழிநடாத்தினார்.
கிளிநொச்சி நகரப்பகுதியை மையப்படுத்தி பல அடுக்கு பாதுகாப்பு வேலிகளை கொண்டமைந்த
பாதுகாப்பு அரண்களை உடைத்து தாக்குதல் நடைபெற்றது. சில இடங்களில் காவலரண்களைக்
கைப்பற்றுவதும் பின்னர் சிங்களப்படைகள் அதை மீளக் கைப்பற்றுவதும் என கடுமையான
சண்டைகள் நடைபெற்றன.
தளபதி தீபன் அவர்கள் பூநகரி, முல்லைத்தீவு முகாம் தாக்குதல்களில் ஏற்பட்ட
சிரமங்கள், சாதகங்கள் போன்றவற்றிலிருந்து பெற்ற
அனுபவங்களின் அடிப்படையில் அணிகளை வழிநடாத்தினார். இறுதியாக பிரதான மைய பாதுகாப்பு
காவலரண் பகுதியில் கடுமையான எதிர்பை எதிர் கொண்டார். ஏற்கனவே பூநகரி சண்டையில்
பிரதான முகாமை கைவிட வேண்டி புலியணிகளுக்கு ஏற்பட்டதன் காரணங்களைப் புரிந்த அவர், இதுபோன்ற ஒரு தோல்வி மீள ஏற்படக்கூடாது என்ற
எண்ணப்பாட்டில் இறுதியான ஒரு முயற்சியை செய்யத் தீர்மானித்தார். தளபதி லெப் கேணல்
சேகர் தலைமையில், தளபதி லெப் கேணல் வீரமணியின் நேரடி
வழிகாட்டலில் எதிரி எதிர்பார்க்காத வண்ணம் பகல் நேர உடைப்புத் தாக்குதல் ஒன்றை
ஒழுங்குபடுத்தினார். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற நிலை இருந்தும் கூட, பகல் நேர உடைப்பை வெற்றிகரமாக செய்யலாம் என
திடமாக நம்பி, சாள்ஸ் அன்ரனி படையணியை களமிறக்கி
அதில் வெற்றியடைந்தார். ஆனையிறவிலிருந்து உதவியணியும் வரவில்லை என்பதுடன் தங்களது
இறுதிப் பாதுகாப்பு அரணும் உடைக்கப்பட்டதை உணர்ந்த இராணுவம் பின்வாங்கலைச்
செய்தது. இதில் பெறப்பட்ட வெற்றியானது அவரது தலைமையின் காத்திரத்தன்மையை
வெளிப்படுத்தியது.
சமநேரத்தில் கிளிநொச்சியின் வெற்றியை
கொண்டாட முடியாத வகையில் சிங்களப்படைகள் கருப்பட்டமுறிப்பு, மாங்குளம் பகுதியைக் கைப்பற்றியது. தலைவரின்
திட்டத்திற்கமைவாக, தளபதி பிரிகேடியர் சொர்ணம் தலைமையில்
ஓயாத அலைகள் -03 தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதிக் களமுனை ஒட்டிசுட்டானில்
திறக்கப்பட்டது. அதன் இன்னுமொரு முனை, தளபதி
தீபன் தலைமையில் மாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டது. பல மாதங்களாக முன்னேறிய
ஜெயசிக்குறு படையணி சில நாட்களுக்குள் மீள வவுனியாவிற்கே பின்நகர்த்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-03 இன்
தாக்குதல் முனைகள் பரந்தனிலும் சுண்டிக்குளப் பகுதியிலும் தனங்கிளப்புப்
பகுதியிலும் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பரந்தன் பகுதியிலிருந்து ஆனையிறவை நோக்கிய
படைநகர்வு தளபதி தீபன் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது. பரந்தனில் பகல் பொழுதில்
தாக்குதலைத் தொடங்கி, பரந்தன் காவலரண்களைத் தகர்த்து
முன்னேறி புலியணிகள் நிலைகொண்டனர். மறுநாள் தாக்குதலுக்கான நகர்வுகள்
ஒழுங்குபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தவேளை, எதிரி
பின்னால் உள்ள வீதியில் புதிய அரண்களை அமைத்து நிலையெடுத்தான். தன் பலத்தில் அதிக
நம்பிக்கை கொண்டு, தளபதி தீபன் அவர்கள் வோக்கியில்
குறுக்கிட்டு ‘உன்ர தளபதி 5.2ஜ (லெப் கேணல் ராகவனின்
சங்கேதப்பெயர்) ஒட்டிசுட்டானில் போட்டிட்டம், இனி என்ன
செய்யப் போகிறாய்’ என்று கேட்டான். ‘அதுக்குத்தான் இப்ப உன்னட்ட வந்திருக்கிறம், எங்களையென்ன ஒட்டிசுட்டான் ஆமியெண்டு
நினைச்சியே, நடக்கப்போறத பொறுத்திருந்து பார், என்று நிதானமாகவும் சவாலாகவும் சொன்ன தளபதி
தீபன், மறுநாள் அதை செய்தும் காட்டினார்.
அதைத்தொடர்ந்து ஓயாத அலைகள்-04
நடவடிக்கையில் குடாரப்பில் தளபதி பால்ராஜ் அவர்கள் தரையிறங்கி எதிரியை ஊடறுத்து
நிலையமைத்து நிற்கும் மூலோபாய நகர்வின் வெற்றியானது, அச்சமருக்காக
தரைவழியாக ஏற்படுத்தப்போகும் விநியோகப் பாதையில் தங்கியிருந்தது. அதற்கான உடனடி
வெற்றியை பெறவேண்டிய முக்கியமான களமுனையை தளபதி தீபன் வழிநடத்தினார். ஆனையிறவு
வீழ்ச்சியின் அடிப்படைக்கு மிகவும் முக்கியமான களத்தை செயற்படுத்துவது
சாதாரணமானதாக இருக்கவில்லை. ஆரம்பத் தாக்குதலில் சில பிரதேசங்களை கைப்பற்றி
தக்கவைக்க முடிந்தது. மறுநாள் தாக்குதலுக்கான உத்திகளை வகுத்து தீர்க்கமான
முடிவுடன் இருந்த தளபதி தீபன் அவர்கள், தளபதி
பால்ராஜ் அவர்களிடம் ‘நாளைக்கு விடிய பாதையை திறந்து
உங்களுக்கு விநியோகம் அனுப்பி வைப்போம்’ என
உறுதியுடன் தெரிவித்து அதை செய்து முடித்தார்.
பின்னர் ஆனையிறவுத் தளத்தை தடுக்கும்
நோக்குடன் செய்யப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல் முயற்சிகள் பல செய்தாலும் அவை
வெற்றியைத் தரவில்லை. இறுதியில் மருதங்கேணிப் பாலத்தை அண்மித்த பகுதியில் தளபதி
தீபன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் ஒழுங்குபடுத்திய ஒரு ஊடறுப்பு முயற்சி
வெற்றியைக் கொடுக்க, நகர்ந்த புலியணிகள் புதுக்காட்டுச்
சந்தியை சென்றடைந்தன. தாம் சுற்றிவளைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்த படையினர்
ஆனையிறவுத் தளத்தை விட்டுப் பின்வாங்கினர். இச்சமரின் வெற்றிக்கு கணிசமான பங்கை
தளபதி தீபன் அவர்கள் வழங்கியிருந்தார். விடுதலைப்புலிகளினால் ஓயாத அலைகள் என்று
பெயரிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் அனைத்திலும் பங்கு கொண்டவர் என்ற பெருமை பெற்ற
ஒரே தளபதி தீபன் அவர்கள் மட்டுந்தான்.
2001 ம் ஆண்டு சிங்களப்படை ஆனையிறவை
மீளக் கைப்பற்ற தீச்சுவாலை என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை
திட்டமிட்டிருந்தது. வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் இருதரப்பினருக்கும்
பலப்பரீட்சையாக அமைந்த தாக்குதல் அது. அதிகாலையில் இரண்டு பக்கத்தால்
விடுதலைப்புலிகளின் நிலைகளை ஊடறுத்த படையினர் இரண்டாவது நிலையை அண்மித்து தமது
நிலைகளை அமைத்தனர். களத்தின் இறுக்கத்தை உணர்ந்த தளபதி, ‘எமது நிலைகளிலில் இருந்து
பின்வாங்காமல் அப்படியே இருந்து சண்டையிடுங்கள்’ என்ற
கட்டளையை வழங்கி அணிகளை ஒழுங்குபடுத்தி கடுமையான சண்டையை மேற்கொண்டார். தளபதி
தீபன் அவர்களின் கட்டளை மையத்தைத் தாண்டி இராணுவம் நகர்ந்த போதும் பின்வாங்காமல், எதிரியால் கைப்பற்றப்பட்ட எமது முதலாவது
நிலைகளை பக்கவாட்டால் தாக்குதல் செய்து மீளக் கைப்பற்றினார். தாங்கள் உள்நுழைந்த
பாதை மூடப்படுகின்றது என்பதை அறிந்த எதிரி, பின்வாங்கி
ஓட்டமெடுத்தான். இச்சமரில் பலத்த இழப்பைச் சந்தித்த இராணுவம் நூற்றுக்கு மேற்பட்ட
உடல்களை கைவிட்டு பின்வாங்கியது.
இத்தாக்குதல் நடைபெறுவதற்கு சில
மாதங்களுக்கு முன் தளபதி தீபன் அவர்கள் முன்னரங்க நிலைகளிற்குப் பொறுப்பாக
இருந்தபோது இதேவகையான நகர்வை எதிரி மேற்கொண்டான். இதன்போது விடுதலைப்புலிகளில் 75
பேரின் உடல்கள் விடுபட்டிருந்தது. இந்தச் சம்பவம் தளபதி தீபன் அவர்களின் மனதில்
ஆழமான வடுவை ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாக தலைவர் கொடுத்த புதிய
கைத்துப்பாக்கியை கழற்றி வைத்துவிட்டு, இராணுவத்தின்
100 உடல்களை எடுக்காமல் அந்தக் கைத்துப்பாக்கியைக் கட்டமாட்டேன் என்ற கொள்கையில்
இருந்தார். இந்த சமரில் தனது சபதத்தை நிறைவேற்றினார்.
மீண்டும் ஆரம்பித்த ஈழப்போர்-04 இல்
முகமாலைச் சமரின் கட்டளைத்தளபதியாக பல சண்டைகளைத் தலைமை தாங்கினார். எதிரியின் பல
நகர்வுகளை முறியடித்து, முகமாலையிலிருந்து பின்வாங்குவதற்கான
கட்டளை கிடைக்கும்வரை அந்தக்களமுனையில் இருந்து ஒரு அடிகூட பின்வாங்காமல் களமுனையை
வழிநடாத்தியவர் தளபதி தீபன் அவர்கள்.
தளபதி தீபன் அவர்கள்
காலமாற்றத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு செல்லும் தலைமைப்பாங்கு கொண்டவர்.
தாக்குதல்களின்போது எந்த இக்கட்டுக்குள்ளும் தெளிவான நிதானமான கட்டளை
அவரிடமிருந்து கிடைக்கும். நிலமைகள் இறுக்கமடையும் போது நிதானமாக வரும்
கட்டளையானது ‘இடத்தைவிட்டு அரக்காமல் சண்டையிடுங்கள்’ என்பதாக இருக்கும். பல சிக்கலான
சந்தர்ப்பங்களில் தருணத்திற்கேற்றவாறு திட்டங்களைக் கொடுத்து அந்தச் சூழலை தனதாக்கும்
தன்மை அவருடையது. அத்தகைய தளபதியை வெல்லமுடியாது என்பதால்தான் கோழைத்தனமாக
நச்சுக்குண்டால் எதிரி அழித்தான்.
தீபன் அவர்களின் சகோதரனான கில்மன், ஆரம்பத்தில் பால்ராஜ் அவர்களின்
மெய்ப்பாதுகாவலராக இருந்தார். பின்னர் சாள்ஸ் அன்ரனி படையணிக்கு தளபதியாக பால்ராஜ்
அண்ணை பொறுப்பெடுக்கும் போது, அவருடன்
சாள்ஸ் அன்ரனி படையணிக்குச் சென்று, தனது
கடுமையான முயற்சியினாலும் போர்ப் பங்கேற்புகளினாலும் சாள்ஸ் அன்ரனி படையணியின்
சிறப்புத் தளபதியானார். 1994 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான காலப்பகுதியில் மணலாற்றில்
சாள்ஸ் அன்ரனி படையணியுடன் வந்திருந்தார் கில்மன், அச்சமயங்களில்
தீபன் அவர்கள் வேட்டைக்குச் சென்று தினசரி மிருகங்களை வேட்டையாடி வருவார். ஆனால்
கில்மனும் வேட்டைக்கு போவார், ஆனால்
வேட்டையாடுவதில்லை. இதையறிந்த தீபன் அவர்கள், மரையின்
படம் ஒன்றை கொடுத்தனுப்பி, ‘உண்மையான மரையை சுடமுடியாட்டி இந்த
படத்தில இருக்கிற மரையையாவது சுடுமாறு கூறியிருந்தார்’. தமையனின் கிண்டலைப் புரிந்து, எப்படியாவது வேட்டையாடியே ஆக வேண்டும் என
முயற்சியெடுத்து இரண்டு மரைகளை வேட்டையாடினார். பின்னர் அம்மரைகளின் ‘குரை’ களை
வெட்டி தீபன் அவர்களிடம் அனுப்பிவைத்தார். பின்னர் கில்மன் திருமலைக்கு
படையணிகளுடன் புறப்பட்டபோது தீபன்ணை வழியனுப்பி வைத்தார். அதுவே அவர்களது இறுதிச்
சந்திப்பென காலம் தீர்மானித்தது போலும். திருமலையில் பலவெற்றிகரமான தாக்குதல்களை
வழிநடாத்திய லெப்.கேணல் கில்மன் திருகோணமலையில் வெடிவிபத்தொன்றில் வீரச்சாவடைந்தார்.
தளபதி தீபன் அவர்களின் ஆளுமையும்
வீரமும் தமிழ் இனத்தின் இரத்தத்தில் எப்போதும் கலந்திருப்பவை. இன்றைக்கு
ஈழப்போராட்டத்தின் பின்னடைவு நிலையிலும் தளபதி தீபன் அவர்களின் வீரவரலாற்றை
மீட்டுப்பார்ப்பது என்பது தமிழர்களின் வீரப்பண்பை, போரிடும்
ஆற்றலை நினைவுபடுத்திக் கொண்டிருப்பதற்காகவும், தாம்
கொண்ட கொள்கைக்காக எத்தகைய சவால்களை எதிர்கொண்டார்கள் என்பதை தொடர்ச்சியாக நினைவு
கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவும் தான்.
எமது
வீரம் சிங்களத்திடம் தோற்றுப் போகவில்லை, உலகத்திடம் தான் தோற்றுப்போனது. ஈழத்தமிழினம் தோல்வியடைந்தது என்ற மனப்பான்மை
கொள்ளாது, தொடர்ந்து
நம்பிக்கையுடன் தீரமாக விடுதலைக்கான வழிமுறைகளை நோக்கி திடசங்கற்பத்துடன் பயணிக்க
வேண்டும். இன்றைக்கு எத்தனையோ ஆயிரம் மாவீரர்களை விதைத்த கல்லறைகள்கூட எதிரியினால்
அழிக்கப்படுகின்றன. எமக்காக மரணித்த மாவீரர் கல்லறைகளின் அடையாளங்கள்
அகற்றப்பட்டாலும் ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் வாழும் அந்த ஜீவன்களின் தூய்மையான
தியாகத்திற்கு கொடுக்கப்போகும் வெகுமதி என்ன? வெறுமனே நினைவுகூறல்களுடன் முடித்துக் கொள்ளப்போகின்றோமா? அல்லது உண்மையான இலட்சிய மைந்தர்களின் கனவுகளிற்காக தொடர்ந்து ஒற்றுமையாகவும்
கடுமையாகவும் உழைக்கவேண்டும்
No comments
Post a Comment