வட பகுதியைச் சேர்ந்த வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகத் துறை அமைச்சினால் பெரிதாகக் கூறிப் பரப்புரை செய்யப்படுகின்ற போதிலும் வட பகுதியில் வெறும் இரண்டு ஊடகவியலாளரைத் தவிர இதுவரை எவருக்குமே மோட்டார் சைக்கிள் வழங்கப்படவில்லை என்பதுடன் வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் இடம்பெறவும் இல்லை.
வட பகுதிக்கு ஊடகத் துறை அமைச்சர் கடந்த மாதம் விஜயம் செய்தபோது அவரது கையால் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே மோட்டார் சைக்கிளை வழங்கி வைக்கப்பட்டதுடன் ஏனையவர்களுக்கு மக்கள் வங்கி ஊடாக பின்னர் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் அதனை விரைவாகப் பெற்றுக் கொள்ளுங்கள் என ஊடகத்துறை அமைச்சரால் கூறப்பட்டது.
மக்கள் வங்கி மூலமாக ஊடகவியலாளர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்ள ஆவன செய்யப்பட்டுள்ளது அதனை மக்கள் வங்கி ஊடாக ஊடகவியலாளர்கள் எவ்வித சிரமமும் இன்றிப் பெற்றுக்கொள்ளலாம் என்கின்ற போதிலும் மக்கள் வங்கிகள் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிளுக்கான பணத்தை வழங்காமல் இழுத்தடித்து வருவதுடன் சில மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்களை ஏழனமாக நோக்குவதுடன் நக்கலாகவும் நையாண்டியாகவும் கதைத்து ஏழனமாகச் சிரிக்கின்றார்கள்.
ஊடகத்துறை அமைச்சினால் ஊடகவியலாளர்களுக்கு கொழும்பில் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சை மூலம் மோட்டார் சைக்கிள் பெறத் தகுதியுடையவர்கள் என ஊடகத்துறை அமைச்சு அறிவித்து ஊடகவியலாளர்களுக்குக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன. அக்கடிதங்களைக் காட்டுகின்றபோதிலும் சில மக்கள் வங்கிகள் ஊடகவியலாளர்களின் தகுதியினைத் தாம் பரிசீலிக்க வேண்டும் என்று கூறி தேவையற்ற கேள்விகளைக் கேட்கின்றார்கள்.
இதனால் மோட்டார் சைக்கிள் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என ஊடகத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மக்கள் வங்கிகள் மோட்டார் சைக்கிளைப் பெறுவதற்கான அரசு அனுமதித்த நிதியை வழங்க மனமின்றி இழுத்தடித்து வருகின்றன.
No comments
Post a Comment