Latest News

April 22, 2016

ஊடக சுதந்திரத்தில் இலங்கை முன்னேற்றம்
by admin - 0

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் கடந்த வருடங்களை விட தற்போது இலங்கை ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.இதன் பிரகாரம் ஊடக சுதந்திரம் தொடர்பான விடயத்தில் உலக நாடுகள் வரிசையில் இலங்கை 141வது இடத்தில் உள்ளது.

எல்லைகளற்ற ஊடக அமைப்பு எனப்படும் ஆர்.எஸ்.எப். அமைப்பு உலகின் ஊடக சுதந்திரம் தொடர்பான சுட்டியொன்றை நேற்று வெளியிட்டது.
கடந்த வருடம் வரை 165 வது இடத்துக்கு அப்பால் இருந்த இலங்கை இந்த ஆண்டு 141 வது இடம் வரை முன்னேறியுள்ளது.
எனினும் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்கள் முழுமையாக குறைவடையாத நிலையில் இலங்கை இன்னும் அபாயகரமான நாடுகள் பட்டியலிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளது.

180 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் பின்லாந்து முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக முதலாம் இடத்தை பின்லாந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாம், மூன்றாம் இடங்களில் நெதர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை இந்த வரிசையில் சற்று முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், தெற்காசியாவின் ஏனைய நாடுகளான இந்தியா 133, ஆப்கானிஸ்தான் 120, நேபாளம் 105, பூட்டான் 95, ஆகிய நாடுகள் இலங்கையை விட ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் முன்னிலையில் உள்ளன.

ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நாடுகளின் வரிசையில் உலகின் பலம்வாய்ந்த நாடுகளான அமெரிக்கா 44ஆவது இடத்திலும், ரஷ்யா 148ஆவது இடத்திலும், சீனா 176ஆவது இடத்திலும் உள்ளன.வடகொரியா, துர்க்மெனிஸ்தான், எரித்ரியா ஆகிய நாடுகள் கடைசி மூன்று இடங்களையும் பிடித்துள்ளன.

« PREV
NEXT »

No comments