திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் – கங்குவேலி படுகாடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை விவசாயிகள் மத்தியில் முறுகல் நிலமை ஏற்பட்டது.இதனால் இப்பகுதியில் சற்று பதற்ற நிலைமை காணப்பட்டது. இதனையடுத்து சம்பவம் பற்றி எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்ததையடுத்து அவர் மூதூர் பொலிஸாரை உடன் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த மூதூர் பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தி. விவசாயிகளை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல வைத்தனர்.
இப்பகுதியில் உள்ள பாரம்பரிய தமிழ் விவசாயிகளின் காணிகளில் சில சிங்கள இளைஞர்கள் அத்துமீறி விவசாயம் செய்வது பற்றிய முரண்பாடே இந்நிலைமை ஏற்படக் காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்சயம் கங்குவேலி – படுகாடு வயல் வெளிகளுக்கு நீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனடிப்படையில் படுகாடு விவசாயிகளும் தமது காணிகளுக்குள் வேலைகளை செய்யமுற்படுகையில் உழவு இயந்திரத்தில் சேருநுவர பிரிவைச் சார்ந்த தெகிவத்தைக் கிராமத்திலிருந்துவந்த சில சிங்கள இளைஞர்கள் வயலில் இறங்க முற்பட்டதாக அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் குறிப்பிட்டனர்.
இதனால் தமது பாரம்பரிய வயலில் அத்துமீறல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என தமிழ் விவசாயிகள் எதிர்த்த நிலையில் சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மூதூரில் இருந்து பொலி ஸார் ஸ்தலத்திற்கு விரைந்து இருபகுதியினருடனும் பேசியதுடன் இந்த விவசாய நடவடிக்கையை தற்காலிகமாகக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அங்கு பிரசன்னமாகியிருந்த தமிழ் விவசாயிகள் கடந்த 2010 இல் இருந்து இவ்வாறு பொலிஸார் வருவதும் சில நாட்கள் தள்ளிப்போடுவதும் பின்னர் சில சிங்கள விவசாயிகள் பலவந்தம் செய்வதும் வழமையாகி விட்டதாக கூறினர்.
கடந்த முறைகூட மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸாரின் கருத்தை மதித்து தமிழ் விவசாயிகளாகிய நாம் எமது பலநூறு ஏக்கர் வயல் செய்கையை நிறுத்தியிருந்தோம்.இதனால் எமது வாழ்வாதாரம் தான் பாதிக்கப்பட்டது. ஆனால் குறித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் தொடர்ந்து எமது வயல்காணிகளில் அத்துமீறி செய்கை பண்ணினார்கள். அதனை பொலிசார் தடுக்க வில்லை. பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்கள் அறுவடை செய்யும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதே நிலையில் இவ்வருடமும் இந்த நல்லாட்சியிலும் நாம் பொறுத்து சட்டத்தை மதித்து இருக்க முடியாது என வாதிட்டனர். இந்நிலையில் அங்கு வருகைதந்திருந்த பொலிஸ் அதிகாரி இனி அவ்வாறு இடம்பெறாது.
வரும் செவ்வாய் கிழமை நீங்கள் மீள வயல் வேலை செய்யலாம். என்று கேட்டுக்கொண்டதோடு, கலைந்து செல்லுமாறு வேண்டினார். இந்நிலையில் பொலிஸ் உயரதிகாரியின் கருத்தை மதித்து தாம் தற்காலிக மாக வேலையை இடை நிறுத்தியதாக குறிப்பிட்டனர். சுமார் நண்பகல் 12.15 மணியளவில் பதற்ற நிலைமை முடிவுக்கு வந்தது. உழவு இயந்திரத்தில் வந்தவர்கள் பெட்டியில் கம்புதடிகளுடன் வந்திருந்ததையும் பொலிஸாருக்கு தாம் சுட்டிக்காட்டியதுடன், இக்காணிகள் கடந்த 1970 ஆண்டுகளில் இருந்து செய்கை பண்ணி வருவதுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக குறித்த வேறு பிரதேச மான தெகிவத்தையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரது குடும்பத்தினரால் அத்துமீறி அமைதியின்மையும் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் அங்கு வந்த பொலிஸ்அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர். பல விவசாயிகள் தாக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸில் முறையிட்டிருந்தும் எவரும் கைதாகவில்லை.
இதனால் பொலிஸாரை நம்பமுடியாது எனவும் குறிப்பிட்டனர்.இப்பகுதியில் ஏலவே இரண்டு குளங்களிலும் நீர்தேங்கும் பகுதியில் அத்துமீறல் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
No comments
Post a Comment