எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் கடந்த ஏப்ரல் மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாமொன்றுக்கு அத்துமீறி செல்ல முற்பட்டதோடு இராணுவ அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளார். எனவே அவரை உடனடியாக புதிய பொலிஸ் மா அதிபர் கைதுசெய்து காட்ட வேண்டும் என ஒன்றிணைந்த பொது எதிரணி சவால் விடுத்தது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்றவாறு நியமனம் பெற்றுள்ள புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பதவியேற்பு நிகழ்வில் தனது
எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஊட கங்கள் முன்னிலையில் தெரிவித்த கருத்துக்கள் உண்மையாயின் இதனை செய்துகாட்டவேண்டும் என்றும் எதிரணி குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரிகளினால் மாவட்ட பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டும் இதுவரை இது தொடர்பிலான எந்த ஒரு விசாரணை நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை எனவும் பொது எதிரணி சுட்டிக்காட்டியது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரினால்
நேற்று ஞாயிற்றுக்கிழமை பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையலேயே எதிரணியின் சார்பில் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்உதய கம்பன்பிலகுறிப்பிடுகையில்
நல்லாட்சி என கூறி நாட்டுற்கு எமது மக்களுக்கு முற்று முழுவதுமான எதிர்மறையான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இந்த அரசாங்கமானது இலங்கையின் 34 ஆவது புதிய பொலிஸ்மா பூஜித ஜயசுந்தரவை தனக்கு ஏற்றவாறு சட்டவிரோத முறையில் நியமித்துள்ளது.
இவ்வாறான நிலையில் புதிய பொலிஸ்மா அதிபர் தனது பதவி ஏற்கும் நிகழ்வில் இதற்கு முன்னர் எமது நாட்டின் எந்தவொரு பொலிஸ்மா அதிபரோ தெரிவிக்காத சில கருத்துகளை தெரிவித்ததோடு தனது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் பல்வேறு கருத்துகளையும் வீர வசனங்களை குறிப்பிட்டிருந்தார். அதாவது எனது செயற்பாடுகள் சட்டரீதியாக காணப்படும் அரசியல் ரீதியான எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் நான் அச்சப்பட போவதில்லை நாட்டின் சட்டதிட்டங்களை உரியவாறு நிறைவேற்றுவேன் என்று பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். அந்தவகையில் புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினை சேர்ந்த பாராளுமன்ற பிரதி என்ற ரீதியில் நான் சவால் ஒன்றை விடுக்கின்றேன்.
கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் தனது கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கிழக்கில் தொழிற்படும் அரச சார்பற்ற அமைப்புக்கள் என்பவற்றை ஒன்றிணைத்து கிளிநொச்சு மாவட்டத்தின் பரிவிபச்சான் என்ற பிரதேசத்தில் கஜபா படையணிக்கு சொந்தமான இராணுவ முகாமொன்றுக்கு அத்துமீறி செல்ல முற்பட்டார். அங்கு கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தோடு எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முகமாக அப்பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரிகளினால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இச்சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தினால் எவ்வித விசாரணை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரினால் ஏதேனும் சிறுவிடயங்கள் தவறுதலாக இடம் பெற்றாலும் எம்மீது கடுமையான சட்டங்கள் இந்த அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் எதிர்கட்சி தலைவர் உட்பட வடக்கிழக்கில் தொழிற்படும் அமைப்புக்கள் எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் எவ்வித சட்டங்களும் அவர்கள் தொடர்பில் பிரயோகிக்கப்படுவது இல்லை.
எனவே பதிய பொலிஸ்மா அதிபருக்கு நாம் சவால் ஒன்றை முன்வைக்க விரும்புகின்றோம். அதாவது நீங்கள் ஊடகங்கள் முன்னிலையில் குறிப்பிட்ட கருத்துக்கள் உண்மையாயின் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனை இவ்விடயம் தொடர்பில் விரைவாக கைது செய்து சட்டத்தை நிலைநாட்டவேண்டும் என்றார்.
No comments
Post a Comment