வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் நேர்மையான, கண்ணியமான, யாருக்கும் அடிபணியாத தலைமைத்துவம் பலருக்கு அச்சுறுத்தலாக உள்ள காரணத்தாலேயே, அவர் தொடர்பில் பல விமர்சனங்கள் வெளிவர காரணமாக உள்ளதென வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில், புதன்கிழமை நடைபெற்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
வடக்கு முதல்வரின் நேர்மையான தலைமைத்துவம், இன்று பலருக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது. குறிப்பாக இலங்கை அரசாங்கத்தை பொறுத்தளவில், இவ்வாறான ஒரு முதலமைச்சர் வடக்கில் இருப்பதானது அவர்களை பொறுத்தளவில் ஒரு தர்மசங்கடமான நிலையாகவே உள்ளது. எதையும் நேருக்கு நேர் சொல்லக்கூடிய ஒரு தலைமைத்துவத்தை இலங்கை அரசு விரும்பவில்லை. தாங்கள் சொல்வதற்கு வளைந்து நெளிந்து வணக்கம் போடும் ஒருவரைத்தான், சர்வதேச நாடுகளும் விரும்பியிருந்தன. மத்திய அரசும் அதனையே விரும்புகிறது. அவர்களது எண்ணத்திற்கு மாறாக முதலமைச்சர் இருப்பது, அரசாங்கத்திற்கு ஒரு தர்மசங்கடமான நிலையாக உள்ளது. அதன் பயனாகத்தான் ஆதாரமற்ற, நியாயமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
நாட்டின் ஜனாதிபதி அபிவிருத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் தொடர்பாக, அக்கறை கொண்டவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவரால் இவற்றையெல்லாம் தனித்து தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறதா என்பது என்னைப் பொறுத்தவரையில் சந்தேகமே. மாகாணசபை என்பது எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாது இருந்தாலும்கூட, எங்களுடைய அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக தரப்பட்டது. ஆனால், அதை ஒரு பொம்மையாக வைத்து, தான் நினைத்ததை செய்யவேண்டுமென்றுதான் இந்த அரசாங்கம் விரும்புகின்றது. எங்களுக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி, இந்த மக்களைக் கொண்டே மாகாணசபையும் முதலமைச்சரும் சரியில்லையென்ற நிலைப்பாட்டை உருவாக்குவதற்கு, பல்வேறு வகையான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டம்.
இவ்வளவு பெருந்தொகைக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதை பார்க்கிலும், இலட்சக்கணக்கானவர்கள் இப்பகுதியில் வீடற்றவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கும் சேர்த்து வீடுகளை பாதி விலையில் அமைத்துக் கொடுக்கலாம். இந்த உருக்கு வீடுகள் எங்களது காலநிலைக்கு பொருத்தமற்றவை என கூறியிருந்தோம். அகதி முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு கட்டில்களையும், வாயு அடுப்புக்களையும், தளபாடங்களையும் கொடுக்கும் போது அது உருக்கு வீடோ, பொருத்து வீடோ அவர்களுக்கு அது பெரிதாகத்தான் இருக்கும். ஆனால் நாங்கள் தொலைநோக்கிலும் எல்லா மக்களையும் சார்ந்துதான் சிந்திக்க முடியும் என்றார்
No comments
Post a Comment