மே- 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் வழமைபோல மத்திய லண்டனில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் மாலை 3 மணியில் இருந்து 8 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டு மாபெரும் எழுச்சிப்பேரணி மற்றும் பொது கூட்டத்துடன் நினைவு கூரப்பட உள்ளது.
ஸ்ரீலங்கா இனவாத அரசுகளினால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 18-05-2009 அன்று வரை முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும்,
80,000 மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும், 25,000 திற்கும் மேற்பட்ட சிறார்கள் அனாதைகள் ஆக்கப்பட்டும், மேலும் 146,679 தமிழ் அப்பாவி இளைஞர்கள், யுவதிகள், பெண்கள், என பலர் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர்.
போர் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்த பின்னரும் ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பும், நில அபகரிப்புகளும், தொடர்ச்சியாக துரிதகதியில் எமது தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்பொழுது சர்வதேச சமூகம் எமக்கு நடந்த, நடந்துகொண்டிருக்கும் அநீதியின் ஒருபகுதியை விளங்கிக் கொண்டிருக்கும் இந்தவேளையில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களை அச்சுறுத்தி எமது நீதிக்கான போராட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப் பார்க்கின்றது.
எழுச்சி கொண்ட தமிழ் மக்களை போராடும் சக்திகளிடமிருந்து அந்நியப்படுத்தி விடலாம் என நினைக்கின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாகிய நாம் அதைப் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் முறியடிப்போமாக. அதேவேளை 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் தாயகத்தில் அவலப்படும் எமது மக்களுக்காகக் குரல் கொடுக்கும் புலம்பெயர் தமிழ்மக்களினதும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நீதிக்கான போராட்டங்களை ஸ்ரீலங்கா அரசு, தனது நாடுகடந்த பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் முடக்க முயல்கின்றது.
இதைப் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் அறிவுபூர்வமாக புரிந்துகொண்டு தக்க நேரத்தில் தக்க பதிலடிகொடுக்க மீண்டும் ஒருமுறை அனைத்து தமிழ்மக்களும் எழுச்சியுடன் அணி திரண்டு வாருங்கள்.
ஒன்றுபடுவோம்! அணி திரள்வோம்! தமிழின அழிப்பிலிருந்து எமது தாயாக மக்களைக் காப்போம்.
பிரித்தானிய தமிழர் பேரவை.
No comments
Post a Comment