நாக்பூர்: உலகக் கோப்பை டி20 தொடரில் வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே இங்கிலாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரை இறுதியை உறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கியது.
அதேசமயம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு இது முக்கியமான ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் தோற்றால் அவர்களின் அரையிறுதி கனவு மங்கிவிடும். இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் சமி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ரன்கள் எடுப்பதற்குள் ஆம்லா, டூ பிளசிஸ் மற்றும் ராஸவோவ் ஆகியோரை இழந்து தடுமாறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்ஸ் பிராவோவின் ஸ்லோ பந்து வீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அதிரடி வீரர் மில்லர் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் கெயில் பந்தில் போல்டானார். அதன் பிறகு டி காக்கும், டேவிட் விஸ்சும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். டேவிட் விஸ் (28), டி காக் (47) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பான பந்துவீச்சால் பின்னர் வந்த வீரர்கள் அதிரடியாக ரன் குவிக்க தவறினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன் எடுத்தது.
தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் கெயில் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான சார்ல்ஸ் 32 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்கள் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றதால் 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
No comments
Post a Comment