Latest News

March 05, 2016

புதிய சம்பளத்திட்டத்திலும் ஆசிரிய உதவியாளர்களது உழைப்புச் சுரண்டப்படவுள்ளது.
by admin - 0

புதிய சம்பளத்திட்டத்திலும் ஆசிரிய உதவியாளர்களது உழைப்புச் சுரண்டப்படவுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசினது புதிய சம்பளத் திட்டங்களில் மாதாந்தம் வெறும் 6000 ரூபாவை மாத்திரம் சம்பளமாகப் பெறும் ஆசிரிய உதவியாளர்களது சம்பள உயர்வு பற்றியோ அவர்களுக்கு வாழ்க்கைப்படி வழங்குவது பற்றியோ எதுவும் குறிப்பிடப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட்ட தமிழ் பகுதிப் பாடசாலைகளில் தமிழர்களை ஆசிரியர்களாக நியமிப்பதாகக் கூறி ஆசிரிய உதவியாளர்களாக நியமித்து அவர்களுக்கு வெறும் 6000 ரூபா சம்பளம் மட்டுமே மாதாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆசிரிய உதவியாளர்களாகவுள்ள ஆசிரியர்கள் தாமும் ஏனைய ஆசிரியர்கள் செய்கின்ற வேலையைத்தான் செய்து வருகின்றோம் எமது சம்பளத்தையும் அதிகரித்து வழங்குங்கள் என்று கோரி வருகின்ற போதிலும் இவர்களது நியாயமான கோரிக்கைகள் அரசாங்கத்தினால் கருத்தில் எடுக்கப்படாது புறந்தள்ளப்பட்டே வருகின்றது.
ஆசிரியர் உரிமைக்காகக் குரல்கொடுக்கின்ற ஆசிரியர் தொழிற் சங்கங்கள்கூட தமது முக்கியமான சம்பளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காதுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள ஆசிரிய உதவியாளர்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் தமக்கு வழங்கப்படும் வெறும் 6000 ரூபா சம்பளத்தைக் கொண்டு தாம் எப்படி வாழ்வது எனவும் ஆதங்கப்படும் அவர்கள் தமது உழைப்புச் சுரண்டப்படுவதை நல்லாட்சி அரசாங்கமும் ஏற்றுக்கொள்கின்றதா? எனவும் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
முலையகத்தில் சம்பளப் பிரச்சனை காரணமாக 250 இற்கும் மேற்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் வேலையை விட்டு விலகிச் சென்றுள்ளார்கள்.
வெறும் ஆறாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்திற்காக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதும் தமிழர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமித்து அவர்களது உழைப்பைச் சுரண்டிக் கொள்ளையடித்தது மகிந்த ராஜபக்ச அரசாங்கம் என்பதும் தமிழர்கள் என்பதால் ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கத்திலும் அதே நிலைதான் தொடர்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments