Latest News

March 17, 2016

மீண்டு...(ம்) வருமா? "பிரபாகரன் யுகம்'
by admin - 0

மே மாதம் 19ஆம் திகதியுடன் விடுதலைப் புலிகளுடனான இன அழிப்புப் போரை, தனது படையணி மூலமும் அயல் நாடுகளின் உதவி கொண்டும்  மகிந்த ராஜபக்ச முடிவுக்குக் கொண்டு வந்த பிற்பாடு, இந்த நாடு படும்பாடு இப்போது சொல்லுந்தரமன்று. அதிலும், யாழ். குடாநாடு படும் உபத்திரவங்கள் வார்த்தைகளால் எடுத்தியம்பவும், வரிகளாய் எழுதிக் கொள்ளவும் முடியாதவை.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து அந்தப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியதாகக் கூறும் இனவாதி மகிந்த ராஜபக்ச, தனது அரசாட்சிக் காலத்தில் தானே விதைத்த வினையைத் தற்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார். அதே சமகாலத்தில், யாழ். குடாநாடு தன்நிலை தாழ்ந்து பிறழ்வுபட்டிருப்பதற்கு இவரே காரணகர்த்தாவாக இருப்பதையும் மறுத்துரைக்க முடியாது.

இன்று யாழ். குடாநாட்டினுள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற கொலைகள், கொள்ளைகள், வன்புணர்வுகள் போன்ற சமூக முறைகேடுகளானவை மிகுந்து கொண்டிருக்கும் நிலை யில், எல்லோரும் கடந்துபோன காலத்தை, அதாவது போருக்கு முன்னைய பிரபாகரனின் காலத்தைக் குறித்து, இப்போது கழிவிரக்கப்படுகின்றனர். மீண்டும் அப்படியயாரு காலம் உருவாகிவருமா...? என்ற ஏக்கத்துடன் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

வன்னியில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதிக் கட்டத்தின்போது, புலிகள் அமைப்புக்குள்  இருந்த சிலரது செயற்பாடுகளால், "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்'  என்ற விடுதலை அமைப்பு தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, அவமானத்தைச் சுமந்து கொண்டமை வரலாறு. அந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் செயற்பாடுகளின் எதிர்விளைவுகளுக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பொறுப்பாளியல்ல என்பதை வன்னிப் போருக்குள் அகப்பட்ட பொதுமக்களும், புலிகள் இயக்கத்தைப் புரிந்து கொண்டவர்களும் தெரிந்தே வைத்திருந்தனர்.

"பிள்ளை பிடிப்பு' விவகாரம்

ஆரம்பத்தில் "பிள்ளை பிடிப்பு' விவகாரம் இயக்கம் மீது பொதுமக்களுக்கு ஒருவித வெறுப்பை உண்டு பண்ணிவிட்டிருந்தபோதிலும், தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனின் சாவு குறித்த செய்திகள் வெளியானது முதல் அவர் மீதும் இயக்கம் மீதும் தமிழ் மக்கள் மீண்டும் அனுதாப்பட ஆரம்பித்துவிட்டனர். இராணுவம் பாலச்சந்திரனைச் சுட்டுப் படுகொலை செய்ததன் மூலம் புலிகள்மீது வெறுப்பாயிருந்த மக்களை மீண்டும் அவர்கள் பக்கம் திரும்ப வைத்தமை ஒரு முரண் நகையாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், அந்நிய நாடுகளின் கூட்டு இராணுவச் சேர்க்கை மூலம் பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டதன் பின்பு, அந்த இயக்கம் மீது வெறுப்புக் கொண்ட பலருக்கும் இப்போது அவர் இல்லாத இடைவெளியை, அதன் மனவலியை குடாநாட்டின் சமகால நிகழ்வுகள் உணர்த்தத் தொடங்கியுள்ளன.

காரணம், புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் இராஜ தந்திர ரீதியில் அவ்வப்போது தோல்விகளைச் சந்தித்துக் கொண்டாலும், அவர்களது அரசியல் நடைமுறைகள் சிலரை முகம் சுழிக்க வைத்தாலும், அந்த இயக்கம் சமூகத்தின் பால் கொண்டிருந்த நாட்டமும், பொதுமக்கள் மீதான கரிசனையின் தீவிரப் போக்கும், நடை முறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்டதிட்டங்களின் இறுக்கமும், பாகுபாடற்ற நியாயத் தீர்ப்பும் அரசியல் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு அவர்களது எதிரிகளாலும் இன்றுவரை போற்றப்பட்டுகிறது. 

புலிகள் இயக்கத்தின் 
பெண்கள் மீதான கரிசனை

புலிகள் இயக்கம் பெண்கள் மீது கொண்ட கரிசனையானது அவற்றில் முக்கியமானது. பெண்கள் மீதான ஆணாதிக்கத்தின் அழுத்தங்களை  இது அடக்கி, முடக்கி, மடக்கியதோடு பெண்கள் சுதந்திரமாகத் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கும், தங்கள் கருத்துக்களைப் பகிரங்கமாக வெளியிடுவதற்கும்  வழி வகுத்துக் கொடுத்தது.

வன்னிப் பெருநிலப்பரப்பு மட்டு மல்ல, வலிகாம இடப்பெயர்வுக்கு முன்பு கூட யாழ். குடாநாடு பிரபாகரனின் ஆளுகைக்குள் இருந்தபோது வன்புணர்வுச் சம்பவங்களோ வாள்வெட்டு நிகழ்வுகளோ வழிப்பறிக் கொள்ளைகளோ நிகழ்ந்ததில்லை. தப்பித் தவறி மேற்கூறப்பட்ட அசம்பாவிதங்களில் ஏதேனும் ஒன்று நிகழுமாக இருந்தால்  இருபத்துநான்கு மணித்தியாலத்துக்குள் புலிகளின் புலனாய்வுப் பிரிவு மோப்பம் பிடித்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து விடும்.   

காட்டிக்கொடுப்புக்களாலும் கயமைத்தனங்களாலும் மகிந்த ராஜபக்சவால் எப்பொழுது புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து வன்னிப் பெருநிலப்பரப்பு மட்டுமல்ல யாழ். குடாநாடு மட்டுமல்ல, ஒட்டு மொத்த வடக்கு கிழக்குத் தமிழ்ப்பெண்களின் சுதந்திரமுமே கேள்விக்குறியாக மாறிவிட்டது. அத்தோடு அவர்களது வாழ்வியலும் அடிமைத்தனமாக்கப்பட்டுவிட்டது.

மின்கம்பத் தண்டனைகள்

இன்று குடாநாட்டில் தொடர்ந்து நடைபெறும் சமூக குற்றச் செயல்களை  நோக்கும்போது 80களின் மின்கம்பத் தண்டனைகள் ஏனோ ஞாபகத்துக்கு வருவதையும் தடுக்க முடியவில்லை.  பெண்கள் மீதான வன்புணர்வுச்  சம்பவங்களுக்கு அன்றைய மின்கம்பத் தண்டனை, குற்றவாளிகளை எச்சரிக்கப் போதுமானதாக இருந்தது. குற்றவாளிகள் பயந்து ஒடுங்கவும் திருந்தவும் வழிவகுத்துக் கொடுத்தது.

இப்பொழுது குடாநாடு எங்கோ போய் கொண்டிருக்கின்றது. இந்த நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்ததாகக் கூறும் மகிந்த ராஜபக்ச, அதைத் துன்மார்க்கர்களுக்கும், தூத்தேறிக் கூட்டங்களுக்கும் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. காலம் கடந்துதான்  அந்த உண்மை பலருக்குப் புரிவதுதான் வேதனை. 

புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் மகிந்த தரப்புக்கண்ட பலாபலன் என்ன? விதவைகளையும், அபலைச் சிறார்களையும், ஊனமுற்றவர்களையும் துன்புறுத்தல்களுக்கு உள்ளானோரையும் இந்த மண்ணில் நிரப்பி வைத்துவிட்டு எஞ்சியவர்களது இயலாமை மிகுந்த வாழ்க்கையைச் சீரழிப்பதற்கா தமிழ் மக்கள் மீதான போர் மகிந்தவால் தொடுக்கப்பட்டது?

பிரபாகரனை ஒழித்துவிட்டு, வருடா வருடம் போரின் வெற்றியைக் கொண்டாடும் சிங்கள தேசம், யாழ். குடாநாட்டில் கொலைகளையும், கொள்ளைகளையும் மட்டுமன்றி பாலியல் வன்புணர்வுகளையும் விதைத்தபடி - வேடிக்கை பார்த்து நகைப்பது எந்த வகையில் நியாயமாகப்படுகிறது?

புங்குடுதீவு மாணவி வித்தியாவிலிருந்து தொடங்கப்பட்ட வன்புணர்வானது, தொடர்ந்து கனகராயன் குளம் மாணவி  சரண்யா, கிளிநொச்சி எள்ளுக்காடு சிறுமி ஜெரூசா, வவுனியா உக்கிளாங் குளம் சிறுமி ஹரிஸ்ணவி எனத் தொடர்ந்து சாஸ்திரி கூழாங்குளத்தில் ஒரு சிறுமி மீது வந்து நிற்கிறது.

அடுத்த இரை யார்?

புங்குடுதீவு மாணவியின் படுகொலைச் சூத்திரதாரிகள் மீதான பொலிஸாரின் சட்ட நடவடிக்கைகள் "இறுக்கமாக' இருந்து அவர்கள் நீதியின் முன்பாகத் தண்டிக்கப்பட்டிருப்பின், அதற்குப் பின்பான மூன்று வன்புணர்வுச் சம்பவங்களும் நிகழ்ந்திருக்க வாய்ப்பேயில்லை என்பது பொதுமக்களின் கருத்து. இந்த வன்புணர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு, முழுஅடைப்பு எனப் பல விதமான "கூத்துக்கள்' அரங்கேற்றி முடிக்கப்பட்டுவிட்டன. 

இந்தக் கூத்துக்கள் மூலம் கண்டுகொண்ட பலாபலன்கள்தான் என்ன? ஊருக்கும் உலகுக்கும் ஒரு தடவை "பறை' தட்டிவிட்டு ஓய்ந்து போவதால்  வன்புணர்வுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை மற்றும் ஊத்தை வெளிப்பட்டு விடுமா? சாஸ்திரி கூழாங்குளம் சிறுமியில் வந்து முடிந்திருக்கும் காவாலித்தனம், நாளை குடா நாட்டில் இன்னொரு குடும்பத்துக்குள் நுழையாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இத்தகைய பாதுகாப்பு உத்தரவாதத்தை யார் வழங்குவார்கள்? அரசியல்வாதிகள் வருவார்களா? அன்றி ஆட்சியாளர்கள் வருவார்களா? 

இங்கே காக்கி உடுப்புப் போட்டவர்கள் என்ன செய்கிறார்கள்? வழிப்பறிக்கொள்ளையர்களோடும், வன்புணர்வாளர்களோடும் இந்தக் காக்கிச் சட்டைகள் கைகோர்த்து நிற்கின்றனவா? அன்றி கைலஞ்சம் ஏதேனும் பரிமாறப்படுகின்றதா?
இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகளோடு நித்தம் அல்லாடுகிறது யாழ் . குடாநாடு. இப்படியான கேள்விகளுக்கு மத்தியில்தான், குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுகின்ற மக்கள் இப்பொழுது பிரபாகரனின் காலத்தை நினைத்து ஏங்குகிறார்கள். அவ்வாறு அவர்கள் நினைத்துப் பார்ப்பதும் தவறில்லை. 

சிங்கள தேசத்தின் சட்டமும் நீதியும், காவல்துறையும் நல்லாட்சி அரசும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு, நடப்பிக்க வேண்டிய செயல்களை நன்றாக நடப்பித்துக் காட்டுமாக இருந்தால், பாதிக்கப்படும் குடும்பங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைத்துப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இங்குதான் அப்படி நடப்பதேயில்லையே!

இனிவரும் காலங்களில் சிங்கள தேசத்தின் சட்டமும் ஒழுங்கும் சரிவர இடம்பெறத்தவறின், குற்றவாளிகளால் பாதிக்கப்படுபவர்கள் யார் யாரோ, அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்களின் அரசியல் சுதந்திரத்துக்கு அப்பால் நின்று கொண்டு, தங்களது குடும்பத்தின் நலனுக்காகவும், தமது பெண்களின் பாதுகாப்புக்காகவும், ஒரு நீதியான நியாயமான பாராபட்சமற்ற தீர்ப்புக்காகவும், தங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சிங்கள தேசத்தின் சட்டதிட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்களுக்காகவே இங்கு ஒரு "வேலுப்பிள்ளை பிரபாகரனை' உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
- அலெக்ஸ் பரந்தாமன்
« PREV
NEXT »

No comments