நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் பல இலட்சம் பேரின் பங்குபற்றலுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இடம்பெறும். எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம். எனவே, அச்சமின்றி அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இன்றைய எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில், உண்மையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கூட்டு எதிர் கட்சியிலேயே உள்ளனர். இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தாய் நாட்டை பாதுகாப்பு மகத்தான கடமையை எதிரணியில் இருந்து முன்னெடுப்பதாகவும் கூட்டு எதிர் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே கூறுகையில் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நோக்கமும் அரசியல் நடவடிக்கைகளும் ஆட்சியை கைப்பற்றுவதற்காகவே அமைய வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமே தற்போதைய தேவையாகவும் உள்ளது. நாட்டில் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகள் இருக்க தக்கதாக இந்தியாவிற்கு நாட்டின் பொருளாதாரத்தை சூறையாட இடமளிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைப்பை முன்னெடுக்காமையினால் அதன் நன்மை இந்தியாவிற்கு செல்கின்றது. ஓரு மாதத்திற்கு 1.1 பில்லியன் ரூபாவை எரிபொருள் விற்பனையில் இந்தியா இலங்கையில் இருந்து பெற்றுக் கொள்கின்றது. ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றத்திற்கு செலவிட்ட பணத்தை தற்போது இந்தியா பெற்றுக்கொண்டு வருகின்றது. இதனை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி நாட்டை பாதுகாக்க முற்படும் போது எமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்கின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் அதற்கு மஹிந்த ராஜபக்ஷ தான் காரணம் என கூறுகின்றனர்.
இந்திய அமைச்சரவைக்கு தேவைக்கேற்ப இலங்கை செயற்பட வேண்டியதில்லை. எமது இன்றைய போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய ஆட்சிக்கு எதிராக கூட்டு எதிர் கட்சி வியாழக்கிழமை கொழும்பு – ஹைட்பார்க் மைதானத்தில் எதிர்ப்பு பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த எதிர்ப்பு பேரணி 6 விடயங்களை மையப்படுத்தியே முன்னெடுக்கப்படுகின்றது . அதாவது இந்தியாவிற்கு அடிப்பணிந்து எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுகின்றமை , விவசாயிகளுக்கான நிவாரண குறைப்பு , ஊடக அடக்குமுறை , தேர்தல் நடத்தாமை , அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் இராணுவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் இந்த விடயங்களை மையப்படுத்தியே கூட்டு எதிர் கட்சி எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.
எனவே இது முழுக்க முழக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு பேரணியாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தினை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கும் தேவை கூட்டு எதிர் கட்சிக்கு உள்ளது. அதற்கு எதிராக நாட்டு மக்களை அணித்திரள வைக்க வேண்டிய கடமை பொறுப்புள்ள எதிர் கட்சி என்ற வகையில் எமக்குள்ளது. அதனையே நாங்கள் தற்போது முன்னெடுக்கின்றோம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனென்னல் அது எமது கட்சி . கூட்டு எதிர் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து 39 பேர் இன்று பேரணியில் கலந்துக் கொள்ள உள்ளனர். எனவே கூட்டு அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் . ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதனை எதிர்கொள்ள தயாராகவே நாம் உள்ளோம் என்றார்.
No comments
Post a Comment