நாடுபூராகவும் நேற்று பல மணி நேரம் மின் விநியோகம் தடைப்பட்டது. நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் எட்டு மணிநேரத்தின் பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியது. பியகம உப மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் விளைவாகவே இலங்கை முழுவதும் இருளில் மூழ்கியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. அத்துடன் பல பகுதிகளில் நீர் விநியோகமும் தடைப்பட்டிருந்தது.
எட்டு மணிநேர மின் விநியோகம் தடைப்பட்டமையினால் நாட்டின் அனைத்து துறைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. குறிப்பாக வைத்தியசாலை சேவைகள் முழுமையாக பாதிப்படைந்திருந்தன.
மேலும் வீதி சமிக்ஞை விளக்குகள் இயங்கவில்லை. இதன்காரணமாக பிரதான நகரங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. அதேபோன்று ரயில் சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. அதுமாத்திரமின்றி பெற்றோல் நிலையங்களும் ஹோட்டல்களும் மாலை பொழுதிலேயே மூடப் பட்டன. இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடுபூராகவும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென மின்விநியோகம் தடைப்பட்டது. இதனைதொடர்ந்து சில இடங்களில் மாலை 5 மணியளவில் விநியோகம் வழமைக்கு திரும்பியது.
இருப்பினும் பெரும்பாலான இடங்களில் இரவு 7 மணிக்கு வழமைக்கு திரும்பினாலும் மீளவும் நாடு முழுவதிலும் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனையடுத்து இரவு 9 மணி தொடக்கம் 10 மணி வரையிலான காலப்பகுதிகளில் பெரும்பாலான பிரதேசங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.
6 மாதங்களில் 3 தடவை மின்விநியோகம் தடை
இந்நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு மூன்று தடவைகள் நாடுபூராகவும் மின்விநியோகம் தடைப்பட்டது. இந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு தடவைகள் விநியோகம் தடைப்பட்டது. இதன்படி கடந்த மாதம் 25 ஆம் திகதி விக்டோரியா நீர்மின் நிலையத்தில் மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக இரண்டரை மணிநேரம் நாடு முழுவதும் மின்விநியோகம் தடைப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் பியகம மின்உற்பத்தி நிலையத்தில் உயர் மின் அழுத்தின் விளைவாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக ஏழரை மணிநேரம் மின் துண்டிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் நேற்றைய தினம் 10.30 மணியளவில் பெரும்பாலான இடங்களில் நிலைமை வழமைக்கு திரும்பியது. இதன்படி கண்டி,கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் 10 மணிக்கும், யாழ்ப்பாணம் , வவுனியா ஆகிய பகுதிகளில் 10.30 மணிக்கும், திருகோணமலை ,மட்டகளப்பு ஆகிய பகுதிகளில் 10.10 மணியளவிலும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.
மின்சார சபையின் விளக்கம்
இது தொடர்பில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க அமைச்சின் செயலாளரிடம் வினவிய போது, பியகம பிரதேசத்திலுள்ள மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக மின் துண்டிப்பு ஏற்பட்டது. எனினும் மூன்று நாட்களுக்கு மின்விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும். அத்துடன் நுரைசோலை அனல் மின்நிலையத்தின் செயற்பாடுகள் மூன்று நாட்களுக்கு சிக்கலாக காணப்படும் என்றார்.
நீர் விநியோகமும் தடை
இதேவேளை நாடுபூராகவும் மின்விநியோகம் தடைப்பட்டமையினால் பல்வேறு பகுதிகளின் நீர் விநியோகமும் தடைப்பட்டிருந்தது. குறிப்பாக மாத்தறை , கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகள், நுவரெலியா போன்ற இடங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டது. அத்துடன் மின்விநியோகத்தின் தடைகாரணமாக அம்பத்தலை மற்றும் பியகம நீர்சுத்தகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் முழுமையாக பாதிப்படைந்திருந்தன.
போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்
அத்துடன் மின்விநியோக தடைகாரணமாக வீதி சமிக்ஞை விளக்குகள் துண்டிக்கப்பட்டமையினால் கொழும்பு , கண்டி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரயில் சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்து காணப்பட்டன. இதன்காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
வைத்திய சேவைகளும் பாதிப்பு இதேவேளை அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், பதுளை, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பிரதான வைத்தியசாலைகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டமையினால் நோயாளிகளும் பெரும் அசௌகரியங்கள் எதிர்கொண்டனர்களும் பாதிப்பு இதேவேளை நேற்று மின்விநியோகம் தடைப்பட்டமையினால் கொழும்பு ,கண்டி மற்றும் காலி உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஹோட்டல்கள் மாலை பொழுதில் மூடப்பட்டமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது. மேலும் இரவு நேரங்களில் பெற்றோல் நிலையங்கள் வெகு சீக்கிரத்துடன் மூடப்பட்டமையினால் பெற்றோல் நிலையங்களுக்கு அருகாமையில் நீண்ட வாகன நெரிசலை காணக்கூடியதாக இருந்தது.
மின்சார சபை தலைவர் இராஜினாமா
நாடுபூராகவும் ஆறுமாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பாரிய மின்துண்டிப்பு ஏற்பட்டதனை அடுத்து இலங்கை மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதன்படி இன்றைய தினம் அதற்கான இராஜினாமா கடிதத்தை அமைச்சரிடம் கையளிக்கவுள்ளார். மின் பொறியியல் துறையில் 20 வருட அனுபவத்தை பெற்ற இவர் , 2011 ஆம் ஆண்டு மின்சார சபையின் உபதலைவர் பதவியிலிருந்தமை குறிப்பிடதக்கது.
அமைச்சர் தலைமையில் இன்று விசேட சந்திப்பு
நாடுபூராகவும் ஆறுமாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிப்பு குறித்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சந்திக்கவுள்ளார். மேலும் இன்று காலை 10 மணிக்கு அமைச்சில் விசேட சந்திப்பொன்றும் நடைபெற்றவுள்ளது. தொடர் மின் துண்டிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
No comments
Post a Comment