நெடுந்தீவுப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்றது. அத்துடன் பிரதேச செயலர் எஸ்.ஜெயகாந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், அனந்தி சசிதரன் ஆகியோருடன் கடற்படையினர் பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளும் பங்கு கொண்டனர்.
மேற்படி இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
அந்த வகையில் நெடுந்தீவு மாலித்துறைமுகம் கடந்த காலங்களில் நெடுந்தீவு மக்களின் கட்டுப்பாட்டில் பாவனையில் இருந்துள்ளது. அதனை தற்போது கடற்படையினர் அபகரித்து தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே கடற்படையினர் இத்துறைமுக இறங்கு தளத்தை விட்டு வெளியேற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இத் தீர்மானம் இணைத் தலைமைகளினால் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் நெடுந்தீவுக்கான அம்புலன்ஸ் படகுச் சேவை மற்றும் வடதாரகை சேவை என்பன தனியாரினால் நடத்தப்படல் வேண்டும் என்றும் கோரி அத்துடன் நிரந்தர வைத்தியர் இல்லாத அவல நிலையை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். வைத்தியர் எழுதிக் கொடுக்கும் மருந்து சிட்டையை வாசிக்கும் அளவில் போதியளவு ஆளணி பற்றாக்குறை ஏற்படுகின்றது. அத்துடன் அவசர வைத்தியசேவைகள், போதிய வைத்திய சேவைகள் எதுவுமின்றிய நிலையில் மக்கள் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.
எனவே நெடுந்தீவு வைத்தியசாலைக்கு போதிய வைத்திய ஆளணிகளை வழங்குவதுடன் நிரந்தர வைத்தியராக ஆண் வைத்தியர் நியமிக்கப்படல் வேண்டும் என்றும் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய இணைத் தலைமைகள் இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்புவதாகவும் தெரிவித்தனர்.மேலும் விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம்., கமநலசேவைகள் திணைக்களம் என்பன முறையான திட்டங்கள் எதனையும் சபையில் முன்வைக்கவில்லை. இதற்கான நிதி ஒதுக்கீடு எதுவுமற்ற நிலையில் செயலற்ற நிலையில் இம் மூன்று திணைக்களங்களும் உள்ளன. அதேவேளை விவசாயம் கைவிடப்பட்ட நிலையில் உள்ளமை போன்றன கலந்துரையாடப்பட்டன. இந்த மூன்று திணைக்களங்களும் தங்கள் திட்டங்களை முன்மொழிய வேண்டுமென இணைத்தலைமையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கடல் அரிப்பைத் தடுப்பதற்கு கடல் அரிப்புத் தடுப்பணைகள் அமைக்கப்படல் வேண்டுமெனக் கூறிய அதிகாரிகளிடம் நீண்ட காலம் கோரிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்தத் தீவின் குடிமனைகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அபாயத்தினைத் தடுக்க கடல் அரிப்பு தடுப்பணைகள் அமைக்கப்படல் வேண்டும் என்றும் வெ ளிச்சக்கூடு, வெளிச்சக்கூட்டுக் கம்பம் என்பனவும் ஒழுங்கு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர். இதுதவிர இந்திய மீனவர்கள் தொடர்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது
No comments
Post a Comment