மதுரையில் பழங்காலக் கதை போலவே நாரை ஒன்று தெப்பக்குளத்தைச் சுற்றி வந்து உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட சம்பவம் பக்தர்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ‘‘நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை'' ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும். இந்த லீலையில் சொல்வது போல் சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளத்திற்கு நாரை ஒன்று வந்தது. அது பொற்றாமரை குளத்தை வலம் வந்தபடி இருந்தது.
அந்த நாரை, குளத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிவலிங்கத்தின் எதிரே நின்றிருந்தது. சிவனை நோக்கி தவம் செய்வது போல் இருந்ததாக, அதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தற்போது வெயில் கடுமையாக கொளுத்துவதால், நாரைக்கு நிழல் வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர் ஒருவர் குடையை விரித்து வைத்தார். உடனே அந்த நாரை குடையின் கீழ் ஒதுங்கி நின்றது.
இந்நிலையில் அந்த நாரை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதை பார்த்த பக்தர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் பட்டினியாகவே குளத்தை சுற்றி வந்த அந்த நாரை திடீரென்று நேற்று முன்தினம் இறந்தது. இதை அறிந்ததும் கோவில் நிர்வாகத்தினர், இறந்த நாரையை மீட்டு நல்லடக்கம் செய்தனர். நாரை உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்துள்ளது என பக்தர்கள் மனம் நெகிழ்ந்துள்ளனர்.
No comments
Post a Comment