எங்கள் குடும்ப கஷ்டத்தின் நிமித்தம் மன்னார் நகருக்கு சைக்கிளில் வியாபாரத்துக்கு சென்று வீடு திரும்பிய எனது கணவர் தாராபுர சந்தியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் இதுவரைக்கும் வீடு திரும்பவும் இல்லை எங்கு இருக்கின்றார் என்ற தகவல்களும்் இல்லை என பெண்ணொருவர் காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார்.
நேற்று திங்கட்கிழமை காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு மன்னாரில் நடத்திய அமர்வில் சாட்சியமளித்த
திருமதி இராஜரெட்ணம் லட்சுமி (வயது 64) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனது சாட்சியத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில் எனது கணவர் சுப்பையா இராஜரெட்ணம் (அப்பொழுது அவரின் வயது 45) 18.01.1991 அன்று எங்கள் குடும்ப கஷ்டத்தின் நிமித்தம் மன்னார் நகருக்கு வியாபார நோக்கத்துக்காக சைக்கிளில் சென்று பேசாலை சின்னக்கரிசலில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது தாராபுரம் சந்தியில் ரோந்தில் நின்ற இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டார்.
எருக்கலம்பிட்டியிலுள்ள இராணுவ முகாமைச் சார்ந்த இராணுவத்தினரே எனது கணவரை பிடித்தார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். அதனை கண்ணால் கண்டவர்கள் எனக்கு உடன் தெரிவித்தனர்.
ஏனென்றால் எனது கணவருடன் நான்கு பேர் வந்தனர். எனது கணவரை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு ஏனையோரை விடுவித்துள்ளனர்
இதைக் கேள்விப்பட்டு நான் உடன் தாராபுரத்துக்குச் சென்று அங்கு நின்ற இராணுவத்தினரிடம் விசாரித்தபோது தாங்கள் பிடிக்கவில்லையென தெரிவித்தனர்.
இவ்வாறு தள்ளாடி. எருக்கலம்பிட்டி ஆகிய இராணுவ முகாம்களுக்கும் சென்று விசாரித்தேன் ஆனால் அவர்கள் இதுவிடயமாக அக்கறையின்றி இங்கு எவரும் பிடிக்கப்படவில்லையென தெரிவித்தனர்.
ஆனால் இதுவரைக்கும் எனது கணவர் எங்கு இருக்கின்றார் என்று தெரியாத நிலை யில் இருக்கின்றேன் என்றார்.
No comments
Post a Comment