கெய்ரோ: எகிப்தில் இருந்து சைப்ரஸுக்கு கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விமானத்தை கடத்திய நபர் எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா என்பது தெரிய வந்துள்ளது.
எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்எஸ்181 இன்று கெய்ரோவுக்கு கிளம்பியது. விமானத்தில் 81 பயணிகள், 7 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் நாட்டில் உள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தை தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிய எகிப்தை சேர்ந்த இப்ராஹிம் சமஹா(27) என்பவர் கடத்தியது தெரிய வந்துள்ளது. எகிப்து அதிகாரிகள் சமஹாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
பேச்சுவார்த்தையின் பலனாக விமானத்தில் இருந்த 5 வெளிநாட்டு பயணிகள், 7 சிப்பந்திகள் தவிர்த்து பிற பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சமஹாவின் பிடியில் இருக்கும் 5 பயணிகளில் 3 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், ஒருவர் இத்தாலியர், ஒருவர் அயர்லாந்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சமஹா அரபு மொழியில் 4 பக்கத்திற்கு சைப்ரஸில் வசிக்கும் தனது முன்னாள் மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துள்ளாராம். அந்த கடிதத்தை அவரிடம் அளிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாராம். அவர் தனது மனைவியின் பெயரை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளாராம். மொழி பெயர்ப்பாளரை கேட்டுள்ள அவர் தனக்கு சைப்ரஸில் அரசியல் தஞ்சம் அளிக்குமாறும் கோரியுள்ளாராம்.
அதிகாரிகள் சமஹாவின் முன்னாள் மனைவியை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள பயணிகள், சிப்பந்திகளை மீட்க திட்டமிட்டுள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 22ம் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் இன்று எகிப்து பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே விபத்துகளால் விமானத்தில் செல்ல மக்கள் அஞ்சும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment