ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இரண்டு தலைவர்களுக்கு இடமில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக் ஷவும் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. கட்சியின் அங்கத்தவர்கள் அல்லாதவர்களும் கட்சியை விட்டு ஓரங்கட்டப்பட்டவர்க ளுமே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வீழ்த்த முயற்சிக்கின்றனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எமது தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவறாக விமர்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கட்சியின் மத்தியகுழு தீர்மா னிக்கும். கட்சியில் உள்ள அனைவருக்கும் தீர்மானம் பொதுவானது எனவும் குறிப்பிட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தை கட்டாயத்தின் பெயரிலோ தனக்குள்ள அதிகாரத்தின் மூலமோ பெற்றுக்கொள்ளவில்லை. அவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் கட்சியின் கொள்கைக்கு அமையவும் சட்டத்தின் பிரகாரமும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்தவராகவே உள்ளார். அதேபோல் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை ஆதரித்தனர். கட்சியின் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்த பின்னரே அவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டார்.
ஒருசிலர் தமது தனிப்பட்ட நோக்கங்களை மாத்திரம் கருத்தில்கொண்டு சுயநலமாக செயற்படுவதுடன் கட்சியை வீழ்த்துவது மட்டுமல்லாது ஜனாதிபதியின் காலைவாரும் செயலையும் மேற்கொண்டு வருகின்றனர். யாரும் ஏற்றுக்கொள்ளாத, பாராளுமன்றத்தில் சபாநாயகரால் கூட ஏற்றுக்கொள்ளாத பொது எதிரணியினர் என்ற குழுவினர் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வீழ்ச்சியை விரும்புகின்றனர். இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்துகொண்டு தலைமைத்துவத்தை வீழ்த்த கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்று கூறும் அணியில் எத்தனைபேர் உள்ளனர். சிறுசிறு கட்சிகளின் உறுப்பினர்கள் ஒரு சிலர் மாத்திரம் தலைமைதாங்கும் இந்த அணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்று எவரும் அங்கம் வகிக்க முடியாது. இந்த அணியினர் கூட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டுக் கட்சியாகவே இருக்கின்றனர். ஆகவே இவர்களை வைத்து மஹிந்தவோ அல்லது பசில் ராஜபக் ஷவோ கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்ற நினைப்பது சாத்தியமில்லாத விடயமாகும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இரண்டு தலைவர்கள் இல்லை. இரண்டு தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் அதன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தலைவராவார். கட்சியின் கொள்கைக்கு அமையவும், அரசியல் சட்டத்திற்கு அமையவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கட்சியை தலைமைதாங்க முடியும். அவ்வாறு இருக்கையில் கட்சியின் அங்கத்தவர்கள் அல்லாதவர்களும் கட்சியை விட்டு ஓரம்கட்டப்பட்டவர்களுமே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வீழ்த்த பார்க்கின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்ட பின்னர் அவர் நினைத்திருந்தால் இன்று கட்சிக்குள் இருந்து குழப்பம் விளைவிக்கும் அனைவரையும் கட்சியை விட்டு வெளியேற்றி இருக்க முடியும். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷவிற்கு கடந்த பொதுத் தேர்தலின்போது போட்டியிட அனுமதிக்காது நிராகரித்திருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யாது ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து கட்சிக்குள் இணைத்துக்கொள்ளவே முயற்சித்தார்.
நாம் கடந்த முறை தோல்வியடைந்த பொதுத்தேர்தலை தலைமை தாங்கியது மஹிந்த ராஜபக் ஷவேயாகும். அதை மறந்துவிட முடியாது. இந்த தேர்தலின் போதும் நாம் தோற்கவில்லை அவரால் தோற்கடிக்கப்பட்டோம். அதுவே உண்மையாகும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும். அவர் கட்சியை பலப்படுத்தாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை தோற்கடிக்கவே பிரசாரம் செய்தார். அந்த செயற்பாடுகள் தான் நாம் பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திக்கவும் காரணமாகும்.
எம்மை பொறுத்தவரையில் கட்சிக்குள் இப்போதும் இரண்டு தலைவர்கள் இல்லை. எமது தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமேயாகும். அவ்வாறு இருக்கையில் இப்போது மஹிந்த ராஜபக் ஷ எமது தலைவரை விமர்சித்து தவறான கருத்துக்களை முன்வைக்கின்றார். இந்த விமர்சனங்களை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாம் கடுமையாக கண்டிக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவில் வாழ்ந்துகொண்டு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் காலைவாரும் செயலை இவர் செய்கின்றார். அதேபோல் இவர்களின் இனவாதக் கருத்துகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக நிராகரிக்கின்றது. எமது கட்சியின் கொள்கையும் அதுவேயாகும். நாம் தமிழ், முஸ்லிம் சிங்கள மக்கள் அனைவரையும் ஆதரித்து செயற்படவே விரும்புகின்றோம் என்றார்.
அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டும் செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்சியின் மத்தியகுழு, மற்றும் கட்சியின் கொள்கைக்கு அமைய கட்சியை விமர்சிப்போர் கட்சியின் தலைவரை விமர்சிப்போர் என அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எமது தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவறாக விமர்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும். கட்சியில் உள்ள அனைவருக்கும் தீர்மானம் பொதுவானது என்றார்.
No comments
Post a Comment