Latest News

March 03, 2016

விமான நிலைய அபிவிருத்தியை எதிர்க்கவில்லை! முதலில் மீள்குடியேற்றத்தையே வலியுறுத்துகிறோம்! சீ.வி
by Unknown - 0

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை நிறுத்துமாறோ அல்லது மட்டுப்படுத்துமாறோ கேட்கவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களை மீளக்குடியமர்த்திய பின்னர் சகலவிதமான அபிவிருத்திகளையும் முன்னெடுக்குமாறே தான் கோரிக்கை விடுத்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய உத்தியோகபூர்வ அலுவலகத்தில் பத்திரிகையொன்றின் பிரதம ஆசிரியரைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் பலாலியை அண்டிய பகுதியே விவசாயத்துக்கு அவசியமான செம்பாட்டு மண்ணைக் கொண்ட செழிப்பான பிரதேசமாகும்.

இங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள் குடியமர்த்தப்படவேண்டும். அவர்களின் மீள்குடியேற்றத்தின் பின்னர் எந்த அபிவிருத்தியையும் அங்கு முன்னெடுக்கலாம் என்பதே எனது நிலைப்பாடாகும்.

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டு வெளியாகும் செய்திகள் கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு நான் அவ்வாறான எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எனது மக்களை அந்தப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்திய பின்னர் அதனை விரிவுபடுத்துங்கள் என்றே கோரியிருந்தேன் என்றார்.

முதற்கட்டமாக பலாலி விமானநிலைய சுற்றயல் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர் தேவையானளவு விமான நிலையத்தை விரிவுபடுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். விமான நிலைய விஸ்தரிப்புக்கு நான் நூறுவீதம் இணங்குகின்றேன்.

விமானநிலையமொன்றுக்கான அவசியம் இங்கு இருக்கிறது. பலாலி விமான நிலையத்தின் ஊடாக முன்னர் நான் பல தடவைகள் இந்தியா சென்று வந்தவன். இவ்வாறான நிலையில் விமானநிலைய அபிவிருத்திக்கு நானோ அல்லது வடமாகாண சபையோ முட்டுக்கட்டையாக இருக்கப் போவதில்லை.

மாறாக அபிவிருத்தி முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் எனது மக்கள் அந்தப் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதே தமது தெளிவான நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் எந்தவித அபிவிருத்தியையும் செய்யலாம். அபிவிருத்திகளை மேற்கொள்ளும் போது கடற்பிரதேசத்தையும் விஸ்தரித்து அதனையும் பயன்படுத்த முடியும். இது தொடர்பான ஆலோசனைகளையும் நாம் ஏற்கனவே இந்தியத் தரப்பிடம் வழங்கியுள்ளோம்.

அவ்வாறான திட்டங்களுக்கும் தாம் ஒருபோதும் எதிராக நிற்கப் போவதில்லை என்றும் வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments