ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வ தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒருபோதும் உடன்பாடில்லை. மக்களிடையே சக வாழ்வை ஏற்படுத்த வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும். எனவே, ஒற்றையாட்சிக் குள் அதிகாரப் பகிர்வு வழங்க முற்படும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்க்கின்றோமென ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
அதிகார பகிர்வு தொடர்பிலான மக்கள் விடுதலை முன்னணியின் நிலைபாடு குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் 1987ஆம் ஆண்டிலும் அதிகார பகிர்வு வழங்கப்பட்டது. ஆனால் இதனால் வடக்கு மக்களுக்கு மட்டுமல்லாது வேறு எந்த மாகாணங்களுக்கும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. எனவே அதிகார பகிர்வினால் பயனில்லை என்ற படிப்பினை எமது நாட்டு அரசியல் தலைமைகளுக்கு இருக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில் வடக்கு மக்களுக்கு அதிகாரப் பகிர்வினால் பெரும்பலன் கிடைக்குமென எதிர்பார்ப்பதும் வேடிக்கையான விடயமாகும். அதிகார பகிர்வை விடவும் வடக்கு மக்கள் சுதந்திரமாக அரசியல் பிரச்சினைகள் இல்லாமல் வாழும் சூழலை உருவாகிக் கொடுக்க வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.
யுத்தம் முடிவுற்று 5 வருடங்கள் கடந்த நிலையில் வடக்கு தமிழ் மக்களின் வாழ்வில் சுபீட்சம் ஏற்படவில்லை. வடக்கு தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி எமது நாட்டில் சகல பகுதிகளிலும் வாழும் தமிழ், சிங்கள,முஸ்லிம் மக்களுக்கான நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கபட வேண்டும். சகலரும் சமம் என மதித்து வாழும் சூழலை ஏற்படுத்தவே அரசாங்கம் முற்பட வேண்டும்.
அதிகார பகிர்வு விடயத்தில் தற்போது மக்கள் அவசரம் காட்டுதாக தெரியவில்லை. அரசியல் தலைமைகளுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற தேவை உள்ளது. வடக்கில் அரசியல் செய்பவர்கள் முதலில் மக்கள் தேவைகளை கவனிக்க வேண்டும்.
வடக்கில் கரையோர பகுதிகளில் வாழும் மக்களின் ஜீவனோபாயமாக மீன்பிடி தொழில் உள்ள போது அதனை இந்திய மீனவர்கள் சூறையாடுகின்றனர். மறுபுறம் மக்களிடையே பிரிவினைவாதம் தூண்டப்படுகின்றது. இதனால் பல சவால்களுக்கு வடக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளமை வருந்ததக்கது. அதனால் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து வடக்கின் மக்கள் பிரதிநிகள் கவனமெடுப்பார்களாயின் வரவேற்கத்தக்கது.
இவ்வாறிருக்க அரசாங்கம் தற்போது நாட்டில் சமஷ்டி ஆட்சிக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. ஆனால் அதற்கு மாறாக ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரம் பகிரப்படும் என்று கூறுவதையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
உலக நாடுகள் பலவும் அதிகார பகிர்வினால் உள்நாட்டு சிக்கல்களை தீர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்த போதும் மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் இதனை ஏற்காது. எவ்வாறாயினும் எமது நாட்டிற்கு அதிகார பரவலாக்கம் வேண்டாம். மாறாக மக்களிடையே சகவாழ்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றார்.
No comments
Post a Comment