தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் மாடியில் இருந்து, வர்த்தகர் ஒருவர் அவரது குடும்பத்தார் சகிதம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் சிறப்புக் குழுவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வீட்டின் ஒரு பகுதியை மட்டும் தீ எப்படி ஆக்கிரமித்தது, அதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடையை அறியவும் மரணமடைந்த நால்வரின் மரணத்துக்கு காரணம் என்ன என்பதை உறுதி செய்துகொள்ளவுமே மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீட்டின் சமையலறையை ஒட்டியுள்ள பெண்டி கபட் அருகே இருந்த இலத்திரனியல் ஓவன் மேல் நவீன கையடக்கத் தொலைபேசியொன்று மின் ஏற்றுவதற்கு போடப்பட்டிருந்துள்ளமையும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அதன் ஊடாக தீ ஏற்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கையடக்கத் தொலைபேசியின் எரிந்த பாகங்கள், இலத்திரனியல் ஓவனின் பாகங்கள், எரிந்த மின் ஏற்றியின் பகுதி உள்ளிட்டவை தீ ஆக்கிரமித்த விதம், அதற்கான காரணம் ஆகியவற்றை உறுதி செய்ய அரச இரசாயன பகுப்பாய்வாளர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் ஸ்தலம் விரைந்த அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளைக் கொண்ட விசேட குழு இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
ஓவன் மீது மின் ஏற்றுவதற்கு போடப்பட்ட கையடக்கத் தொலைபேசி வெடித்து அதன் ஊடாக ஓவனும் தீப்பிடித்து எரிந்த நிலையிலேயே அது பெண்ட்ரி கபட் மீது பரவியிருக்கலாம் எனவும் அதனால் கதவு மூடப்பட்ட அந்த சொகுசு வீட்டினுள் நச்சு கலந்த வாயு பரவி அதனை சுவாசித்ததால் குறித்த நால்வரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் விசாரணையாளர்களால் சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் நச்சு கலந்த புகையுடன் கூடிய வாயுவை சுவாசித்தமை ஊடாக மரணங்கள் சம்பவித்துள்ளமை தொடர்பில் சந்தேகிக்கத்தக்க காரணிகளை உதவி சட்ட வைத்திய அதிகாரி பிரசாந்தினி செனரத் வெளிப்படுத்தியிருந்தார்.
பெரும்பாலும் காபன் மொனக்சைட்டை ஒத்த நச்சு வாயுவொன்று இவ்வாறு அந் நால்வரின் உடலிலும் கலந்திருக்க வேண்டும் என சந்தேகம் வெளியிட்ட அவர் குறித்த நச்சுப் பதார்த்தம் என்ன என்பதை கண்டறிய நான்கு சடலங்களினதும் மாதிரிகளை மேலதிக ஆய்வுகளுக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் மரணமடைந்த நால்வரின் சடலங்களும் நேற்று மத கிரியைகளின் பின்னர் தெஹிவளை மற்றும் களுபோவில பகுதிகளில் உள்ள மையவாடிகளில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இதன் போது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஸாந்த கேசரியிடம் குறிப்பிடுகையில்
'இதுவரையிலான விசாரணைகளில் இந்த மரணங்களானது நச்சு வாயுவை சுவாசித்ததன் ஊடாக ஏற்பட்டுள்ளது என்பதையே எம்மால் அனுமானிக்க முடிகிறது. வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்பட்ட தீயினால் , சீல் செய்யப்பட்ட வீடு முழுவதும் பரவிய புகை மற்றும் பதார்த்தங்களால் உருவான விஷ வாயுவை தூக்கத்தில் இருந்த அவர்கள் சுவாசித்துள்ளனர். அதில் இருந்து தப்பிக்கவும் அவர்கள் பிரயத்தனம் எடுத்துள்ளனர்.
எனினும் அவை சாத்தியமாகவில்லை என தோன்றுகிறது. எவ்வாறாயினும் தீ பரவிய விதம், அதற்கான காரணம் ஆகியவற்றை உறுதிப்படுத்த அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையை நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அதுவரை எதனையும் உறுதியாக கூற முடியாது.' என்றார்.
No comments
Post a Comment