வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பிரதேசங்களில் தமது கைங்கரியங்களை அதிகரித்துக்கொள்ளும் முயற்சியிலேயே உள்ளனர். அண்மையில் கூட கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றை அமைத்துள்ளனர். எனவே அவர்கள் அங்கு பௌத்த மதத்தை பரப்பும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக நவசம சமாஜக் கட்சியின் பொருளாளர் வல்லிபுரம் திருநாவுக்கரசு தெரிவித்தார்.
நவசம சமாஜக் கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிலுள்ள இரு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சி நடத்துகின்றபோதும் அக்கட்சிகளுக்கிடையில் உள்ளக முரண்பாடு நிலவுவதை அவதானிக்க முடிகிறது. இரு கட்சிகளும் 2020 இல் தனித்து ஆட்சியமைப்பதை பிரதான நோக்காகக்கொண்டே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே தேசிய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் ஐக்கிய மக்கள சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராகக் பதவியேற்றுள்ள மஹிந்த அமரவீர, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தங்களிடம் பிரத்தியேகமான நிலைப்பாடொன்று உள்ளதாகவும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டால் அதனை நடைமுறைப்படுத்தத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் இதுவரையில் உறுதியான நிலைப்பாடில்லை என்றே கூறவேண்டியுள்ளது.
மேலும் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சென்று வலிகாமம் வடக்கிலுள்ள சுமார் 700 ஏக்கர் காணிகளை மக்களுக்கு கையளித்தார். எனினும் அவை இன்னும் பூரணமாக மக்களிடம் கையளிக்கப்படவில்லை என்ற தகவலை எம்மால் அறியமுடிகிறது. ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக காணிகளை மக்களிடம் கையளித்தாலும் அங்குள்ள இராணுவ முகாம்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அதனால் மக்கள் அக்காணிகளை உரித்துடையதாக்குவதில் சிக்கல்நிலை உள்ளது.
மேலும், எதிவரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் காணிகள் அனைத்தையும் மக்களிடம் கையளிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. எனினும் அது நடைமுறைச் சாத்தியம் அற்ற விடயம். ஆகவே யதார்த்தமான கால அவகாசத்தை வழங்கி காணிகளை மக்களிடம் கையளிக்க ஆவன செய்ய வேண்டும்.
மேலும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அப்பிரதேசங்களில் இன்னமும் தமது கைங்கரியங்களை அதிகரித்துக்கொள்ளும் முயற்சியிலேயே உள்ளனர். அதனை அங்கீகரிக்க முடியாது. மேலும் அண்மையில்கூட இராணுவத்தினரால் கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மகாபோதியிலிருந்து வெள்ளரசு மரக்கிளையொன்றையும் கொண்டுசென்று அங்கு நாட்டியுள்ளனர்.
அதுமாத்திரமன்றி கரையோரப்பகுதியிலும் கடற்படை யினர் பௌத்த விகாரைகள் அமைக்கும் பயணியினை மேற்கொண்டு வருகின்றனர். பௌத்தமதம் புனித மான மதமாகும். எனினும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடபகுதியில் பௌத்த விகாரைகள் அமைக் கப்பபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment