Latest News

February 25, 2016

கப்டன்.வேங்கை அமைதி,உறுதி இது தான் வேங்கை.! - ஈழத்து துரோணர்..
by admin - 0

வேங்கையை நான் 1997இன் ஆரம்பத்தில் யாழ்பாணத்தில் நின்ற போது, எதிரியின் மிகப்பெரிய சுற்றி வளைப்பினால் யாழின் கண்டல் காடுகளுக்குள் போன போது, அங்கு பல போராளிகள் வந்திருந்தனர். அங்கு வந்திருந்த போராளிகளில் ஒருவனாக தான் கப்டன். வேங்கையும் வந்திருந்தான். அன்று தான் நான் முதல் முதலில் வேங்கையை சந்தித்தேன்.

உயர்ந்த மெலிந்த தேகம் கொண்டவன் வேங்கை. எப்போதும் அவனது துப்பாக்கி இல்லாமல் அவனை காணமுடியாது. அவனது T56-2ஐ சாரம் ஒன்றில் சுற்றியே வைத்திருப்பான். கோள்சறை கட்டியபடி தான் நித்திரையும் கொள்வான். இதனால் எல்லோரது கேலிக்கும் நையாண்டிக்கும் அடிக்கடி இலக்காவான். அவனுடன் லெப்.தமிழ்மாறன் என்னும் போராளியும் இருந்தான். இவர்கள் இருவரும் தான் ஒரு அணி !.

அந்த முற்றுகையில் இருந்த போது, அங்கிருந்த போராளிகளுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அப்போது வேங்கயை பார்த்த போது அமைதியாக, சிந்தனையில் இருப்பது போல தோன்றியது.

அவனோடு கதைக்க வேண்டும் போல தோன்றியதால், அவனுடன் உரையாட ஆரம்பித்தேன். தான் வவுனியாவை சேர்ந்தவன் என்றும், பெற்றோர் மற்றும் இரண்டு பெண் சகோதரர்கள் உள்ளதையும் கூறி, அவர்களை பற்றியே கதைத்து, அவர்கள் நினைவில் மூழ்குவான்.

எல்லா போராளிகளை போலவே தனது குடும்பத்தாரில் அன்போடு அவனும் இருந்தான். ஆனால் அதைவிட தன் தாய்நாட்டை மிகவும் நேசித்தான்.

எம் போராளிகளின் உறுதியின் பின்னால் உள்ள ஈரம் இது தான்.

வேங்கை ஒரு அரசியல் துறையை சேர்ந்த போராளி. யாழ் செல்லும் படையணியில் இருந்து இங்கு தாக்குதலுக்காக வந்திருந்தான்.

முற்றுகையை நாம் உடைத்த பின் (இந்த முற்றுகை பற்றி கணேஷின் பதிவில் விபரமாக குறிப்பிட்டுளேன்) எதிரி முகாமிற்கு திரும்பி சென்றதும் வேங்கையும்,தமிழ் மாறனும் ஒரு தாக்குதலுக்காக வல்வையில் நுழைந்த போது எதிரியின் தாக்குதலில் லெப்.தமிழ் மாறன் வீரசாவடைந்து விட்டான்.வேங்கை மட்டும் தப்பி வந்திருந்தான்.!

அந்த நேரத்தில் என்னை சந்திக்க வேங்கை வந்திருந்தான். அவனது துணை வீரசாவடைந்தமையால் மனம் உடைந்து போயிருந்தான். அவனை நினைத்து எனக்கும் வேதனையாகவே இருந்தது. நானே அவனை தேற்றினேன். அத்தோடு, அவனை உடனே வன்னி வரும் படி கட்டளை வந்திருந்தது.

மிகவும் மன விரக்தியுடன் என்னிடம் வந்து, அண்ணை, என்னை வன்னிக்கு வர சொல்லிட்டினம். நான் போனால், இனிமேல் என்னை திரும்பி யாழ்பாணம் வர விட மாட்டினம் என்றான் ஆதங்கத்துடன்.

ஏன் என்று நான் கேட்டதற்கு, "நானும் லெப்.தமிழ்மாறனும் ஆளுக்கு இரண்டு சிறிய கிளைமோருடன் இங்கு வந்தோம். எங்களில் ஆறு பேர் வந்து இரண்டு இரண்டா பிரிஞ்சிட்டம். அவங்கள் கொண்டு வந்த கிளைமோர அடிசிட்டங்கள். நான் தான் இன்னும் அடிக்கேல்லை என்றான்" விரக்தியுடன்.

இவர்களுக்கான கட்டளை, கொண்டு வந்த கிளைமோரை மூன்று மாதத்துக்குள் வேவு எடுத்து எதிரிக்கு அடிக்க வேண்டும். அடிக்காமல் போனால் மீண்டும் சண்டைக்கு விட மாட்டினம் என்றான் ஆதங்கத்துடன். போராளிகளின் கனவே சண்டையில் பங்கு பற்றுவதே. அவன் மட்டும் விதிவிலக்கா என்ன? (சண்டைக்கு போகாமல் வெளிவேலை செய்தவைக்கு தான் தெரியும் அந்த கொடுமை.)

அது தான் ஏதாவது இலக்கு இருந்தால் சொல்லுங்கோ அண்ணை, நான் போக இரண்டு நாள் இருக்கு, எப்படியாவது அதுக்குள்ள அடிக்கோனும் என்றான். அப்போது என்னுடன் இருந்த மேஜர்.யூதன் அச்சுவேலியில் ஒரு இலக்கொன்றை பார்த்து வைத்திருந்தான். எனது வேண்டுகோளுக்கு இணங்க, தான் பாத்து வைத்திருந்த அந்த இலக்கை வேங்கைக்கு கொடுக்க சம்மதித்தான்.

அது விடுமுறையில் செல்லும் எதிரிகளை, ஏற்றி செல்லும் பேரூந்து ஒன்று, பலாலிக்கு செல்லும் வழியில் அச்சுவேலியில் ஒரு இடத்தில் வைத்து தாக்குவதற்கு, யூதனால் இடமும் பார்க்க பட்டிருந்தது.

அடுத்த நாள் அதிகாலை அச்சுவேலிக்கு செல்வதாக தீர்மானித்து மூவரும் வாதரவத்தைக்கு அருகில் இருந்த சுடலை மண்டபத்தில் படுத்திருந்தோம். (பெரும்பாலும் அங்கு தான் படுப்போம்) அந்த நேரத்தில் எமது பாதுகாப்பு கருதி கூடியவரை குடிமனைகளில் இருந்து விலகியே (பெரும்பாலும் எதிரி ஊகிக்காத இடங்கள்) படுக்க செல்வோம்.

கூரை இல்லாத மண்டபத்தில் நிலவொளியின் வெளிச்சத்தில், மனமும் அமைதியாக, உடல் அசதியினால் உறங்கிப்போனோம். 
அடுத்த நாள் பொழுது எந்த சிக்கலும் இல்லாது விடிந்தது. காலை 8 மணி போல் வாதரவத்தை பிள்ளையார் கோவில் கிணற்றில் குளித்துவிட்டு அந்த மக்கள் தந்த உணவை உண்டு விட்டு ஆயத்தமானோம்.

இதில் என்னிடம் மட்டும் அடையாள அட்டை இருந்தது. எனது வேலையின் நிமித்தம் அடிக்கடி எதிரி பகுதிக்குள் சென்று வருவதால், அது எப்போதும் என்னுடன் கூடவே வைத்திருப்பேன். வீதியில் போகும் போது, மறிக்கும் எதிரிக்கு ID காட்டி, அவனுக்கு விருப்பமே இல்லாமல் புன்னகைத்து, நலம் விசாரித்து தப்பி செல்வதே வழமை.

அனால் வேங்கையும், யூதனும் அப்படியல்ல. எதிரியை களத்தில் சந்தித்தவர்கள். எதிரியை கண்டதும் சுட்டுத்தான் பழக்கம். அதனால் ராணுவத்தின் சோதனை சாவடியில் அவனிடம் முட்டாமல் நாம் பாத்து வைத்திருக்கும் கள்ளப்பாதைகலால் தான் எமது போக்கு வரத்து இருக்கும்.

அந்தப் பாதைகளில் எமக்கு முன்னால், எமது நம்பிக்கையான ஒரு ஆதரவாளன் செல்ல, சற்று இடைவெளி விட்டு போராளிகள் பின்னால் செல்வார்கள். அப்போது, எதிரி நின்று மறித்தால் எமது ஆதரவாளன் குறிப்பிட்ட சைகை ஒன்றை செய்ததும் இவர்கள் வேறு பாதையால் திரும்பி வந்து விடுவார்கள்.

அன்றும் அது போலவே எமது பயணம் ஆரம்பமானது. நான் எனது வேலையின் நிமித்தம், ஒருவரை சந்திக்க சென்று விட்டு அச்சுவேலியில் குறிப்பிட்ட வீடொன்றில் நநிற்பதாக கூறி கணேசுடன் சென்றுவிட்டேன். அவர்கள் திரும்பி போகும் பாதை என்பதால், போகும் போது எங்களையும் கூட்டிச்செல்லும் படி கூறிவிட்டு நாங்கள் பிரிந்து சென்றோம்.

யூதன், இலக்கிற்கான இடத்தை வேங்கைக்கு காட்டிய பின், வேங்கை சைக்கிளை மிதிக்க யூதன் முன்னால் இருந்த படி எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது வேங்கை சீற்றில் இருந்த படியும், யூதன் சைக்கிள் பாரில் இருந்து நிலத்தில் காலை ஊன்றியபடி நின்றான். நான் அவர்களோடு போக ஆயத்தமான போது, வேறு வேலையாக கணேஷ் சென்றுவிட்டான்.

அந்த நேரம் எமது ஆதரவாளனின் தங்கை "அண்ணாக்கள் நில்லுங்கோ தேசிக்காய் தண்ணி கரைக்கிரன் குடிச்சிட்டு போங்கோ என்று உபசரித்தாள். அப்போது அவள் அண்ணாக்கள் உள்ளுக்கை வந்து இருங்கோ என்று கூறவும், வேங்கை சொன்னான் இல்லை தங்கச்சி, நாங்கள் இதில நிண்டு குடிச்சிட்டு போரம்" என்றான்.

அவன் அன்று வீட்டினுள் வந்திருந்தாள் அந்த விபரீதம் நடக்காமலும் போயிருக்கலாம்? அந்த நேரத்தில் அவன் ஒருவித பதட்டத்தில் இருந்தான். முதல் முதலில் பல எதிரியை, வீதியில் வரும் போது பக்கத்தில் பாத்தும் கூட, அவர்களை சுடாது வந்திருந்தது அதுவே அவனுக்கு முதல் முறை. இது அவனுக்கு பழக்கமும் இல்லை.

அப்போது அந்த தங்கை கொண்டு வந்த தேசிக்காய் தண்ணியை குடித்து விட்டு வெளிக்கிட ஆயத்தமான போது, அந்த வீதியால் உடல் பயிற்சிக்காக ஓடி வந்த ஒரு எதிரி அதிகாரிக்கு பாதுகாவலுக்கு 5 இராணுவமும் கூடவே வந்தார்கள். அவர்களை கண்டதும் வேங்கை மேலும் பதட்டமடைய ஆரம்பித்தான். நான் அவனை சாந்தப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

ஏனெனில் அவர்களுக்கு சந்தேகம் இல்லாது அந்த இடத்தை விட்டு கழரவேண்டும் என்பதே என் நோக்கம். அப்போது வேங்கை ஓடுவம், ஓடுவம் என்று கூறி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். அப்போது அந்த அதிகாரி ஏய் ஏய் நில்லு நில்லு என்று கத்தினான். நிக்கா விட்டால் அடுத்தது சுடுவார்கள் என்பது தெரியும்.

இனிமேல் நின்றும் பிரியோசனம் இல்லை என்பதால், உடனே யூதன் தன்னிடம் இருந்த "செக்கன் குண்டை அடித்தான்" (ஏனைய குண்டுகள் கிளிப்பை கழட்டி எறிந்தால் 4விநாடியில் வெடிக்கும். அனால் செக்கன் குண்டுக்கு நேர எல்லை, இல்லை. அது எங்கு மோதுகின்றதோ அங்கேயே வெடிக்கும்.

அந்த நேரத்தில் எமது பிரிவுப்போறாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அது கட்டை விரல் அளவே என்பதால் கையில் இருப்பது தெரியாது. ஆனால் அதன் சேதம் சாதாரண குண்டிற்கு இணையானது)

குண்டு வெடித்த, நேரத்தில் கிடைத்த இடைவெளியில் மூவரும் தப்பி ஓடினோம். குறிப்பிட்ட சந்தி ஒன்றில் என்னை விட்டு இவர்கள் பிரிந்து சென்று விட்டார்கள். நான் வேறு பாதையால் வாதரவத்தைக்கு வந்து விட்டேன்.

இது போன்ற கலைபடுதல் வழமையாக யாழில் நடப்பது தான். பிறகு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று சேருவது வழமை. ஒரு மணித்தியாலத்தின் பின் யூதன் வந்து சேர்ந்தான். எங்கையடா வேங்கை என்று கேட்டேன். அவனது முகவாட்டம் அந்த துயரத்தை கூறியது.

இவர்கள் தப்பி ஓடும் போது அந்த வீதியில் கல்லுகள் அதிகம் இருந்தமையால், (அந்த வீதி குன்றும், குழியுமாக இருக்கும்) கல்லு குத்தியதால் சைக்கிள் காற்று போய்விட்டது. அதனால் இருவரும் சைக்கிளை போட்டு விட்டு ஓடி வரும் போது, வேங்கை தன்னிடம் இருந்த ஒரு குண்டை, தங்களை துரத்தி வந்த எதிரி மீது அடித்துவிட்டு மதில் ஒன்றால் ஏறிப் பாய்வதற்கு முயற்சிக்கும் போதும், எதிரி சுட்டதில் வேங்கையின் காலில் சூடு பட்டு விழுந்து விட்டான்.

யூதன் மதிலால் பாய்ந்து விட்டான். மீண்டும் வேங்கையின் நிலை கண்டு அவனுக்கு உதவி செய்ய, மதிலால் பாய எத்தனிக்கும் போது, வேங்கை மறுத்து இனிமேல் தன்னால் ஓட முடியாது எனக் கூறி, இவனை தப்பி ஓடும் படி கூறி உள்ளான்.

இவன் மனமில்லாது தொடந்து நின்ற போது, தன்னிடம் உள்ள மற்ற குண்டின் கிளிப்பை கலட்டி விட்டு இவனை தப்பி ஓடும் படி மீண்டும் கூறிவிட்டு, எதிரியிடம் உயிரோடு பிடிபட கூடாது என்பதற்காக தன்னோடு அந்த குண்டை வெடிக்க வைத்து வீரசாவடைந்தான்.

ஒரு இனிமையான, அமைதியான போராளி அன்று மௌனித்து போனான். அவனது வீரச்சாவின் பின் 5ம் நாள் அவனது கிளைமோர் கொண்டு, எதிரியை தாக்கி எட்டு இராணுவத்தை கொன்று அவனது கனவை நிறைவேற்றிய போதும், அவனது தோழர்களின் மனம் அமைதியாக வில்லை.! 
நினைவுகளுடன் துரோணர்..!
« PREV
NEXT »

No comments