Latest News

February 23, 2016

வவுனியாவில் ஹரிஸ்ணவி படுகொலை சம்பவம் இவ்வாறு தான் நடந்தது! நல்லாட்சி அரசாங்கம் எங்கே
by admin - 0

ஹரிஸ்ணவி… ஹரிஸ்ணவி என்று அழைத்தவாறு கேற்றை திறந்து உள்ளே சென்று கதவை திறந்தபோது அந்த தாய் ஒரு நிமிடம் ஆடிப்போய் அம்மா ஏன் இப்படி செய்தாய்… என்ன நடந்தது என அலறினாள்..’

அந்த தாயின் வலியின் குரல்கள் கேட்டு அக்கம் பக்கம் எல்லாம் ஓடிவந்தது. கட்டிலில் தனது மகளை படுக்க வைத்து தாய் கண்ணீர் மழை பொழிந்து கொண்டிருந்தாள். அன்று அந்த தாய்… இன்று வவுனியாவே சோகத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன…?, யார் இந்த ஹரிஸ்ணவி…? அவருக்கு என்ன நடந்தது…?

கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமையும் வழமை போலவே விடிந்தது. பாடசாலைக்கு சென்ற மாணவர்கள ஒருபுறம். வேலைக்கு சென்ற உத்தியோகத்தர்கள் மறுபுறம் என வழமை போலவே அந்த காலை சுறுசுறுப்பக இயங்கியது.

ஆனால் கங்காதரன் மாதினியின் வீட்டில் மட்டும் காலையில் ஒரு சலசலப்பு. மாதினியின் இரண்டாவது மகள் மட்டும் இந்த சீருடையுடன் பாடசாலை செல்ல மாட்டேன் என அடம்பிடித்தாள்.

அவளின் அந்த ஆதங்கத்தைப் புரிந்த தாய் நாளை வேறு சீருடை வாங்கித் தருவதாக கூறி, அவளை சாமாதனப்படுத்திவிட்டு பாடசாலைக்கு சென்று விட்டாள். பாடசாலை முடிந்ததும் வீடு வந்த போது தான் தனது மகளின் நிலை கண்டு அதிர்ந்து போனாள்.




ஆம், மாதினியின் கணவரான கங்காதரன் யுத்த அச்சுறுத்தல் காரணமாக ஜேர்மன் சென்று அங்கு கடந்த 9 வருடமாக வாழ்ந்து வருகின்றார். மனைவி மாதினி வவுனியா விபுலானந்தா கல்லூரியின் ஆசிரியர்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தது தரம் 10 இல் கல்வி பயிலும் ஆண்பிள்ளை. மற்ற இரண்டு பேரும் தரம் 9, தரம் 5 இல் கல்வி பயிலும் பெண் பிள்ளைகள். தந்தை கூட இல்லாத போதும் அந்த குறை இல்லாது ஆசிரியரான தாய் தனது பிள்ளைகளை நன்றாகவே கவனித்து வந்தாள். கல்வியிலும் அவர்கள் சாதித்தே வந்தார்கள்.

தாய், மூன்று பிள்ளைகள் என அக்கம், பக்கம் எந்த சோலி, சுரட்டுக்களுக்கும் செல்லாது சந்தோசமாக தாம் உண்டு தமது வேலையுண்டு என வாழ்ந்து வந்தார்கள். அமைதியான குடும்பம் அது. அந்த குடும்பத்தின் அமைதியைக் குழைத்து சூறாவளி வீசிய நாள் தான் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை. அப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்காத நாள். காமவெறியர்களின் கரங்கள் படிந்த நாள்.

காலை விடிந்ததும் வழமை போல் அவசர அவசரமாக பாடசாலைக்கு செல்வதற்காக மாதினி சமைத்துக் கொண்டு இருந்தாள். பிள்ளைகள் வழமை போல தமது வேலைகளை முடித்து பாடசாலைக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

ஆனால் ஹரிஸ்ணவி மட்டும் தனது பள்ளிச் சீருடை ஊத்தையாக உள்ளது. எனக்கு வேறு சீருடை வேணும். சீருடை இல்லாவிட்டால் போகமாட்டேன் என தாயுடன் அடம்பிடித்தாள். தாயும் பாடசாலைக்கு நேரமாகியதால் அவளை சாமாதானப்படுத்தி விட்டு சீருடை வந்து வாங்கித் தருவதாக கூறினாள்.

அப்போது ஹரிஸ்ணவி நான் அப்ப இன்றைக்கு பாடசாலை போகமாட்டேன் என நின்றாள். தாயும் வழமையாக சிலவேளைகளில் இவள் வீட்டில் தனிமையில் நிற்கிறவள் தானே. என கருதி அன்றும் தனிமையில் நிற்க அனுமதித்தாள்.

வவுனியா, விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்கின்றாள் ஹரிஸ்ணவி (வயது 14). உக்குளாங்குளம், நான்காம் ஒழுங்கையில் ஒரு சிறிய வீடு. வீட்டின் முன்னால் வீதி. மறு பக்கம் ஒரு வீடு.

மற்றை இரண்டு பக்கங்களிலும் வெற்றுக் காணிகள். ஹரிஸ்ணவி வீட்டில் நிற்க தாய் மாதினி மற்றைய பிள்ளைகளுடன் பாடசாலை புறப்பட்டாள். கேற்றை பூட்டிவிட்டு சென்றாள். ஹரிஸ்ணவியை அழைத்து கேற் பூட்டியிருக்கு, உள்ளே இரு. நான் வந்து சீருடை வாங்கித் தருகிறேன் என கை அசைத்து தனது பிள்ளையிடம் இருந்து விடைபெற்று சென்றாள்.


அது தான் தனது பிள்ளையுடன் கதைக்கும் இறுதி வார்த்தைகள் என்பதை அவள் அந்தகணம் உணர்ந்திருக்கவில்லை. உணர்ந்திருந்தால் அந்த தாய் தனது மகளை தனிமையில் விட்டு சென்றிருக்க மாட்டார்.

பாடசாலை முடிந்ததும் 2.30 மணிக்கு வீட்டிற்கு வந்த தாய் மாதினி மற்றும் பிள்ளைகள் வழமை போன்று தாய் போகும் போது பூட்டிவிட்டுச் சென்ற கேற்றை திறந்து உள்ளே சென்றாள். வீட்டின் கதவு லேசாக சாத்தப்பட்டு இருந்தது. கதவைத் திறந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. கதவைத் திறந்த மாதினி ‘ஹரிஸ்ணவி… ஹரிஸ்ணவி’ என அழைத்து கதறினாள்.

தனது மகளை காப்பாற்ற வேண்டும் என முனைந்தாள். ஹரிஸ்ணவி வீட்டு அறையில் உள்ள சேலை ஒன்றினால் சுருக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தாள். வீட்டில் இருந்த பொருட்கள் அலங்கோலமாக சிதறுண்டு இருந்தது. ஹரிஸ்ணவியின் கண்கள் முழுமையாக மூடப்படவில்லை. சாப்பாடு குழைத்தபடி மற்றைய அறை ஒன்றில் அப்படியே இருந்தது.

மகளை காப்பாற்றி விடலாம் என கதறியவாறு சுருக்கில் இருந்து கழற்றி கட்டிலில் படுக்க வைத்தாள். ஹரிஸ்ணவி அணிந்திருந்த ரவுசரின் பட்டன்கள், சிப்பு என்பன கழற்றப்பட்ட நிலையில் இருந்தது. தாய் அதனை பூட்டிவிட்டாள். அப்போது ஹரிஸ்ணவி இந்த உலகை விட்டு விடைபெற்றது தெரிந்தது. சோகமயமானது வீடு.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் ஓடிவந்தார்கள். பொலிசாருக்கு தகவல் பறந்தது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது மகள் காலையில் தன்னுடன் சீருடை கேட்டு கோபித்ததை தாய் கூறினாள்.

அதனால் இது தற்கொலை என பொலிசார் கருதினர். அங்கு சென்ற இணைய ஊடகம் ஒன்றிடமும் தாய் அவ்வாறே கூற ஹரிஸ்ணவி தற்கொலை செய்து கொண்டு விட்டதாக வேகமாக கதை பரவியது.

ஆனால் திடீர் மரண விசாரணை அதிகாரி வந்ததும் நிலமை வேறுவிதமாக சென்றது. திடீர் மரணவிசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் மாணவியின் சடலத்தை பார்வையிட்டதுடன் அங்குள்ள நிலமைகளையும் அவதானித்து விசாரணைகளை மேற்கொண்டார்.


மாணவி அணிந்திருந்த மோதிரம் மற்றும் மாணவியிடம் இருந்த 17,000 ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசி என்பனவும் காணாமல் போயிருந்தது. மாணவியின் உள்ளாடைகள் கழையப்பட்டிருந்தது. காலையில் அணிந்திருந்த காற்சட்டை மாற்றப்பட்டிருந்தது. அவசர அவசரமாக ரவுசர் ஒன்று அணிவித்திருந்த நிலையில் காணப்பட்டது. அப்போது தான் தெரிய வந்தது இது தற்கொலை அல்ல கொலை என்பது.

விழித்துக் கொண்ட பொலிசார் தமது விசாரணைகளை தீவிரப்படுத்த தொடங்கினர். பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. சட்ட வைத்திய நிபுணர் கடமை நிமிர்த்தம் வவுனியா வைத்தியசாலையில் இருந்து கொழும்பு சென்றிருந்தமையால் அவர் வரும் வரை சடலம் வைத்தியசாலையிலேயே இருக்க வேண்டியதாப்போச்சு.

கடந்த 18 ஆம் திகதி வியாழக்கிழமை வந்த சட்ட வைத்திய நிபுணர் ஜே.சி.சமரவீர பிரேத பரிசோதனையை மேற்கொண்டு வன்புனர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். இதன்பின் சடலம் தாயாரிடம் மரண விசாரணை அதிகாரியால் கையளிக்கப்பட்டது.

இதன்போது, மாணவியான சிறுமி வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார். வன்புனர்வுக்கு உள்ளாக்கிய நபருடன் தன்னை பாதுகாத்து கொள்ள குறித்த மாணவி முயற்சித்துள்ளார்.

அதற்கான அடையாளங்கள் அவரது உடலில் காணப்பட்டன. அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அடையாளங்களும் காணப்பட்டன.

ஆகவே இது ஒரு வன்புனர்வு மற்றும் கொலைச் சம்பவம். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பெரும்குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், நீதிமன்ற அனுமதியுடன் சடலத்தை புதைக்குமாறும் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் அவர்களால் பணிக்கப்பட்டது.

மறுநாளான வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பெருமாளவானோர் கலந்து கொண்டு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.



அதன் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சடலம் சிறுமியின் பாடசாலையான விபுலானந்தா கல்லூரி முன்பாக கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.

இதன்போது, குற்றவாளிகளை உடனடியாக கைது செய், வன்புனர்வு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி மரணர்திற்கு நீதி கேட்டு மக்கள் ஊர்வலத்தில் திரண்டு வந்தார்கள்.



மாணவி படித்த மற்றும் தாயார் கற்பிக்கின்ற, சகோதரர்கள் படிக்கின்ற விபுலானந்தா கல்லூரி முன்றலில் மாணவியின் உடல் கொண்டு வரப்பட்ட போது அப் பாடசாலை மாணவர்கள் தம்முடன் 9 வருடமாக கூடத் திரிந்த பள்ளித் தோழியை இறுதி விடை கொடுத்து வழியனுப்ப அனுமதிக்குமாறு பலராலும், அன்றைய தினம் பாடசாலையில் புதிதாக கடமையை பொறுப்பேற்றிருந்த அதிபரிடம் கோரப்பட்டிருந்தது.

ஆனால் அதிபர் அதற்கு இணங்கவில்லை. பாடசாலை வாயில்கள் சாத்தப்பட அதிபர், ஆசிரியர்கள் வெளியில் நின்று வீதியில் வந்த ஊர்வலத்துடன் இணைந்து அஞ்சலி செலுத்த மாணவர்கள் மட்டும் பாடசாலை வகுப்பறை யன்னல்கள், படிக்கட்டுக்களில் இருந்து தமது சகோதரிக்கு விடை கொடுத்தனர். இது தான் அந்த பாடசாலையின் மனிதநேயமா…?

அதிபரின் மனிதாபிமான செயற்பாடா இது…? என பலரை கொதிப்படையச் செய்தது. உறவினர்கள் மற்றும் ஊர்வலத்தில் வந்த பலர் மாணவர்களை வெளியில் விடுமாறு கோரிய போதும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சமரசம் செய்ய முற்பட்ட பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரிக்கும் இளைஞர்கள் சிலருக்கும் முறுகல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

பொலிசார் தலையிட்டு அதனைத் தடுத்தனர். இந்த கைகலப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்ன….? ஒவ்வொரு துன்பமும் தமது வீட்டு வாசல் தட்டும் போது தான் மனிதன் விழித்துக் கொள்வான் என்றால் இப்படியான குற்றங்களை தடுக்க முடியாது என்பதே உண்மை.

வவுனியா பொலிசார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மரணம் தொடர்பாக பல தகவல்களை பெற்றுள்ளனர். குற்றவாளிகளை பொலிசார் விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், பொலிசார் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பது பலரும் ஆதங்கமாகவும் உள்ளது. பொலிசாரும், சட்டமும் தீவிரமாக தமது கடையை செய்யும் போது இவ்வறான செயற்பட்டை கட்டுப்படுத்த முடியும் என்பது பலரது நம்பிக்கை.

இன்று வாழவேண்டிய அந்த மொட்டு இளமையிலேயே கசக்கப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருக்கின்றாள். வடக்கில் அன்று கிரிசாந்தி, வித்தியா, சரண்ஜா, இன்று ஹரிஸ்ணவி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதனை தடுக்க என்ன வழி…? இப்படியான மிருகத்தனமான எண்ணங்கள், சிந்தனைகள் எவ்வாறு வந்தது…? எமது சமூகம் எங்கு நோக்கிச் செல்கின்றது என சிந்திக்க வேண்டிய காலமிது.

எனவே, உரிமைக்காக போராடிய இனத்திலா இவ்வாறான ஈனச்செயல்கள் என பலரை முகம் சுழிக்க வைக்கும் இந்த செயற்பாடுகளை கட்டுப்படுத்த சட்டம் தனது கடமை வலுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.



« PREV
NEXT »

No comments