ஜேர்மனியில் சிறந்ததொரு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறைமையே காணப்படுகின்றது. அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அத்தகைய ஆட்சிமுறைமையை ஏற்றுக்கொள்வதற்கு உடன்பட்டால் நாம் அதனை பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்த சட்டத்தின் ஏற்பாடுகளும் மாகாணசபை முறைமையின் ஏற்பாடுகளும் அவ்வாறே இருக்கும். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசியலமைப்பில் என்ன இருக்கின்றதோ, அது தொடர்ந்தும் இருக்கும். எனினும் தீர்வு முறை என்று வரும்போது நாங்கள் ஜேர்மன் முறைமை தொடர்பில் ஆராய்வதற்கு தயாராக இருக்கின்றோம். அத்துடன் வேறுபல முறைமைகள் குறித்தும் ஆராய்வோமென குறிப்பிட்டிருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்துவெ ளியிடுகையிலேயே, கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கின் பெரும்பான்மை ஆணை பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்காகு எத்தகைய தீர்வொன்றை வழங்கவேண்டுமென்பதை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
அவ்வாறிருக்கையில் தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று எட்டப்படுவது குறித்த சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமையை காணக்கூடியதாகவுள்ளது. இந்நிலையில் ஜேர்மன் ஆட்சிமுறைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் ஆட்சி முறையென்பது சமஸ்டிக் கட்டமைப்பை உள்வாங்கிய சிறந்த ஆட்சிமுறைமையாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வாக அரசாங்கம் ஜேர்மன் முறைமைக்கு உடன்படுமாகவிருந்தால் நாம் அதுகுறித்து பரிசீலிப்பதற்கு தயாராகவிருக்கின்றோம்.
அதேநேரம் அரசியல் தீர்வு விடயம் சம்பந்தமாக ஜேர்மன் முறைமை குறித்து அல்லது வேறெந்த முறைமைகள் குறித்தும் எமக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை என்றார்.
இதேவேளை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதில் அனைத்து தரப்புக்களும் உறுதியாக இருக்கின்ற இத்தருணத்தில் ஒற்றையாட்சிக்குள்ளே தீர்வு எட்டப்படவேண்டுமென தென்னிலங்கை அரசியல் சக்திகள் சில உறுதியாகவுள்ளன. அதேவேளை சமஸ்டி முறைமையிலேயே இனப்பிரச்சைக்கான தீர்வு எட்டப்படவேண்டுமென்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் உறுதியாகவுள்ளது.
எவ்வாறாயினும் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி, சமஸ்டி போன்ற சொற்பதங்களை நேரடியாக பயன்படுத்தாது அதன் கருப்பொருட்களை கொண்டமைந்த கட்டமைப்பை பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறிருக்கையில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்கிரமரட்ண, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அடையாளங்கள் அவசியமில்லை. கருப்பொருட்களே முக்கியமானவை என்ற தெனியில் கருத்தக்களை வெளியிட்டிருந்தனர்.
அதேநேரம் தமிழ் மக்கள் பேரவை உட்பட சில தமிழ் அரசியல் தரப்புக்கள் அடையாளங்கள் என்னவென்பது தௌிவாக அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டும். அவ்வாறு உள்ளடக்கப்படுவது தவிர்க்கப்படின் அது சிறுபான்மையினரின் நிரந்தர பாதுகாப்புக்கு பலவீனமானதாகவே அமையுமென வலியுறுத்தி வருவதோடு அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முன்னதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment