ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது. இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லவே ஹோமாகம பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க இவ்வாறு அனுமதி வழங்கினார்.
அத்துடன் பிரகீத் எக்னெலிகொட வழக்கிலோ அல்லது அவரது மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான வழக்கிலோ சாட்சிகளுக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது என எச்சரித்த நீதிவான், இது குறித்து விசாரணை
செய்துவரும் அதிகாரிகள், வழக்குடன் தொடர்புபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
சந்தியா எக்னெலிகொடவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று பிற்பகல் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் போது ஞானசார தேரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜய ஹெட்டி ஆரச்சி தலைமையில் மூன்று சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகினர். முறைப்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமரப்பெருமவுடன் சட்டத்தரணி லஹிரு கலப்பதி மன்றில் பிரசன்னமாகினர். சட்ட மா அதிபர் மற்றும் விசாரணையாளர் தரப்பில் சிரேஷ்ட அரச சட்ட வாதி ஜனக பண்டார மற்றும் ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லியனகே ஆகியோர் மன்றில் ஆஜராகி இருந்தனர்.
நேற்று இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்ப்டுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றிக்கு வழக்கு நடவடிக்கைகளை பார்ப்பதற்காக வருகைத் தர முயன்ற தேரர்கள் பலருக்கு மன்றின் வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுத்த பொலிஸார் கலகத் தடுப்பு மற்றும் ஆயுதம் தரித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடாக இரண்டடுக்கு பாதுகாப்பு நடவடிக்கையினை அப்பகுதியில் அமுல் செய்தனர்.
வழக்கு விசாரணைகள் ஆரம்பம்மான போது, சந்தேக நபரான ஞானசார தேரர் தொடர்பில் அவரது சட்டத்தரணிகள் கருத்துக்களை முன் வைக்க ஆரம்பித்தனர். 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பாதிக்கப்ப்ட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஞானசார தேரருக்கு எதிரான குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்ய முடியாது எனவும் அதனால் அவருக்கு பிணை வழங்குமாறும் அவர்கள் கோரினர்.
எனினும் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய முடியாது, வழக்கு தொடர முடியாது என்ற கருத்துக்களை நீதிவான் ரங்க திஸாநாயக்க நிராகரித்தார்.
அத்துடன் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டவாதி, ஜனக பண்டாரவும் சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணிகளின் வாதத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டார். சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து இதுவரை சட்ட மா அதிபர் தீர்மானிக்காத நிலையிலும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் தற்போதைய வழக்கின் நிலமையை மட்டும் கருத்தில் கொண்டே நீதிவான் பிணை குறித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.
இந் நிலையில் முன்னாள் மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.டப்ளியூ.ஏ. சலாம் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கிய இரு வழக்குகள் ஊடாக வழங்கப்ப்ட்ட அறிவுறுத்தல்களை சுட்டிக்காட்டிய நீதிவான், முன் வைக்கப்பட்ட வாதங்களுக்கு அமைவாக பிணை வழங்கத் தீர்மானித்தார். முன்னாள் மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ஏ.டப்ளியூ.ஏ. சலாம் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோரின் தீர்ப்புகளில் சந்தேக நபர் ஒருவரின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது குறித்து பூரண ஆலோசனைகாள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் எதிர்காலத்தில் இந்த சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது தாக்கல் செய்யாது விடவோ இடமுள்ள நிலையில் தான் அவரை பிணையில் செல்ல அனுமதிப்பதாக நீதிவான் அறிவித்தார்.
அத்துடன் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் ஞானசார தேரருக்கு எதீராக சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தால் அதன் பின்னர் பிணையை ரத்து செய்வது அல்லது அவரை விளக்கமறியலில் வைப்பது குறித்து அந் நீதிமன்றம் முடிவெடுக்கும் எனவும், தனது முடிவு குறித்து அதிருப்தி இருப்பின் அதற்கெதிராக மேன் முறையீடு செய்து சிறந்த தீவைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நீதிவான் ரங்க திஸாநாயக்க அறிவித்தார்.
இதனையடுத்தே இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல ஹோமாகம பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்க இவ்வாறு அனுமதி வழங்கியதுடன் பிரகீத் எக்னெலிகொட வழக்கிலோ அல்லது அவரது மனைவிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடபிலான வழக்கிலோ சாட்சிகளுக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது , இது குறித்து விசாரணை செய்துவரும் அதிகாரிகள், வழக்குடன் தொடர்புபட்ட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தார்.
பிணையை அடுத்து வெளியே வந்த ஞானசார தேரர், தொடர்ந்தும் தான் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பப் போவதாகவும், பிக்குகளுக்கு சட்டம் தொடர்பிலும் கற்கை நெறியொன்றினை வழங்க வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஹோமாகம நீதிவான் நீதிமன்ருக்கு செல்லும் பிரதான பாதையில் கூடியிருந்த பெளத்த தேரர்களால் ஞானசார தேர்ருக்கு பிரித் ஆசீர்வாத பூஜையும் நடத்தப்பட்டது. இதனையடுத்தே அவர் தனது விகாரையை நோக்கி தனது வாகனத்தில் சென்றார்.
No comments
Post a Comment