Latest News

February 24, 2016

புலிகளின் உளவு அதிகாரியை கடத்திய சிங்கள அதிகாரியையே கொழும்பில் வைத்து கடத்திய புலிகள்
by admin - 0

2004ம் ஆண்டு சில முக்கிய வேலைகள் நிமித்தமும், மருத்துவக் காரணங்களுக்காகவும், புலிகளின் உளவுத்துறையின் முக்கிய உறுப்பினரான நியூட்டன் (நொவொம்பர் விஸ்கி) என்பவர் கொழும்புக்கு சென்றிருந்தார். சில பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வேறு ஒரு பெயரிலேயே அங்கு சென்றிருந்தார்.

அவர் கொழும்பு சென்றிருந்த நேரம், இவரது தொடர்பாளனாக, அங்கு ஏற்கனவே உளவு வேலைகளில் ஈடுபட்டிருந்த நெடுங்குரலோன் செயல்பட்டார். அந்த நேரத்தில் நெடுங்குரலோன் சிங்கள இராணுவ வீரர்கள் வந்து, போகும் விபச்சார நிலையத்திற்குச் சென்று தகவல் சேகரித்து வரும் பணியில் இருந்தார். இந்தக்காலப் பகுதியில் அங்கே உள்ள ஒரு பெண்ணோடு காதல் வயப்படுகின்றார்.

அவரது பணித்தடுமாற்றத்தினால் ஏற்பட்ட காதல் அவரது கைதுவரை கொண்டுபோய் விடுகின்றது. நெடுங்குரலோனின் கைதின் ஊடாக பெறப்பட்ட தகவலின் மூலம், இக் காலப்பகுதியில் திடீரென நியூட்டண்ணை இருக்கும் இடத்தினை சிங்களத்தின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சூழ்ந்து கொண்டனர்.

எப்ரல். 20. 2004ம் ஆண்டில் எதிர் பாராத விதமாக நியுட்டண்ணை கடத்தப்பட்டார்.
(விசாரணையின் போது, இவரை சிங்கள உளவுத் துறையினர் அடித்து கொன்றதாக செய்தி ஒன்றும் உள்ளது) கடத்தப்பட்ட பின் அவர் மாயமானார். இன்றுவரை அவர் பற்றிய சரியான தகவல் இல்லை.

நியுட்டண்ணை கடத்தப்பட்டமை புலிகளுக்கு பெரும் பின்னடைவை அந்த நேரத்தில் தோற்று வித்திருந்தது. இதனை தொடர்ந்து புலிகளின் பார்வை இவர் கடத்தலுக்கும், மரணத்துக்கும் பின்னால் இருந்தவர்கள் மேல் பதிகின்றது. அதில் முக்கியமானவர்கள் இருவர்.

அதில் ஒருவர் இராணுவ உளவுத்துறையை சேர்ந்த மேஜர்.முத்தலிப் (மரணத்தின் பின் லெப்.கேணலாக பதவி உயர்த்தப் பட்டார்) அடுத்தவர், இந்தகடத்தலை முன்னின்று வழிநடத்திய, கல்கிஸை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரியாக சேவையாற்றிய இன்ஸ்பெக்ட்டர் ஜெயரட்ணம் ஆவார்.

நியூட்டண்ணையின் கடத்தலலுக்கு முக்கிய மூளையாக இருந்து செயல் பட்டவர் இவரே ஆவார். அதனால் இவரை வன்னிக்கு கடத்தி செல்ல புலிகள் திட்டமிட்டனர். இவர் ஒரு தமிழன் என்பதால் இலகுவாக தமிழ் மக்களுடன் உறவாடி, அவர்கள் மூலமாகவும், மற்றும், விலை போகும் சில தமிழர் ஊடாகவும் தகவலை பெற்று விடுவார்.

இந்த தகவல்கள் மூலம் பல போராளிகளை கைது செய்து அவர்களது மரணத்துக்கு காரணமாக இருந்தான். இவன் மூலம் சில கரும்புலிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் புலிகளின் தாக்குதல்கள் பலவற்றுக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்தவர்களின் இவர் முக்கியமானவர். புலிகளை மட்டுமில்லாது தமிழர்கள் பலரது கைதுகள், காணாமல் போதல் போன்றவற்றுக்கு பின்னால் இவரே சூத்திரதாரியாக இருந்தார்.

புலிகளால், இவர் இலக்கு வைக்கப் பட்டதும் புலிகளால் தயார் செய்யப்பட்ட இரட்டை உளவாளி ஒருவர் இவருடன் தொடர்பை ஏற்படுத்துகின்றார். அவரால் காட்டி கொடுக்கப்பட்டு பாவனைக்கு உதவாத தற்கொலை அங்கி ஒன்று, கொழும்பில் வைத்து ஜெயரட்ணத்தால் கைப்பற்றப்பட்டது.

இதன் மூலம், புலிகளின் இரட்டை உளவாளி, ஜெயரட்ணத்தை நம்பவைத்து, தொடர்ந்து அவனுடன் தொடர்பை வைத்திருந்தான் அந்த போராளி.

அத்தோடு சமகாலத்தில் புளொட் அமைப்பினுள் ஊடுருவியிருந்த மனோ (புனைப்பெயர்) என்னும் உளவாளியும், அங்கிருந்தபடியே ஜெயரட்ணத்துடன் தொடர்பை ஏற்படுத்தி இருந்தார்.

மனோ என்பவர், புளொட் அமைப்பு, ஜெயரட்ணம், புலிகள் என, மூன்று பேரினதும் இணைவின் மூலம், ஒரு முக்கோண உளவாளியாக செயல் பட்டுக் கொண்டிருந்தார்.

இவர்களில் மீது முழு நம்பிக்கை வைத்த ஜெயரட்ணம், மனோ என்பவருக்கு, தனது தொடர்பில் இருந்த புலிகளின் இரட்டை உளவாளியை, ஒரு உணவு விடுதியில் வைத்து, அறிமுகம் செய்து வைத்திருந்தான். இருவரும் ஒருவரை, ஒருவர் அறிமுகமில்லாதவர்கள் போல, அறிமுகமாகிக் கொண்டனர்.

அதன் பின் ஜெயரட்ணம், சில நடவடிக்கை நிமித்தம் இந்த இருவருடனும் அடிக்கடி வெளியில் சென்று வருவது வாடிக்கையாகி இருந்தது. புலிகளின் உளவாளிகள் இருவரும் அவனது நம்பிக்கையை முழுவதும் பெற்றதும் புலிகளின் தலைமைக்கு தெரியப்படுத்தினர். அதன் பின் ஜெயரட்ணத்தை தூக்குவதற்கான நாளை புலிகள் தீர்மானித்தனர்.

2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி தமது நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் இரவு கல்கிஸ்சையில் உள்ள உணவகம் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் இராபோசனத்திற்கு சென்று விட்டு, அதன் பின் தனது குடும்பத்தாரை வீட்டில் இறக்கிய பின் கொச்சிக்கடைக்கு வேலை நிமித்தம் செல்வதாக கூறி, தனது நம்பிக்கைக்குரிய, புது நண்பர்களான புலிகளுடன் இரவு 11.30 பயணமானார்.

அங்கிருந்து வெளிக்கிட்டு சில மணி நேரங்களிலேயே, புலிகளின் உளவாளிகள் இருவரும், அவனை ஆயுத முனையில் தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த பின் புத்தளம் நோக்கி தமது "ஹையஸ் வானில்" கொண்டு சென்றனர்.

இதில் சிலாபம், பங்கதெனிய என்னும் ஊர்களுக்கு இடையில் ஓடும் "ததுறு ஓயா" ஆற்றின் பாலத்தின் மேல் இருந்த சோதனை சாவடியை சிரமம் இல்லாது கடப்பதற்கு இந்த நடவடிக்கையை நெறிப்படுத்திய புலிகளின் உளவுத்துறை அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

அங்கிருந்து கற்பிட்டிக்கு கொண்டு சென்ற புலிகள், பூனைப் பிட்டி என்னும் கரையோர கிராமத்தில் இருந்து வந்த படகில் ஏற்றி சென்று, இடையில் இவர்களுக்காக காத்திருந்த கடற்புலிகளின் படகில் ஏற்றியபின் புலிகளின் படகு வேகமெடுத்தது.

அங்கிருந்து மன்னார் கொண்டு சென்ற கடற்புலிகள் அவனை புலிகளின் உளவுதுறையின் விசாரணைப்பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர். மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, நீண்ட காலம் காத்திருந்து, இந்த சாதனையை புலிகளின் உளவுத்துறையினர் சாதித்திருன்தனர்.

எதிரியின் பிரதேசத்தில் வைத்து புலிகளின் அதிகாரியை கடத்தியமைக்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக ஸ்ரீலங்கா தலைநகரில் வைத்தே, அவரை கடத்திய அதிகாரியையே, புலிகள் உயிரோடு தூக்கியது, புலனாய்வின் உச்சமாகவே அன்று பார்க்கப்பட்டத்து.!

புலனாய்வில் ஒரு இலக்கை அழிப்பது இலகுவானது. ஆனால், மிக பாதுகாப்பு உச்சம் பெற்ற ஒரு இடத்தில் அந்த அதிகாரியையே கடத்துவது மிகவும் கடினமானதும், ஆபத்தானதும்.!

ஆனால் இதை புலிகளின் உளவுத்துறையினர் மிக இலகுவாக செய்திருந்தனர். இதுவரை CIA, மொசாட் போன்ற உளவுத்துறையினர் தான், இதுபோன்ற ஆள் கடத்தலில் பிரபலியமாக இருந்தார்கள். அந்த வரிசையில் புலிகளும் அந்த நேரத்தில் இணைந்திருந்தார்கள்.!

2009 இறுதி யுத்தத்தின் பின் சரணடைந்த புலிகளில், அவர்களின் விசாரணை பிரிவில் இருந்த போராளிகளும் கைது செய்யப் பட்டமையால், அவர்கள் மூலமாக இந்த கைது பற்றிய முழுத்தகவலும் ஸ்ரீலங்கா உளவுத்துறையால் பெறப்பட்டிருந்தது..

அதன் பின் அவனை புலிகள் கொன்றதாக, கைது செய்யப்பட்ட புலிகள் கூறியதால் அந்த இடங்களை இராணுவத்தினர் தேடியதையும் அறிந்திருப்பீர்கள்.?பல தமிழரின் சாவுக்கு காரணமான ஒரு விசச்செடி அன்று அகற்றப்பட்டது. தமிழனின் சாதனைகளில் இதுவும் முக்கியமான ஒன்றே...!!
வரலாற்றுடன் துரோணர்.!
« PREV
NEXT »

No comments