Latest News

February 25, 2016

ஆந்திர வனத்துறை அதிகாரி கொலை வழக்கில் 347 பேர் விடுதலை
by Unknown - 0

ஆந்திர வனத்துறை அதிகாரிகள் இருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 347 பேரையும் விடுவித்து திருப்பதியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எல். ஸ்ரீதர், டேவிட் கருணாகர் ஆகிய இருவரும் சேஷாச்சலம் வனப் பகுதியில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதில் இவர்களுடன் சென்ற பி. ரமணா என்ற அதிகாரி உயிர் தப்பினார். இவர் ரேணிகுண்டா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் ஆந்திர காவல்துறை 453 பேர் மீது 26 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தது. அடுத்த சில நாட்களில் 351 பேர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 288 பேர் தமிழ்நாட்டின் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவிலேயே ஒரு கொலை வழக்கில் இத்தனை பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட ஒரே வழக்கு இதுதான் என கூறப்படுகிறது.

இந்த வழக்குக்காக திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாஸா ஸ்போர்ட்ஸ் காம்ளக்ஸ் நீதிமன்றமாக மாற்றப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 60 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. மீதமிருந்த 287 பேர் சிறையில் இருந்தனர். இவர்களில் நான்கு பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தனர். நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர்.

26 மாதங்களாக நடந்துவந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி பி.வி. ராமப்பா, அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி அனைவரையும் விடுவிக்க உத்தரவிட்டார்.

திருப்பதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேர் ஆந்திரக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
« PREV
NEXT »

No comments