தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவது தீவிரவாதமாகாது, இது அடிப்படை மனித உரிமைப் பிரச்சனை. இதனை தீவிரவாதமாக சித்தரிப்பது கண்டனத்துக்குரியது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாக இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வினை எட்டுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டுக்கு வடக்கிலும், புலம்பெயர் நாடுகளிலும் எதிர்ப்பு வலுத்து வருவதாகவும், தீவிரவாதிகளே இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் சிறிலங்காவின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமாகவுள்ள மனோ கணேசன் அவர்கள் சிறிலங்காவின் நடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசனின் இக்கூற்று தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் :
ஒரு இனம் தன்னுடைய அரசியல் விருப்பத்தினை தெரிவிப்பதும், அடைவதற்காக போராடுவதும் தீவிரவாதமாகாது. அது அந்த இனத்தின் அடிப்படை மனித உரிமைப் பிரச்சனை.
இந்நிலையில் ஈழத்தமிழ் மக்கள் தங்களின் அரசியல் விருப்பினை 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதற்கொண்டு இற்றை வரை அமைதி வழியிலும், ஆயுத வழிமுறையிலும் வெளிப்படுத்தி வந்துள்ளார்கள்.
தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தினை, பயங்கரவாதப் பிரச்சனையாக சித்தரித்தே சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு போரினை முன்னெடுத்தும், நியாயப்படுத்தியும் கொண்டனர்.
இதற்கு ஒத்ததாகவே அமைகின்ற மனோ கணேசனின் கருத்து, தமிழர் தாயகத்திலும் புலத்திலும் சனநாயக வழிமுறையில் தமிழ்மக்கள் வெளிப்படுத்துகின்ற தங்களுடைய அரசியல் விருப்பினை தீவிரவாதமாக சித்தரிப்பது கண்டனத்துக்குரியது.
தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என்பதே ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் விருப்பாக இருக்கின்ற நிலையில், தமிழ்மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு மாறான அரசியல் தீர்வுத்திட்டத்தினை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களது கருத்து இவ்விடத்தில் முக்கியமானது.
இனநல்லிணக்கமோ, இனப்பிரச்சனைக்கான தீர்வோ, பொறுப்புகூறலில் இருந்துதான் வரவேண்டும். இரண்டினையும் வௌ;வேறாக பிரித்துக் பார்க்க முடியாது. பரிகாரநீதியின் அடிப்படையிலேயே தமிழ்மக்களுக்கான அரசியற் தீர்வினை காணமுடியும். பொறுப்புகூறலை எட்ட வைத்துவிட்டு, மற்றவைகளை எட்ட நினைப்பது, நிலையான அமைதியினை ஒரு போதும் இலங்கைதீவுக்கு தராது.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment