Latest News

January 25, 2016

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் விஜயதரணி சந்திப்பு
by admin - 0

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

கூட்டத்தொடர் முடிந்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் வைத்தே இந்த சந்தித்துப் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனால் நான் பாதிக்கப்பட்டதோடு, என்னை பதவியில் இருந்து நீக்கி, எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராகவும் இளங்கோவன் செயற்பட்டுள்ளார்.

இதனையடுத்து முதல்வரிடம் தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேசினேன். என் பதவி பறிக்கப்பட்டது குறித்து கட்சி மேலிடத்துக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். மேலும் உரிய விளக்கம் கிடைக்காவிட்டால் என்னை அங்கீகரிக்கும் கட்சியில் இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதாரணி, ஆரம்பத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளராக இருந்தார். இதனால் கட்சி மேலிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜயதாரணியை தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராக நியமித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாயிலில் மகளிர் காங்கிரஸ் சார்பில் கடந்த ஆண்டு 19ஆம் திகதி டிஜிட்டல் பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.

அதில் இருந்த விஜயதாரணியின் படத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்பட்டதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனை நீக்கக்கோரி சோனியா, ராகுல் காந்திக்கு விஜயதாரணி கடிதம் எழுதியிருந்ததையடுத்து, இளங்கோவன், விஜயதாரணியை டெல்லிக்கு அழைத்து கட்சி மேலிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், விஜயதாரணியை தமிழக காங்கிரஸ் மகளிர் பதவியிலிருந்து கட்சி மேலிடம் நீக்கியுள்ளதையடுத்து, மறைந்த காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


« PREV
NEXT »

No comments