இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது 'சிங்ஹ லே' (தமிழில்- சிங்கத்தின் இரத்தம்) என்ற சிங்கள வாசகங்களை எழுதியவர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடந்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த விசாரணைகள் நடப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இனங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்படும் விஷமத் தனமான நடவடிக்கை இது என்று அரசியல்வாதிகள் சிலரும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர்.
தென்னிலங்கையில் அண்மைக்காலமாக 'சிங்ஹ லே' என்கின்ற வாசகம் சிலரால் பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றது.
பெரும்பாலும், சிங்ஹ(சிங்கம்) என்ற சொல் கறுப்பு நிறத்திலும் லே (இரத்தம்) என்ற சொல் சிவப்பு நிறத்திலும் அமையும் விதத்தில் இந்த வாசகங்கள் பொறிக்கப்படுகின்றன.
கார்கள், ஆட்டோக்கள் மற்றும் தனிப்பட்ட வாகனங்களில் இந்த வாசகம் பொறித்த ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்ளும் வழக்கம் இப்போது அதிகரித்துவருவதாகவும் இது இனவாதம் தலைதூக்குவதன் வெளிப்பாடு எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
'சிங்கள மக்கள் சிங்கத்திற்கு பிறந்த இனம் என்ற மாயையை மெய்ப்பிப்பதற்காக முயற்சிக்கிறார்கள்' என்றார் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் அரச கொள்கைகள் தொடர்பான ஆய்வாளருமான கண்டியைச் சேர்ந்த எஸ். பாலகிருஷ்ணன்.
மிருகங்களிலே மிக உயர்வான, பலமுள்ள மிருகமாக பார்க்கப்படுகின்ற சிங்கத்தைப் போன்று தாங்களும் இனத்துவ ரீதியாக மேலாதிக்கம் உள்ளவர்கள் என்ற இனவாத சிந்தனையை தூண்டுவதற்கு தான் இந்த வாசகம் பயன்படுத்தப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
இந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு, முறைப்பாடு கிடைக்கும் வரை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காத்திருப்பது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment