Latest News

December 09, 2015

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீதான சிறிலங்கா அரசின் தடைப்பட்டியல் நீடிப்பு விவகாரம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து !
by Unknown - 0

ஒரு சுதந்திரமான அரசுக்கான தமிழர்களின் போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்வதையே அடுத்தடுத்து வந்த சிறீலங்கா அரசாங்கங்கள் பயங்கரவாத முத்திரையிடுவதன் மூலம் செய்து வந்துள்ளன. புதிய ஆட்சியும் அதையே செய்வது மட்டுமின்றி, இன்னும் ஒருபடி மேலே சென்று, அதே பயங்கரவாத முத்திரையைப் பயன்படுத்தி புலம்பெயர் தமிழர்களிடையே பிளவினை ஏற்படுத்திப் பிரித்தாள முயற்சி செய்கிறது.

இருப்பினும், இத் தந்திரங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே பரஸ்பரப் புரிதலை ஏற்படுத்தி அவர்களைப் பலப்படுத்த வாய்ப்பளிக்குமெனவும்;, தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைகளை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பங்களிப்புச் செய்யும் என்றும் நாம் நம்புகிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீதான சிறிலங்கா அரசின் தடைப்பட்டியல் நீடிப்பு விவகாரம் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திகுமாரன் அவர்கள் வழங்கிய கருத்துக்களின் தமிழாக்கம் :

கேள்வி : சிறீலங்கா அரசு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தையும் உங்களையும் பட்டியல் நீக்கம் செய்வதில்லை எனற முடிவு குறித்தும் இது நல்லிணக்கச் செயல்முறையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் உங்களால் கருத்துக் கூற இயலுமா?

பதில் : ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட தமிழீழ அரசை நிறுவுவதே தனது குறிக்கோள் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் சட்டம் தெரிவிக்கிறது என்ற பொருண்மையை எடுத்துக்கொண்டால், அது சிறீலங்கா அரசாங்கத்தால் தனது 'தூய்மைப் படுத்தும்' முயற்சிக்கு உகந்ததாக ஏற்றுக்கொள்ளப்படாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அரசாங்கம் தெரிந்தெடுத்துத் தூய்மைப் படுத்தும் இம் முயற்சி புலம் பெயர்ந்த தமிழீழ மக்களைப் 'பிரித்தாளும்' தமது கொள்கையைப் பின்பற்றுவதை வெளிப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் 'பிரித்தாளும்' தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள். யுத்தநிறுத்த காலத்தில் ரணில் இந்தத் தந்திரத்தைப் பயன்படுத்தி, கருணாவை விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வரச்செய்தார். இப்போது அதையே புலம் பெயர் தமிழர்களிடையே கையாள்வதாகத் தெரிகிறது.

இப்படித் தெரிவு செய்து பட்டியல் நீக்கம் செய்வது தமிழ் தேசியப் பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வை எட்டுவதில் எந்தப் பங்களிப்பையும் செய்யாது. அதற்கு மாறாக அது எதிர்விளைவையே ஏற்படுத்தும். தமிழர் அபிலாசைகள் தொடர்பாக தங்களை ஒரேயளவுக்கு ஒப்படைவு செய்துகொண்டுள்ள தமிழ்க் குழுக்களிடையே சிலவற்றை மட்டும் தேர்ந்து அரவணைத்துக் கொள்வது தமிழ் மக்களின் பார்வையில் இக் குழுக்களை நியாயமிழந்தவர்களாக ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. இது தமிழ் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அவர்களுடைய பங்களிப்பைப் பலவீனப்படுத்திச் சீர்குலைத்துவிடும்.

ஒரு சுதந்திரமான அரசுக்கான தமிழர்களின் போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்வதையே அடுத்தடுத்து வந்த சிறீலங்கா அரசாங்கங்கள் பயங்கரவாத முத்திரையிடுவதன் மூலம் செய்து வந்துள்ளன. புதிய ஆட்சியும் அதையே செய்வது மட்டுமின்றி, இன்னும் ஒருபடி மேலே சென்று, அதே பயங்கரவாத முத்திரையைப் பயன்படுத்தி புலம்பெயர் தமிழர்களிடையே பிளவினை ஏற்படுத்திப் பிரித்தாள முயற்சி செய்கிறது.

இருப்பினும், இத் தந்திரங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே பரஸ்பரப் புரிதலை ஏற்படுத்தி அவர்களைப் பலப்படுத்த வாய்ப்பளிக்குமெனவும்;, தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைகளை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பங்களிப்புச் செய்யும் என்றும் நாம் நம்புகிறோம்.

கேள்வி : தொடர்ந்தும் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர் பிரிவினை வாதத்தைக் கைவிட வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது. நீங்கள் பிரிவினை வாதத்தைக் கண்டிப்பீர்களா?

பதில் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரிவினை வாதத்தைக் கைவிடுமா இல்லையா என்பதல்ல நம்முன் உள்ள கேள்வி. மாறாக ஒரு சுதந்திரமான அரசை அமைதியான முறையில் ஆதரித்துப் பேசுவதைக் குற்றச் செயலாக்கும் அரசியல் சட்டத்தின் 6 வது திருத்தம் இல்லாத ஒரு சூழலில் தங்களுடைய சுதந்திரமான விருப்பத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவார்களானால், தமிழ் மக்கள் பிரிவினை இலட்சியத்தை நிராகரிப்பார்களா இல்லையா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

சிறீலங்கா அரசின் இன மேலாதிக்க அதிகார இயல்பின் இறுக்கமான தன்மை காரணமாக, ஒரு சுதந்திரமான அரசின் கீழ் தான் தமிழர்கள் கண்ணியத்தோடும் பாதுகாப்போடும் வாழமுடியும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகிற அதேவேளையில், தங்களுடைய எதிர்காலத்தை ஒரு பொதுவாக்கெடுப்பு மூலமாக தீர்மானிக்கும் ஒரு வாய்ப்பு தமிழர்களுக்கு வழங்கப்படுமானால், அப்போது தமிழ் மக்கள் இது குறித்து எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் இக்கேள்விக்கான பதில் அமைய முடியும் என்றும் நாம் நம்புகிறோம். எனது கருத்துப்படி, பட்டியலகற்றம் செய்யபட்டவை உட்பட உலகத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்.

நான் அறிந்தவரை, பட்டியலகற்றம் செய்யப்பட்ட அமைப்புக்கள் சில தமிழர்கள் பிரிவினையை விரும்பவில்லை என்று கூறுகிற அதேவேளையில் அவர்களும் கூட தமிழர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு வாய்ப்புத் தரப்பட வேண்டும் என்பதை எதிர்க்கமாட்டார்கள். இது வெறுமனே ஓர் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, மாறாக ஒரு மனித உரிமைகள் பிரச்சனையும் ஆகும். தமிழ் தேசியக் கூட்டணித் தலைமை கூட வெளிநாடுகளுக்கு வருகை தருகிற போதெல்லாம், இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு அதை கேள்வியாக எழுப்புவதென உறுதிமொழி அளித்திருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு வட்டுகோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு ஆகும். சிறீலங்கா அரசியல் சட்டத்தின் 6 வது திருத்தம் பேச்சுரிமை, கருத்துரிமை, சங்கம் சேரும் உரிமை ஆகிய உரிமைகளை மீறுவதாகும் என்று வாதிட்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் ஒரு முறையீட்டைத் தாக்கல் செய்வதற்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிற உலகத் தமிழர் மற்றும் உள்நாட்டுத் தமிழர் அமைப்புக்களுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளது.

மக்களின் விடுதலைக்கான தாகம் ஒரு நிகழ்ச்சிப்போக்கைப் பட்டியலிடுவதால் மட்டும் தணிந்து விடாது என்பது உண்மை. காலஞ்சென்ற தென்கொரிய குடியரசுத் தலைவர் கிம் யங்-சேம் கூறியது போல, 'சேவலின் கழுத்தை நெரித்தாலும், பொழுது விடிந்துதான் தீரும்.'

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 1373, சிறீலங்கா அரசாங்கம் பட்டியலிடுவதற்கு அடிப்படையாக மேற்கோள் காட்டியுள்ள தீர்மானம் விடுதலை அல்லது பிரிவினையை எதிர்ப்பதற்கு அறிவிக்கப்பட்டதல்ல, அந்தத் தீர்மானத்தின் 1287 சொற்களில் பிரிவினைவாதம் குறித்து ஒரு சொல் கூட இல்லை என்பதை நான் சுட்டிக்காட்டியாக வேண்டும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானங்கள் பயங்கரவாதம் குறித்தவை, ஆனால் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஓர் அரசியல் சட்டமும் பிரிவினைவாதத்தைப் பயங்கரவாதத்துடன் சமப்படுத்துவதில்லை என்பதே உண்மை.

சில நாடுகளில் அவற்றின் அரசியல் சட்டங்கள் பிரிவினைவாதத்தைத் தடை செய்கின்றன, ஆனால் எந்த ஒரு நாடும் பிரிவினைவாதத்தைப் பயங்கரவாதத்துடன் சமப்படுத்துவதில்லை என்பதே உண்மை. டேவிட் காமரன் அலெக்ஸ் சல்மாண்டை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கவில்லை, அதிபர் ரஜாய் கூட ஆர்தர் மாசை ஒரு பயங்கரவாதியாகக் குறிப்பிடவில்லை. சிங்களத் தலைமையிடம்; அத்தகைய ஒரு அரசியல் கண்ணியத்தையோ, நியாய உணர்வையோ, சட்டத தெளிவையோ நாம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் இவ்விதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் தீர்மானத்தை இந்த அளவுக்கு மோசமாகவும் முட்டாள்தனமாகவும் இழிவுபடுத்துவதைச் சர்வதேச சமூகம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை உயர்த்திப்பிடிப்பதற்கு அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய ஆட்சி வேண்டுமென்றே சர்வதேச சட்டச் செயல்முறையை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. இதைக் கண்டிக்குமாறு நாம் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகிறோம்.

சிறீலங்காவும் இணைந்து ஆதரித்துள்ள பொறுப்புடைமை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி தனக்குள்ள கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா எதையுமே செய்யாத அதேநேரத்தில், அது சர்வதேசச் சட்டச் செயல்முறையைத் திசைதிருப்புவதற்கான ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதை எதிர்பார்த்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் உள்ள நாம் ஒரு கண்காணிப்பு மற்றும் பொறுப்புடைமைக் குழுவை நியமித்துள்ளோம். அதில் ஐக்கிய நாடுகள் ஆதரவுடன் அமைக்கப்பட்ட சர்வதேச மற்றும் கலப்புத் தீர்ப்பாயங்களில் பங்கேற்றுள்ள மிகவும் ஆழமான அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

தற்போது உள்ள தமிழர் அமைப்புகளில் ஒன்று கூட தமிழர்களின் அரசியல் விருப்பங்களை மெய்யாக்குவதற்கு வன்முறையை ஒரு வழியாகப் பேசுவதில்லை என்பதையும் இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தனது அரசியல் குறிக்கோளை அமைதியான வழிகளில் மெய்யாக்க வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது. சிறீலங்கா அரசாங்கம் வன்முறையைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது, தமிழர் தாயகத்தின் மீதான அதன் அடக்குமுறைச் சிங்கள இராணுவமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கான ஒரு தந்திரமே அன்றி வேறல்ல.

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments