Latest News

December 26, 2015

தமிழரின் ஜல்லிக்கட்டும், மேலைத்தேயங்களின் யுத்தங்களும்..!! ஈழத்து துரோணர்..!!
by admin - 0

தமிழரின் ஜல்லிக்கட்டும்,
மேலைத்தேயங்களின் யுத்தங்களும்..!!
 
ஈழத்து துரோணர்..!!!
  
அன்பு நண்பர்களே.! இந்த தலைப்பை பார்க்கும் போது, "மொட்டைத் தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்றேன்" எனத்தோன்றும்.! 

ஆனால்,  இந்த இரண்டிற்க்கும் சம்பந்தம் இருக்கின்றது. இந்த உலகம் இரண்டு உலகப்போர்களை சந்தித்து விட்டது. ஆனபோதும் மூன்றாவது உலகப்போருக்கான ஆரம்பத்தில் மனிதகுலம் இருப்பதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

மனித வளர்ச்சியை உன்னிப்பாக அவதானித்தால் இதை யாரும் மறுக்க முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் தோன்றினாலும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தான் நவீன ஆயுதங்களின் தோற்றத்திற்கான ஆண்டுகளாகும். 

அந்த போரின் போது விமானங்கள், யுத்த தாங்கிகள்,  நவீன இயந்திரத்துப்பாக்கிகள், நவீன நீர்மூழ்கி கப்பல்கள், ராடர்கள், சோனார்கள், நவீன ஏவுகணைகளின் (V-2) என கூறிக்கொண்டே போகலாம். இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த போது முன்னேற்றம் குறைந்த ஆயுத வளங்களுடன் தான் ஆரம்பித்தது. 

ஆனால், அந்த போர் முடியும் போது, ஒட்டு மொத்த மனிதகுலமே தங்கள் வளங்களையும், மனித அறிவையும் கொண்டு அதி நவீன ஆயுதங்களை உருவாக்கி இருந்தது. அதுவே இன்றைய நவீன உலகு. இன்றைய உலகு நொடிக்கு, நொடி வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.   

அந்த போரின் முடிவைத் தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையில், முதலாளித்துவ அரசுகள் ஒரு அணியிலும், ரஷ்சியாவின் தலைமையில் சோஷலிச அரசுகள் ஒரு அணியிலும் பிரிந்து நின்றன. இருவரும் ஒருவரை ஒருவர் அழிக்கும் முயற்சியில் எப்போதும் குறியாய் இருந்தன. 

அதற்கு இரண்டு உதாரணங்களே போதும் என்று நினைக்கின்றேன். அமெரிக்காவின், வியட்கொங் போராளிகளுக்கு எதிரான யுத்தத்தில், அமெரிக்காவிற்கு எதிராக, வியட்நாமிற்கு, ரஷ்சியா (பழைய சோவியத் யூனியன்) இராணுவ உதவிகளை செய்தது. 

அதேபோல ரஷ்சியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான யுத்தத்தில் அமெரிக்கா, ஆப்கானுக்கு உதவியது. இன்று ஆப்கானுக்கு அமெரிக்கா தாக்குவதுதில் உள்ள தந்திரத்தை பார்ப்போம்.

ரஷ்சியாவும், அமெரிக்காவும் ஆயுத தொழில்நுட்பத்தில் போட்டி போட்டுக் கொண்டிருந்த போதுதான், சோவியத் யூனியன் சிதைந்து போனது.  ரஷ்சியாவின் பிளவிற்கு பின்னர், அமெரிக்கா போட்டி இல்லாது தனிக்காட்டு ராஜாவாக உருவெடுத்து, இன்று சர்வதேச போலீஸ்காரன் போல நடந்து கொண்டிருக்கின்றது. 

1990களில் அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை கொண்டிருந்த போதும், அதன் பாவனைத்திறனை கணிப்பிட முடியாமல் இருந்தது. அந்த நேரத்தில் தான் 1991ம் ஆண்டு ஈராக் அதிபர் சாதம் ஹுசைன், குவைத் நாட்டின் மேல் படையெடுத்தார்.

இதை சாதகமாக கருதிய அமெரிக்கா, குவைத்துக்கு உதவப்போவதாகக் கூறிக்கொண்டு, அன்று தன்னிடம் இருந்த அனைத்து தொழில்நுட்பங்கள், மற்றும் ஆயுதங்களை ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் பரிசோதித்திருந்தது. அதில், பல ஆயுதங்கள் சோதனையில் வெற்றி அளித்திருந்த போதும், அவர்கள் நம்பிய பல ஆயுதங்கள் கையை விரித்திருந்தன. 

இன்று கணணிமயப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களின் கையிருப்பே, எல்லா நாடுகளும் கொண்டுள்ளன. இன்று அமெரிக்க அரசின் பென்டகனின் இராணுவ வல்லுனர்கள் ஒரு உண்மையை நம்புகின்றனர். 

அதாவது, சோதனையில் வெற்றி அளித்த ஆயுதங்கள் சண்டைகளில் சோதிக்கப் படவேண்டும் என்பதே அது. அடுத்ததாக மிக முக்கியமானது அந்த ஆயுதங்களை கொண்டு போராடும் இராணுவ வீரர்களின் போர் புரியும் உளவுரன் மேம்பட்டிருத்தல் மிக  மிக அவசியமாகும். 

இதை உணர்ந்த பின்னர் தான் ஆயுத சோதனைக்காகவும், இராணுவவீரர்களின் உளவுரணை மேம்படுத்துவதற்காக்கவுமே அரபுநாடுகளின் மேல் இல்லாத பொய்களைக்கூறி யுத்தங்களை நடத்தி இருந்தது/நடத்திக்கொண்டிருக்கின்றது. வெளியில் பல காரணங்களைக் கூறினாலும், பிரதானமானது இது தான்.  அதற்கு சிறந்த உதாரணம் ஈராக் தான். 

அதன் மீது இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கூறியே சண்டையை ஆரம்பித்தது. சண்டையின் முடிவில் அந்த நாடையே சுடுகாடாக மாற்றி பல இலட்சம் மக்களை கொன்றபின் "தாங்கள் தேடிவந்த ஆயுதம் இல்லை எனக்கூறப் பட்டது". இது CIA வின் புலனாய்வு சறுக்கள் என்று கூறப்பட்டது. 

ஆனால், அது உண்மையல்ல, அங்கு அப்படியொரு ஆயுதம் இல்லை என CIA வுக்கு நன்கு தெரியும். உண்மையில் வெளித்தெரியாது, அமெரிக்கா தனது எல்லாப் படைப்பிரிவுகளுக்கும் யுத்த உளவுரணை இன்று  வரை மேன்படுத்திக் கொண்டிருக்கின்றது. 

இதில் கடையாக இணைந்தது தான் ரஷ்சியா, உக்றேனுடனான யுத்தத்தில் சிறு மென்மையை கடைப்பிடித்த போதும், இன்று ISIS எதிராகவும், சிரியாவின் அதிபர் அசாத்திற்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களை அழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சண்டையில் குதித்துள்ளது. 

விமானம், நீர்மூழ்கியில் இருந்து குருஸ் ஏவுகணைத் தாக்குதல் இப்படி தனது உச்ச இராணுவ திறனை இன்று ரஷ்சியா சோதிக்கின்றது.  ரஷ்சியாவின் நோக்கமும், அமெரிக்காவின் நோக்கமும் ஒன்று தான். ஆனால், அவர்கள் காட்டும் முகம் தான் வேறு, வேறு. 

ஆக, இராணுவ வீரர்கள் எப்போதும் துணிவுடன் இருக்க சண்டைகள் (வீர விளையாட்டு) தேவை. 

சரி, இதில் எங்கிருந்து ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவது வந்தது? அதற்கு நாம் சில ஆயிரம் வருடங்கள் பின்நோக்கி போகவேண்டும். அன்றைய காலங்களில் எம் முன்னோர்கள் பல ஆயிரம் படைகளை கட்டியமைத்து சண்டைகளை வழிநடத்தி நாடுகளை பிடித்தனர்.

ஆனால், அதன் பின் வருடக்கணக்கில் அந்த வீரர்களின் போர், ஓய்வில் இருக்கும் போது அவர்களின் போர் ஓர்மம் படிப்படியாக குறையும்.  இதனை நான் புலிகளமைப்பில் சண்டைகளில் இருந்து, நீண்ட காலம் ஒதுங்கி இருந்த போராளிகள் மீண்டும் சண்டைக்கு போகும் போதும் தடுமாற்றம் ஏற்படுவதை அவதானித்துள்ளேன். 

இது தான் மனித நியதி. அதற்கு மாற்று ஈடாகத் தான் எமது முன்னோர்கள் இப்படியான வீர விளையாட்டுகளை அறிமுகப் படித்தி,காலம் காலமாக நடத்திக் கொண்டிருந்தனர். இதுவே தமிழரின் வீரத்தின் எஞ்சிய பக்கமாக இன்று இருக்கின்றது. 

இன்று வல்லரசுகள் செய்யும் உளவுரன் மேம்படுத்தலை, எமது முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே கண்டறிந்து, அதற்கான தீர்வையும் காட்டி உள்ளனர். மனித உயிர்களை கொன்று உளவுரன் மேம்படுத்துவதை காட்டிலும், காளையை அடக்கி உளவுரனை அதிகரிப்பது மிருகவதையா??

 அதை தான் இன்று இந்திய அரசு மிருக வதைச் சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. அதில் அந்த மாடு தான் மனிதனை வதைக்கின்றது. :) இன்று மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடு இந்தியா. 
மாட்டை கொல்லாது எப்படி அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்யமுடியும்.?

 தமிழ் தோன்றி, பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து தோன்றிய இனமெல்லாம் பல நாடுகளை கொண்டிருந்த போதும், நமக்கென்று ஏன் ஒரு நாடு உருவாக்க முடியவில்லை? ஆக, மிருக வதை காரணமல்ல.! என்ன காரணம் என்பதை உங்களது அறிவுக்கே விட்டு விடுகின்றேன்.!
விரக்த்தியுடன் துரோணர்...!!!
« PREV
NEXT »

No comments