இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் போன்று இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் தற்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அரசில் இருந்து வெளியேறி ஜனாதிபதி வேட்பாளராக களத்தில் இறங்கினார்.
ஆனால் தற்பொழுது அவரது ஆட்சி ஓராண்டை எட்டியுள்ள நிலையில், அவரும் முன்னைய ஜனாதிபதியைப் பின்பற்றி செயற்படுவதாக பல்வேறு மட்டத்திலும் கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன அரசாங்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகின்றார். ஜனாதிபதி பங்கெடுக்க வேண்டிய நிகழ்ச்சிகள் பலவற்றில் அவர் விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார்.
இது தொடர்பாக ஏற்கனவே பல தடவைகள் கொழும்பு அரசியலில் அதிர்வலைகள் எழுந்து கொண்டிருந்த நிலையில்,
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நிகழ்ச்சி ஒன்றுக்கு சத்துரிக்கா சிறிசேன பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு படையினருக்கான 202 வீடுகள் மற்றும் அவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விலேயே ஜனாதிபதியின் மகள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். இந்நிலையில், இதனை அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், மற்றும் மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பாளர்கள் தற்பொழுது ஜனாதிபதியை சாடிவருகின்றார்.
குறிப்பாக, இராணுவத்தினரை கௌரவிக்கும் அல்லது பாதுகாப்புத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அமைச்சராக விளங்கும் ஜனாதிபதியே கலந்து கொள்ள வேண்டும். அல்லது படைத்துறையைச் சார்ந்த தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி என்று படைத்துறையினர் பங்கெடுக்கலாம்.
ஆனால் எதிலுமே சம்பந்தமில்லாத ஜனாதிபதியின் மகள் இதில் கலந்து கொள்வது ஏற்புடையது அல்ல என்றும். இது முன்னைய ஜனாதிபதியின் செயற்பாட்டை ஒத்தது என்றும் விமர்சனங்கள் மேல் எழுந்துள்ளன.
இது தவிர, சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள விமர்சனத்தில் பல்வேறு எதிர்க் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதில், மைத்திரியின் இந்த நடவடிக்கை குடும்ப அரசியலை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
குடும்ப உறவினர்களுக்கு அரசாங்கத்தில் முக்கியத்துவம் தருவது சம காலமாக அதிகரித்து வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ளார்.
அவர் தனது மருமகனை பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பாளராக நியமித்தார். தற்போது தனது மகளையே பாதுகாப்பு அமைச்சத்தின் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார்.
இந்த கௌவரத்தை பெறக் கூடிய பலர் பாதுகாப்பு அமைச்சில் உள்ளனர். எனினும் அவர்களுக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்ற கருத்து எழுந்துள்ளது.
இதேவேளை, குடும்ப அரசியலின் ராணியாக சத்துரிக்கா சிறிசேன வலம் வருகிறார் என இன்னொரு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ கூட இரண்டு ஆண்டுகள் கழித்துதான் தனது மகன்களை அரசியல் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்.
ஆனால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்ற 18 நாட்களிலேயே தனது சகோதரரை ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் தலைவராக நியமித்துள்ளார்.
தவிரவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் மாநாட்டுக்குச் செல்லும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மகனை கூடவே அழைத்துச் சென்று இருந்தார்.
இந்நிலையில் மெல்ல மெல்ல அரசியல் களத்திற்குள் தனது குடும்பத்தினரை மைத்திரிபால சிறிசேன அழைத்து வருகின்றார். இது நாட்டிற்கு நல்ல விடையம் அல்ல என்றும் சாடப்பட்டுள்ளது.
No comments
Post a Comment