Latest News

December 28, 2015

இலங்கை இராணுவத்தினருக்குள் பனிப்போர்!
by Unknown - 0

இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளுக்கு இடையில் அதிகாரப் போட்டியில் பனிப்போர் மூண்டுள்ளதாக இராணுவத்தினரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், அவர் வகித்த பதவியானது வெற்றிடமாகவே இருக்கின்றது. அதனைப் பிடிப்பதற்கு இராணுவ அதிகாரிகளிடையே அதிக போட்டி ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இடையில் முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளன.

இதில், மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் முன்னணியில் இருக்கிறார். ஏற்கனவே இராணுவத் தலைமை அதிகாரி நியமனங்களின் போது, இரண்டு தடவைகள் இவர் ஓரம்கட்டப்பட்டிருந்தார்.

முன்னதாக இவரைப் புறந்தள்ளிவிட்டே, மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஆகியோர், முன்னர் இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது நினைவுபடுத்தத்தக்கது.

25 இராணுவ அதிகாரிகள் ஓய்வு

தற்போது இலங்கை இராணுவத்தில் உள்ள 46 மேஜர் ஜெனரல்களில், 24 பேர், அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ளனர்.

அதேவேளை இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் நாள் ஓய்வு பெறவுள்ளார்.

இதேவேளை மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் சமகாலத்தவர்களான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோர், 55 வயதை எட்டும் நிலையில் ஓய்வு பெறவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் 55 வயதுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல்களுக்கு சேவை நீடிப்பு வழங்குவதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

இதுவொரு புறமிருக்க, கவசப்படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், அடுத்த ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் நாள் ஓய்வு பெறவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் பதவிக்கும் போட்டி நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கான போட்டியில் காலாற்படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவும், பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சன்ன குணதிலகவும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் மைத்துனர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments