Latest News

December 28, 2015

தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம்!
by Unknown - 0

தமிழ் மக்கள் பேரவை மீது அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அந்த அமைப்பின் இணைத்தலைவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கம் என்றும் ஓர் அரசியல் கட்சியாக இயங்குவதற்கோ அல்லது தேர்தல்களில் போட்டியிடுவதற்கோ அதற்கு எண்ணமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வு ஞாயிறன்று யாழ் பொது நூலக மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் பேரவையின் முதலாவது கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைவாக ஓர் அரசியல் தீர்வு காண்பதற்குரிய வரைபைத் தயார் செய்வதற்காக 15 பேர் கொண்ட உபகுழுவொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

கூட்டம் நடைபெற்றதன் பின்னர் செய்தியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது கடந்த கூட்டத்திலே செய்தியாளர்களுக்கு உரிய தகவல்கள் வழங்காமைக்காக அமைப்பாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் பேரவை தொடர்பாகவும், அதனுடைய செயற்பாடுகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்பதற்கு போதிய அவகாசத்தை வழங்கி, அவற்றுக்குரிய விளக்கமும் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கொடுக்கப்பட்டது.

அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள உபகுழு குறித்து விளக்கமளித்த பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராகிய டாக்டர் பி.லக்ஸ்மன், கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

அதேவேளை, இந்த உபகுழுவுக்கு துறைசார்ந்த ஆலோசனைகள வழங்குவதற்காக துறைசார் நிபுணர்களைக் கொண்ட ஆலோசனை குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளதாக லக்ஸ்மன் தெரிவித்தார்.

அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் அபிலாகள், கருத்துக்கள் அடங்கிய தீர்வுத் திட்ட ஆலோசனைகள் , புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுவதற்காக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று இணைத்தலைவர்களில் மற்றுமொருவராகிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
« PREV
NEXT »

No comments