Latest News

December 30, 2015

அவதூறான செய்திகளை நீக்க கப்பம் கோருகின்றனர்: துவாரகேஸ்வரன்
by admin - 0

தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் சார்ந்து அவதூறான செய்திகளை சில இணையதளங்கள் வெளியிட்டுவிட்டு, அவற்றை அந்த பக்கங்களில் இருந்து நீக்குவதற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து கப்பம் கோரும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'சில இணையதளங்களில், மாணவிகள், யுவதிகள், வர்த்தகர்கள் மற்றும் சில அமைப்புக்கள் தொடர்பில் அவதூறான செய்திகள் வெளியிடப்படுகின்றன. 

அவ்வாறு அவதூறான செய்திகள் தனிப்பட்ட பகை மற்றும் பணம் பறிக்கும் நோக்கில் வெளியிடப்படுகின்றன. அவ்வாறு வெளியிடப்படும் செய்திகளை நீக்குமாறு கோரும் போது, அதற்கு அவர்கள் கப்பம் கேட்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. என்னைப் பற்றி அவதூறாக எழுதிய இணையதளமும் இவ்வாறு கப்பம் கோரியுள்ளது' என்றார். 'இவ்வாறான செய்திகளை வெளியிடும் இரண்டு நபர்கள் உள்ளனர். இருவரும் வேறு குற்றங்கள் தொடர்பில் பிணையில் வெளியில் வந்து, சட்டத்தின் பிடியில் இருக்கின்றனர். 

மூன்றாவது ஒரு நபர் உள்ளார். அவர் செய்திகளை நீக்குவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேரம்பேசலில் ஈடுபடுவார். இவர்கள் இராணுவ ஒத்துழைப்புடன் இயங்குகின்றனர் என்ற சந்தேகமுள்ளது' என்றார். 'இந்த இணையத்தளங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்வரும் 4ஆம் திகதி முடிவொன்றை வெளியிடவுள்ளனர். அந்த முடிவின் பிரகாரம் இவ்வாறான இணையத்தளங்கள் தடை செய்யப்படும்' என்றார்.

tamilmirror
« PREV
NEXT »

No comments